இன்றைய சூழலில் அகநானூறு


[சிட்னி (ஆஸ்திரேலியா) சங்கத்தமிழ் மாநாடு 2014 மலரில் வெளியான எனது கட்டுரை இது… சும்மா எத்தனை நாள் தான் கலாய்ச்சியே எழுதுவீங்க? ஏதாவது நல்ல தமிழிலும் எழுதப்படாதா? என்று என் மீது (ரொம்ப அதிகமாகவே) நம்பிக்கை வைத்து கேட்ட ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்களுக்கு நன்றி…நானும் நல்ல தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன்…இதோ உங்கள் பார்வைக்கு…]

Capture 3

சங்கத் தமிழ் என்ற தேடலுக்குள் செல்லாமல், சமீப காலத்திய காப்பியமான கம்பராமாயணத்தை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கும் வேலையினை செய்து கொண்டிருந்தேன். சிட்னியின் சங்கத்தமிழ் மாநாட்டை ஒட்டி, சங்கத் தமிழின் பக்கம் ஒரு கழுகுப் பார்வை பார்த்திட வாய்ப்பு வாய்த்தது. அகநானூறு பாடல்களை வைத்து கட்டுரை வடிக்க எண்ணம். (அந்தமான் தீவில், கைக்கு எட்டிய நூல் என்ற காரணம் தவிர வேறு ஏதும் யாமறியேன்). காலத்தை மிஞ்சி நிற்கும் கவிகளின் தொகுப்பாம், சங்கத்தமிழ் வகைப்படுத்தித் தந்த அகநானுறுப் பாடலகளை இன்றைய சூழலுக்கும் பொருத்திப் பார்க்கும் முயல்வு தான் இக்கட்டுரை. என்றோ, யாரோ எழுதி வைத்த பாடல்கள் இன்றைய நவீன கணிய உலகில் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி, இயற்கையாகவே எழும். அகநானூறு பாடல்களின் உள்ளே எங்கும் புகாமல், அவைகள் தொகுக்கப் பெற்ற முறையினைப் பார்க்கும் போதே, இன்றைய நவீன யுகத்திற்கு தொடர்பு உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

images 1

அறிவியல் வளர்ச்சியினைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தாவரங்கள், விலங்கினங்கள், கணிமங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதின் மூலம் அதன் தொடர்பினையும் தெரிந்து கொள்ள ஏதுவாய் தொகுப்பு செய்யும் பணி நடைபெறும். இப்படி முயன்றதின் மூலமாகத்தான் அறிவியல் நமக்கு அதிகமாய், பெயரிடல் முறையும் பட்டியலிடும் கலையுமாய் தந்துள்ளது இவ்வுலகிற்கு. இத்தகைய தொகுப்பின் மூலமாய்த்தான் விலங்குகலுக்கு பெயரிடுவதும், தாவரங்களுக்கு அறிவியல் பெயர் சூட்டலும் நடைபெறுகின்றது. வேதியியல் பயன்பாட்டில் இருக்கும் கணிம அட்டவணையும் இந்த தொகுக்கும் அறிவியலில் அடங்கும். இவை எல்லாம் இக்கால அறிவியல் முன்னேற்றம் என்று நினைப்போம். இதற்க்கு சற்றும் முறைவான தரம் என்று சொல்ல இயலாதவாறு அகநானூறு பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன சங்க காலத்திலேயே என்பது வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

பெயருக்கு ஏற்றபடியே, அகம் தொடர்பாய் மொத்தம் நானூறு பாடல்கள்.. (நானூறு பாடல்களின் தொகுப்பு என்பதாலேயே அதன் பெயரும் இப்படி) அந்த பாடல்கள் எல்லாமுமே ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன. பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்ட சேதி தான் நாம் அனைவரும் அறிந்த்து தானே? எல்லாப் பாடல்களிலும் ஏதோ ஒரு நிலம் நிச்சயமாய் சம்பந்தப் பட்டு தானே இருக்கும்? அந்த்த் தொடர்பினை வைத்து பாடல்களின் தொகுப்பு நிகழ்ந்துள்ளது. கணிய அறிவியலில் உயிர்நாடியான ஒழுகுபடம் (ஃப்ளோ சார்ட்) மூலம் இதனை நாம் உற்று நோக்கலாம்.

Capture 2

சங்ககாலத் தமிழனின் அறிவியல் பூர்வமான சிந்தனை வடிவாக்கத்தில் அகநானூறுப் பா பாடல்கள் தொகுத்துள்ளனர் என்கின்ற உண்மையினை இந்தச் சிட்னி சங்கத்தமிழ் மாநாட்டில் பதிவு செய்திட விழைகின்றேன். இதோ இதற்கு சான்று சொல்லும் சங்க காலத்துப் பாடல்:

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

anbu jeya

இனி சற்றே ஓரிரு பாடலை உள் நோக்கி, படித்து இன்புற அகத்தின் உள் செல்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் தீவுகளாம் அந்தமான் நெய்தல் நிலத்தினின்று பல வருடங்கள் வாழ்ந்து வரும் காரணத்தால் நெய்தல் நிலப் பாடல்கள் சில்வற்றை நோக்குங்கால், அன்றைய தமிழரின் அறிவியல் பார்வையும் உடன் தெரிய வந்தது. கடல் மட்டம் ஏறி இறங்கும் இயற்கை நியதியினை அன்றே தெரிந்து சொன்ன, அகப்பாடல் வரிகள் சொல்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையினை தோழி விவரிக்கும் போது,கடலின் இயற்கையான சூழலான அலைகளோ, ஏறி இறங்கும் ஓத மாற்றங்களோ (டைட்) இல்லாமல் இருந்தன என்பதை சேந்தன் கண்ணனார் “ எறிதிரை ஓதம் தரல் ஆனதே” என்று குறிப்பிடுகின்றார். [பாடல் எண் – 250; நெய்தல் நிலப்பாடல் என்று சொல்லவும் வேண்டுமோ?]

நக்கீரணார் பாடிய இன்னொரு பாடலின் மூலம் வடநாட்டவருடன் வியாபாரத் தொடர்புகள் இருந்த செய்தியும் தெரியவருகின்றது. அப்போதே பிடித்த மீனுக்கு பண்டமாற்றாய் கிடைத்த வெண்ணெய் என்ற செய்தியும் கூடவே வருகின்றது. அந்த நெல்லின் மாவினைத் தயிரிட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை தந்ததாய் தகவல் சொல்கின்றது. அப்படியே மணம் பொருந்திய சாந்து உண்டாக்கும் வித்தை சொல்ல வந்த நக்கீரணாரோ, வடநாட்டினரிடமிருந்து வாங்கிய வட்டக்கல்லிலே அரைத்த சேதியும் சொல்கின்றது.

“….வடவர் தந்த வான் கேழ் வட்டம்; குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய; வண்டிமிர் நற்சாந்து அணிகுவம்- திண்திமில்…” இப்படிச் செல்கின்றது அந்த அகநானூற்றுப் பாடல், அகநானூற்றுப் பாடல்கள் இன்றைய சூழலில் ஏற்றவையாக, அறிவியல் மற்றும் வரலாற்றுக் கோப்புகளின் பெட்டகமாய் விளங்குகின்றது என்பது தான் இக்கட்டுரை மூலம் சொல்லவந்த கருத்து.

முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி ஒரு பழைய பாடல் வந்தபோது ஏனோ அதில் அவ்வளவு கவனம் போகவில்லை.
ஆனால் அதே சேதி பின்னாளில் ஒரு புதுக் கவிதையாக வந்த போது இதயத்தைத் தைத்துவிட்டது.

என் என் தலைமுடி
கலைந்திருக்கிறது..
எங்கே காட்டு
உன் கன்னத்தை!!!

இப்படி படித்த போது தான் அட.. கன்னம் ஒரு கண்ணாடியோ என்று மண்டையில் உரைக்கிறது.

முகத்தில் முகம் பார்க்கும் சங்கதி இருக்கட்டும்… முகம் பார்த்து ஆளை எடை போட முடியுமா?? ஒரு காலத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் இப்பொவெல்லாம் அந்தக் கதை நடக்காது. ஏனென்றால் தமிழ் சினிமா எப்படி நடந்தால் எப்படி ரியாக்சன் தர வேண்டும் என்பதை விலாவாரியாக கோணார் நோட்ஸ் சொல்வது போல் கிளாஸ் எடுக்கிறது.

பெரிய விஷயத்தைச் சொல்லி முடித்தவுடன் இந்த மேட்டருக்கு முகத்திலெ காட்டுர ரியாக்சன் இவ்வளவு தானா? என்பதும்.. ஒரு ரியாக்சனும் இல்லையே என்பதும் அடிக்கடி கேட்டு மகிழும் டயலாக்குகள்.

தாயை ஆத்தங்கரையில் பாத்தா மகளை வீட்டிலா போய் பாக்க வேண்டும் என்று கேட்டவர்களை இப்போது யாரும் பாத்துவிட முடியாது. அப்படி சிலர் இருந்தாலும் கூட அவர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?? இது மட்டும் உண்மையானால் நமக்கு எத்தனையோ காந்தி கிடைத்திருக்கனுமே?? கிடைக்கலையே??

உன் நண்பர்களைக் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்றார்கள். அப்படியே அதை நினைத்தபடி கோவில் பக்கம் போனா.. என் நண்பன் கடவுளிடம் முறையிடுகிறான் இப்படி…

ஆண்டவனே… நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாத்து.. என் எதிரிகளிடமிருந்து என்னை நானே பாத்துக் கொள்கிறேன்.. இது எப்படி இருக்கு?? (நண்பன்டா…)

அப்பொ வேறெ வழியே இல்லையா?? ஆட்களைப் புரிந்து கொள்ள??

Allen & Barbara Pease எழுதிய Body Language படிக்கலாம் என்றால் அதுக்கு 275 ரூபாய் செலவு செய்ய வேண்டும். 380 பக்கங்களுக்கு மேல் படிக்க வேண்டும். அப்படி படித்தாலும் மேல் நாட்டவரைத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும்? கழுவுற மீனில் நழுவும் மீனான நம்மாட்களை புரிந்து கொள்ள அநத யுத்தியும் உதவாது.. அப்பொ என்ன செய்யலாம்??

சமீபத்திய தகவல் தொழில் நுடப உலகில் இதுக்கு வழி கிடைக்குமா என்று யோசிப்பதில் என்ன தவறு இருக்கிறது??

இருங்க ஒரு நிமிஷம் போன் வருது… அப்புறம் வந்து தொடர்கிறேன். ஆமா.. இப்படி செஞ்சா என்ன?? எப்படி??

ஒரு மனுஷன் வச்சிருக்கும் போனில் இருக்கிற ரிங்க்டோன் வைச்சி ஆள் எப்படின்னு சொல்ல முயற்சிக்கலாமே?? இதோ ஒரு டிரையல்..

கௌசல்யா சுப்ரஜா (சுப்ரபாதம்) காயத்ரி மந்திரம் போன்றவை இருந்தால் அவர் பக்திமான் தான் (வெளி அர்த்தம்). உள் அர்த்தம் தான் நல்லவன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளும் குணம்.

குன்றத்திலே குமரணுக்கு கொண்டாட்டம்: ஆர்ப்பாட்டமான பக்தி.. கொஞ்சம் முரட்டுத்தனமும் இருக்கும்.

Why dis Kolaveri? : அடிக்கடி மாறுவார்கள்.. கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க்னும் இந்த மாதிரி ஆட்களிடம்.

அந்தந்த போன் வாங்கும் போது இருந்த அதே ரிங்க்டோன்: அதிகமாக அலட்டாத பார்ட்டிகள். கஞ்சத்தனமும் கூட அப்டேட் ஆகாத ஆட்களாகவும் இருப்பார்கள்..

முன்னி பத்னாமு ஹுஇ.. போன்ற ஆட்கள் ஜாலிப் பேர்வழிகள்.. அவர்களால் நமக்கு பாதிப்பு வராது… நாம் அவர்களை சீண்டாத வரை.

குழந்தை அழும் குரல்: வக்கிரமான புத்தியும் குழ்ந்தைத்தனமும் இருக்கும் ஆட்கள் என்றும் இவர்களை வகைப் படுத்தலாம்.

இப்படியே யோசிச்சிட்டே போகலாம்.. ஏன் நீங்களும் யோசிச்சி எழுதுங்களேன்..

இந்த ரிங்க்டோன் பல இடங்களில் தொல்லை தருவதுண்டு.. ஜாலியா சினிமா பாக்கப் போனா… பக்கத்தில் அசிங்கமான ரிங்க் டோன்… அப்புறம் தியேட்டரில் இருக்கிறோம் என்பதையே மறந்து தன் கூட்டாளியோ அல்லது மேனஜரையோ காட்டுத்தனமாய் திட்டுவதும் தியேட்டர் Dts மீறி ஒலிக்கும்..

அந்தமானில் ராஜ்பவனில் மீட்டிங்க் நடக்கும் முன்னர் மொபைல் போங்களை எடுத்துக் கொண்டு தான் உள்ளே விடுகின்றனர். நல்ல முன் உதாரணம். அனைவரும் கடைபிடிக்கலாம்.

சமீபத்தில் தில்லியில் ஒரு Workshop சென்ற போது எனக்கு ஒரு போன் வர பாடம் நடத்தியவர் தனக்கு எரிச்சல் வருவதாய் சொன்னார். ஆனால் அவரும் தனக்கு வரும் கால்களை எடுத்துப் பேசி வந்திருக்கும் 37 நபர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.

போன்களை Silent mode ல் வைப்பது என்பது ஒரு குறைந்தபட்சம் நாகரீகம் சம்பந்தப் பட்ட விஷயம்.

இப்படித்தான் அந்தக் காலத்தில் ஒரு சைலண்ட் மோட் பற்றிய ஒரு சேதி இருக்கு..

கம்பராமாயணம் தானே என்று கேட்பவர்களுக்கு என் பதில் “இல்லை” என்பது தான். ஆனால் பாதி உண்மை இருக்கு.. ராமாயணம் தொடர்பானது தான்.

தற்சமயம் புயலால் அடையாளம் தெரியாமல் இருக்கும் தனுஷ்கோடியில் ரகசிய ஆலோசனை நடக்கிறது.. இலங்கைக்குப் போய் இராவணனை அழிப்பது எப்படி என்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம். அப்போது இப்போதைய செல்போன் போல் தொல்லைகள் செய்தன ஆலமரத்தின் பறவைகள். (நாட்டாமை போல் ராமரும் ஆலமரத்தின் கீழ் தான் உக்காந்திருக்கனும். செம்பு இருந்திருக்காது..)

கடுப்பான ராமர்… கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா என்று சொல்ல பறவைகள் தங்கள் Volume களை குறைத்தனர் என்று அகநானூறில் ஒரு பாடல் சொல்லுதாம்.

கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர் சொன்ன அந்த பாடலின் வரிகள் இப்படி:

வெள்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிடும் பௌவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம்போல ஒலிஅவிந்து அன்றால்.

இந்த மாதிரி சேதியை கம்பர் சொல்லாமல் விட்டது…. வால்மீகியின் ராமயணத்திலும் இப்படி இல்லையாம்.. மகாவித்வான் ரா இராகவையங்கார் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்ற நூலை ஆதாரமாய் வைத்து எழுதியது இந்த போஸ்ட். அவர்க்கு என் தலை தாழ்த்திய வணக்கங்கள்..

என்ன உங்களுக்குப் பிடிச்சதா??

அகநானூறு வைத்து எக்சல் கற்போம் (பாடம் – 3)


என்ன இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுகும் ஏதோ நானு முடிச்சு போட்றதா நினைக்கலாம்..

இன்னெக்கி அகநானூறு பக்கம் கொஞ்சம் பாத்தேன். முதல் பாடலே தூக்கியடித்து விட்டது. மொத்த பாடல்கள் நானூறு. அவை அணைத்தும் ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன.

பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்டனர்.

நானூறு பாடலகளிலும் ஏதோ ஒரு நிலம் சம்பந்தப் பட்டு இருக்கும். அதிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எப்படி ???

1 3 5 11 13 15 21 23 25 இப்படியான ஒற்றைப்படை எண்கள் உள்ள பாடல்கள் பாலை நிலப் பாடல்கள்.

4 14 24 இப்படி 4ல் முடியும் எண்கள் கொண்டு உள்ள பாடல்கள் முல்லை நிலப் பாடல்கள்

மருத நிலப் பாடலகள் 6ல் முடியும் (அதாவது 6 16 26 இப்படி)

10 20 30 இது போன்ற எண்களின் பாடல்கள் நெய்தல் நிலத்து மேட்டர்கள்.

2 அல்லது 8 இவைகளில் முடியும் பாடல்கள் குறிஞ்சிப் பாடல்களாகவே இருக்கும். (42 62 332 இப்படியும் 18 178 258 398 இப்படி எண் உள்ள பாடல்கள்.

என்ன தலை சுத்துதா??

சரி எக்செலில் A1 செல்லில் 1 முதல் 400 வரை உள்ள நம்பரில் ஏதாவது ஒரு நம்பரை அடித்தால் A2 ல் எந்த நிலப் பாடல் என்று வரவழைக்க முடியுமா??

இதில் என்ன பிரயோஜனம்?? என்று கேட்பவர்களுக்கு…

ஒழுகுப்படம் (Flow Chart) போட கத்துக்கலாம்.

உதாரணம்:

முதல் படி:
ஒற்றைப்படை எண்ணா?

ஆம்: பாலை நிலம்

இல்லை: இரண்டாம் படி செல்க.

இரண்டாம் படி:
நான்கில் முடிகிறதா?

ஆம்: முல்லை நிலம்

இல்லை: மூன்றாம் படி செல்க..

இப்படியே போகலாம்.

அடுத்தபடியாக..

A1 செல்லில் 1 முதல் 400 வரை மட்டுமே தரும் Validation தெரிஞ்ச்சிக்கலாம். (அடுத்த பாடத்தில் இதை தனியே பாக்கலாம்)

அப்புறம்..  பல Functions வருது இதிலெ..

 IF
ISODD
RIGHT

நீங்களே டிரை பன்னுங்க…

முடியலையா.. இதோ பார்முலா..A2 ல் போடுங்க..

=IF(ISODD(A1)=TRUE,”Paalai”,IF(RIGHT(A1,1)=”4″,”Mullai”,IF(RIGHT(A1,1)=”6″,”Marudham”,IF(RIGHT(A1,1)=”0″,”Neidhal”,”Kurinji”))))

பழந்தமிழரிடம் எத்தனை ஒழுங்கு இருந்திருக்கு?? அதை வச்சி நாம எக்செலாவது ஒழுங்கா கத்துக்குவோம்.

ஹலோ.. எங்கே போறீங்க..??? பாட்டு இல்லாத போஸ்டிங்கா?? பாட்டையும் பாத்துட்டு போங்க…

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

என்ன இந்தப் பாடம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??