இப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் வந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் ரெண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அந்த நிகழ்ச்சியே கலகலப்பான ஒன்று தான். ஆனா அப்படிப்பட்ட கலகலப்பானவர்களை உம்மனா மூஞ்சி ஆக்க முயலும் ஒரு சுற்று இருக்கு. செமைய்யா காமெடி நடந்திட்டிருக்கும். போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடாது. மூன்று போட்டியாளர்களுமே சிரிப்பை அடக்கி வைத்திருப்பது தான் காமெடியின் உச்சம்.
வாழ்க்கையில் இந்த வித்தையினை கற்று வைத்திருப்பவர்கள் சகட்டு மேனிக்கு வெற்றி பெறுவதை பாத்திருக்கலாம். சிரிக்கக் கூடாத நேரத்தில் சிரித்துத் தொலைப்பதை தவிர்ப்பதும்… சிரிக்க வேண்டிய நேரத்தில் கம்முண்ணு கெடக்கிற வித்தையும் எத்தனை பேருக்கு வரும்? இன்னொரு மேட்டரும் இருக்கே!! பெரும்பாலான ஆபீஸ் பார்ட்டிகளில் அதைப் பார்க்கலாம். பெரிய்ய ஆபீசர் சொல்லும் மொக்கை ஜோக்கை எல்லாரும் ரசித்துச் சிரிப்பார்கள். நல்ல ஜோக்கை அந்த அதிகாரி ரசிக்காவிட்டால் யார் முகத்திலும் சிரிப்பா..??? .மூச்.. சான்ஸே இல்லெ…
புத்தகத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (என்னமோ இது வரை எழுதினதெல்லாம் சொந்தச் சரக்கா என்ன??) சிரிப்பிற்குப் பின்னர் எழுந்த கதை தான் ராமாயணமும் மகாபாரதமும். சிரிக்கக் கூடாத நேரத்தில் திரௌபதி சிரித்ததன் விளைவு தான் பாரதம். சிரிக்க வேண்டிய நேரத்தில் கூனி சிரிக்காமல் விட்டதால் நிமிர்ந்தது தான் இராமாயணம். சிரிப்பை… சிரிக்க வேண்டியதை.. சிரிக்கக் கூடாததை சரியாக மேனேஜ் செய்வதை, அந்த விஜய் டிவி வளர்ப்பதாய் எனக்குப் படுகிறது.
அதில் வரும் இன்னொரு segment ஒரிஜினல் அக்மார்க் ஆளை, ரெண்டு டூப்ளிகேட் ஆட்களிடமிருந்து தேடிக் கண்டுபிடிப்பது. வாழ்க்கைக்கும் இந்த மாதிரி தேவைதான் என்று படுகிறது. அதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒரிஜினல் நபரை விட டூப்ளிகேட் அசத்தும் நடிப்பு.
அரசுத்துறைகளில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வக்காலத்து வாங்க ஒருவரை அழைத்து வர அனுமதி கிடைக்கும். அவரை Defence Assistance என்பார்கள். அதே போல் அரசு சார்பாகவும் ஒருவர் வாதிடுவார். அந்த இருவரில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் அந்த Defence Assistance தான். அரசு சார்பில் வாதிடுபவர் தோற்றால் அவருக்கு ஏதும் நஷ்டமில்லை. ஆனால் Defence Assistance வாதத்தில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கும் வழியே உள்ளது.
அந்த டிவி நிகழ்வும் இதைத்தான் செம்மையாய் செய்கிறது. ஒரிஜினல் அலுங்காமெ குலுங்காமெ இருக்க.., டூப்ளிகேட்கள் வெற்றி பெற நடிப்பில் அசத்தும் ஜாலியான நிகழ்ச்சி அது. வைரமுத்துவின் கவிதை தான் ஞாபகத்துக்கு வருது.
உண்மை எப்போதும்
புல்லாங்குழல் வாசித்தே
வழக்கம்.
பொய்க்கு எப்போதும்
முரசடிப்பதே பழக்கம்.
இராமாயணத்தில் ஒரு காட்சி..(எப்போவும் இராமயணம் கடைசியிலெ தானே வரும். இதில் முதல் இடை எல்லா பக்கமும் ராமாயணம் வருதே என்று கேக்க வேணாம். இது ஒரு இடைச் சொருகல்) ராமன் இலக்குவனோடு இரவு ஹெவியா சாப்பிட்டு நைட் வாக் போறாங்க.. வழியில் கூத்து ஒண்ணு நடந்திட்டிருக்கு. கூத்து ஏதாவது நடந்தா எட்டிப் பாக்கும் நல்ல பழக்கம் அப்பொவும் இருந்திருக்கு. பாத்தா… அங்கும் ராமாயணம் தான் (அங்கேயுமா???). சீதையைக் காணோம் என்று நடிப்பு ராமன் புலம்புகிறார்.. புலம்புகிறார்.. அம்புட்டு புலம்பு புலம்புகிறார்.
ராமன் இலகுவனைப் பாத்து கேக்கிறார்.. “ஏண்டா தம்பி… நான் கூட இப்படி புலம்பலையேடா???” இலக்குவன் பதில்: உங்களுக்கு கைதட்டல் அவசியமில்லை. இந்த வேட ரமனுக்கு கைதட்டல் அவசியம்.. அதான்.
அடுத்தவனின் கவனம் நம் மீது விழுவதற்கு நாம் செய்யும் சேட்டைகள் தான் எத்தை எத்தனை??. அது தவறிவிடும் போது நாம் சோகத்தில் மூழ்கி விடுகிறோம். இது அது எது சொல்லித்தரும் அடுத்த தத்துவம் இது.
“இதுவா அதுவா எது?” என்ற போது என் மனதில் உதித்த இன்னொரு செய்தி Deccisson Making அதாவது முடிவெடுக்கும் திறன். இதுவா? என்று சொஞ்சம் யோசிக்கலாம். அதுவா? என்று சற்றே பாக்கலாம். ஆனால் எது? என்ற முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். இதற்காக Strength weakness Opportunities and Threat எல்லாம் பாக்கணும் என்று நீட்டி முழக்கி சொல்லித் தரப்படுகிறது. சுருக்கமா SWOT என்றும் சொல்வார்கள்.
இப்பொ ராமாயணத்துக்கு வரலாம் (மறுமடியுமா???). ராமாயணக் கதாநாயகன் ராமராய் இருந்தாலும் கூட Management வல்லுநர்கள் பார்வையில் (யார் அந்த வல்லுநர்கள் என்று கேட்டுராதீங்க..) Leadership Qualities உள்ள நபர் அனுமன் தான். ராமனை பாத்த மாத்திரத்தில் அடையாளம் கண்டது தொடங்கி வாலியை பின்னல் இருந்து வதம் செய்தது வரை, பின்னால் இருந்து செயலாற்றியவர் அனுமர். (அனுமன், அனுமர் ஆனதை கவனிக்கவும்). அவ்வளவு செஞ்ச்சிட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி தணுஷ் மாதிரி மூஞ்சியை வச்சிக்கும் Quality வேறு யாருக்கு வரும்?
முடிவெடுக்கும் திறத்திலும் தீரர் அவர். அவருக்கு மனதிலேயே அத்தனை SWOT சேதிகளும் அத்துப்படி. இங்கே அவருக்கு வந்திருக்கும் பிரச்சினைக்கு அவர் எப்படி முடிவு எடுக்கிறார் என்று பாக்கலாமா??
கைதி போன்ற சூழலில் தூது போன இடம் அது. சேதி சொல்ல வந்தவன் இராவணனை கொல்ல தேதி குறிக்கும் இடம் தான் அது. என்னைக் கொல்வது இந்த ராசாவால் ஆவாது (Strength). அதே மாதிரி அந்த ராஜாவை நம்மளாலெயும் ஒண்ணும் செய்ய முடியாது. (Weakness). அப்படியே நாம் சண்டெ போட்டாலும், ரெண்டு பேரும் போட்ற சண்டை அந்த ராமாயணம் மாதிரி நீண்டுகிட்டே இருக்கும். (Threat). அந்த மாதிரியான ஒரு சண்டெ தேவையா நமக்கு.. அதுக்கு சரியான வேளை வரும் வரைக்கும் காத்திருக்கணுமா?.. (Opportunities) ஆமா.. அது தான் முடிவு என்று முடிவு செய்கிறார்.
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான்
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ
இனி மேல் அது இது எது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் பாருங்கள்.. (இது விஜய் டிவிக்கான விளம்பரம் அல்ல)