பயணங்கள் “முடி”வதில்லை…


saloon

புரோட்டா சாப்பிடாதீர்கள்.. அதன் தீங்குகளின் லிஸ்ட் இதோ என்று ஃபேஸ்புக்கில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். ஆனால் பரமக்குடிக்குப் போனால், அந்த ”சால்னா”வின் வாசம் மூக்கைக் துளைத்தால் படித்ததெல்லாம் மறந்து போகும். கொத்துப் புரோட்டா என்று ஒரு காலத்தில் “டிங்” ”டிங்” ”டிங்” என்று காதில் ரீங்காரமிட்டு வந்து சேரும் . இப்போது அந்த டிங் டிங் சத்தம் கேட்க முடிவதில்லை. சில்வர் டம்ளர் திருப்பி டிங் டிங் சத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் ஆனால், டொக் டொக் என்று தான் சத்தம் கொடுத்து புரோட்டா பிரிகிறது. அந்தமானில் புரோட்டாவை கத்தியில் கூறு போட்டு கொத்து புரோட்டாவை, கத்திப் புரோட்டா ஆக்கி உள்ளனர். சவுண்ட் பொல்யூஷன் இல்லா சமையலாய் இருக்குமோ?

அந்தக்காலத்தில் இட்லி தோசை வடை பொங்கல் என்று மட்டுமே அறிமுகமாய் இருந்த எனக்கு, முதன் முதலில் பிரட் பட்டர் ஜாம் பாத்தவுடன் தூக்கி வாரிப் போட்டது. அந்தமாதிரி ஐட்டங்களை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்த காலமும் உண்டு. பின்னர் பிரமிக்க வைத்தவை, பெரிய்ய ஹோட்டல்களின் மெனு கார்டுகள்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட ’சூப்’களின் பெயர்களே தலை சுற்ற வைத்து விடும். இளைய தலைமுறை வாரிசுகள் தலையெடுத்தபின், அவர்கள் பார்த்து ஏதோ ஆர்டர் கொடுக்க, நாம் சாப்பிட்டு, கமெண்ட் கொடுப்பதோடு அந்தக் காட்சிக்கு வணக்கம் போடுகின்றேன். சாப்பாடு விஷயம் தவிர இன்னும் கதிகலங்க வைக்கும் விவரம் பாக்கலாம்.

என் திருமதியார்க்கு அழகுக்கலையில் ஆர்வம் அதிகம். கடற்படை அதிகாரிகளின் துணைவியார்கள் நட்த்தும் “அழகுக்கலை” சர்டிபிகேட் வேறு வாங்கிட்டாங்களா… வீட்டின் ஒரு பகுதி அழகுபடுத்தும் நிலையம் ஆகிவிட்டது. அப்படி ஆகிவிட்டதால் பல நேரங்களில் என்னாலேயே அந்த அறைக்குள் நுழைய முடியாது. அது சரி… ஏற்கனவே அழகாய் இருக்கும் பெண்களை மட்டுமே இன்னும் அழகு செய்றீங்களே… நமக்கு எல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லையா என்பேன்… ”ஆண்கள் அழகு நிலையம் இருக்கும், போய் வாருங்கள்” என்று பதில் வரும்.

ஆண்களுக்கான ஆரம்பக்காலத்து சலூனகள் எப்படி இருந்தன. சிவாஜி எம்ஜியார் சரோஜாதேவி பத்மினி இப்படி சில (மறக்காமல் புன்னகை இருக்கும்) படங்கள் இருக்கும். மெஷின் கட்டிங் கிராப் இது மட்டுமே பால பாடமாய் கற்றுக் கொண்டு, இப்பொ பிழைப்பை ஓட்டுவது கஷ்டம். அந்தமானிலும் போர்ட்பிளேயர் நீங்கலாக மற்ற தீவுகளில் அந்தப் பழைய பஞ்சாங்கங்கள் தான் இருக்கின்றன.

போர்ட்பிளேயரில் பையனை அழைத்துக் கொண்டு, ஒரு நவீன சலூனுக்குள் நுழைந்தேன். உள்ளே முடி வெட்டும் இடம் என்பதற்க்காய், கீழே கிடந்த முடிகளை விட்டால், வேறு எந்த அறிகுறியும் தென்படவில்லை. முகத்தில் எதையோ அப்பியும், பலவிதமான வண்ணங்களிலும் கிரீம்கள், பலதரப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்கள் பயமுறுத்தின. பையனிடம் 0.5 யா 0.25 என்று கேட்டார். பயன் பார்வை என் மேல் விழுந்த்து. எனக்கு அதுக்கான அர்த்தம் சத்தியமா தெரியலை. ஏதோ கம்மியா இருக்கட்டுமே என்று 0.25 என்றேன். மில்ட்ரி கட்டிங்கை விடவும் குறைவான அளவில் திரும்பி வந்தான் பையன். (வழக்கமாய் வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்). கிளைமாக்ஸ் எனக்கு சாதகமானது. ஸ்கூல் பிரேயரில், முடி வெட்ட வேண்டுமென்றால் இப்படி வெட்டி வர வேண்டும் என்று சொன்னார்களாம். ஒரு வேளை, ஏதாவது ஸ்கூலுக்கும் சலூனுக்கும் “கட்டிங்” இருக்குமோ?

நானும் ஒரு நாள் அதே நவீன சலூனில் போய் தலையைக் கொடுத்தேன். ஏதோ கேள்வி கேட்டு எனக்குப் பதில் தெரியாமல் முழிப்பதற்க்குப் பதிலாக, முன்னமே கட்டிங் என்றேன்… முடிந்தது. ”சார் ஔர் குச்…?” என்று ஹிந்தியில் ஏதோ கேட்டார். நானும் சரி என்றேன். கண்ணை மூட வைத்து முகத்தை ஏதேதோ செய்தார். அப்பப்பொ தண்ணீர் பீச்சி அடிக்கிறார். திடீரென்று மூச்சு விட முடியாமல் தவிக்கிறேன். சூடாய் ஒரு காற்றை பீய்ச்சி அடிக்க..எல்லாம் உணரத்தான் முடிந்தது. நடுவில் ஒரு மெனு கார்டு காட்டி கேட்கிறார். கண்ணாடி வேறு கழட்டி வைத்துள்ளதால் ஒரு குத்துமதிப்பா ஒன்றைக் கை காட்டினேன். எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பாத்தேன். பழைய முகம், மூஞ்சி கழுவுன மாதிரி தெரிந்தது. பர்ஸில் கை வைத்தபோது ”ஏக் ஹஜார்” ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்ற போது மனசு என்னமோ செய்தது. வீட்டிற்க்குச் சென்றவுடன் மனைவி சொன்ன மந்திரச் சொல்: ”இனி சலூனுக்கு போகும் போது ரூபாய் 100 மட்டும் கொண்டு போனால் போதும். அதற்குள் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யட்டும்”.

வள்ளுவர் காலத்திலும் கிராப் வெடிக் கொள்ளும் பழக்கம் இருந்திருக்கிறதாம். இப்படி எல்லாம் வள்ளுவரைக் கலாய்க்கிறார்கள் என்று என்று எனது பரமக்குடி தமிழாசிரியர் சமீபத்தில் கடிதம் முலம் தெரிவித்திருந்தார். எனது கம்பன் கலாய்கல் புத்தகத்தை, தமிழ் கற்றுவித்த, தமிழ்மேல் ஆர்வம் ஏற்படவைத்த தமிழாசிரியர் திரு எம் டி இராமச்சந்திரன் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் மேலும் விளக்கி இருந்தார். மழித்தலும் நீட்டலும் வேண்டாம், என்கிறார் வள்ளுவர். அதாவது மொட்டையும் வேண்டாம் அதாவது கிராப் போதும் என்று சொல்லாமல் சொன்னாராம். இப்படி எல்லாம் பொருள் கொள்ளாமல் கமபனை எடுத்து விளக்கிச் சொல்லி இருப்பது பாராட்டு என்பதாய் அமைந்திருந்த்து கடித வரிகள். (உண்மையில் அப்ப்டியா இருக்கு?). டிஎன்கே என்று உரிமையோடு அழைக்காமல், தாங்கள், உங்கள், என்று சொல்லி எழுதியமை கொஞ்சம் நெருடலாகவும் கௌரவமாகவும் இருந்தது.

சலூன் பற்றி எத்தனை விதமாய் சொல்ல்லாம் என்று யோசித்தால், சவரம் செய்தல், முடி வெட்டுதல், முடி திருத்தல் இப்படித்தான் பதில் வரும். ஹிந்தியில் ”தாடி பனானா” என்கிறார்கள். அதாவது முடியை எடுப்பதை, வளர்ப்பதாய் சொல்கிறது அந்த வாசகம். கம்பரிடமிருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. வேகமாய் கிளிக் செய்து பார்த்தால்,”மயிர் வினை முற்றி – இது என் பயன்பாடு”. கம்பரே சொல்லிட்டா அப்புறம் அதுக்கு ஏது அப்பீல்? ஆமா…கம்பரை சலூன் கடை வரைக்கும் கொண்டு வந்து விட்டதா என்மீது கோபப்பட வேண்டாம்… அப்படியே கம்பராமாயணம் ஒரு பார்வை பாக்கலாமே…வாங்க நீங்களும் கூடவே…

யுத்தம் எல்லம் முடிந்து, பரதனையும் பார்த்துப் பேசி முடித்து, தம்பிமார்களோடு இராமன் நந்திகிராமத்தை அடைந்தாராம். நாமெல்லாம் டிரஸ் மாட்டிக் கொண்டு செண்ட் அடித்துக்கொள்வோம். இராமரோ, மணம் வீசும் உடையை அனிகின்றாராம். அப்படியே மயிர் மழிக்கும் செயல் செய்து முடித்து, சரயு ஆற்றில் குளித்து முடித்த பின்னர் தேவரும் மகிழும் வகையில் ஃபேஸியல் செய்தார்களாம். சாரி…சீதை என்ன கமெண்ட் செய்தார் என்பதை கம்பர் சொல்லாத்தால், இந்த வம்பரும் சொல்லவில்லை. இதோ பாடல்:

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பயர் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றைத்
தம்பியரொஉ தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பச் செய்தார்.

வேறு எங்காவது கம்பர் அழைத்துச் செல்கின்றாரா என்று பின்னர் பாக்கலாம்.