பாமரன் பார்வையில் ஃபாரின் – 84


தமிழ்த் திரையுலகம் நமக்கு பல சொற்கள், புதுப் பொருள் தரும் சொற்றொடர்களையும் தந்திருக்கிறது.

சம்பவம்

அவனா நீ?

தேவையில்லாத ஆணி

அரசியலில் சகஜமப்பா

அதான் இது

அது வேற வாயி

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?

இப்படி அவற்றில் சில.

மலேசியாவில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை பத்திரப்படுத்தி, காட்சிக்கும் வைத்திருந்தனர். . எனக்கு என்னவோ அந்த கவுண்டமணி ஜோக்கை விட பெட்ரோமாக்ஸ் தொடர்பான இன்னொரு சம்பவம் (!) தான் நினைவுக்கு வந்தது.

நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஓர் ஊர்வலத்தில் வாசிதபடி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அருகில், அவரின் ஒரு வாசிப்பைக் கேட்டு, தான் தூக்கி வந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை சபாஷ் என தூக்கிப் போட்டு, மீண்டும் பிடித்தாரம்

அந்த சபாஷ் தனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருதை விடவும் உயர்வு என அவரே சொன்னாராம்.

இனி பெட்ரோமேக்ஸ் லைட் பார்க்கும் போதெல்லாம் வித்வான் ராஜரத்னம் பிள்ளை நினைவுக்கு வரட்டும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 83


மலேசியாவின் டயம் டணலில், அரிக்கேன் விளக்கு வைத்திருந்தார்கள். இந்த தலைமுறை மொபைல் ஃபோன் விளக்கு மட்டுமே அறிந்தவர்களுக்கு இதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. இணையத்தில் அரிக்கேன் விளக்கு தலைப்பில் ஒரு நல்ல கவிதை இருந்தது.



இதோ உங்களுக்காய்…


நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !

பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !

போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !

பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து
செல்லும் மாட்டு வண்டிகளுக்கு
அன்று நான்தான் கலங்கரை விளக்கம் !

மணிச் சத்த சந்தத்தோடு
முணுமுணுத்த நாட்டுப் பாடலுக்கு
அன்றே அசைந்திடும் ஒளிகொடுத்து
ஒலி ஒளி காட்சிகள் கிராமத்து
மண் சாலைகளில் அரங்கேற்றியவன் !

வறியவனோடு
வாழ்ந்ததனால்தானோ
என்னவோ இன்னும் என்னை
தேர்தல் சின்னங்களில்
விட்டு வைத்திருக்கிறார்கள் !

இன்றும்
நரைகண்ட மனிதனின்
மனப் பரணுக்குள்
கொஞ்சம் வெளிச்சமாய்
மிஞ்சியிருக்கும் நான்
சிலசமயங்களில் கவிதையாய்
உருவெடுப்பதுண்டு !

யாரோ அனுபவித்தவர்கள் தான் எழுதி இருக்கிறார்கள்.

நன்றி : ஜி ராஜன் அவர்களுக்கு

பாமரன் பார்வையில் ஃபாரின் – 82


ஜப்பானில் கல்யாணராமன் படம் ஜாலியா பாத்திருப்பீங்க…

பொதுவாவே ஜப்பானியர்கள் மேல் எல்லாருக்கும் ரொம்பவே நல்லெண்ணம் இருக்கும். பாவம்…ஹிரோசிமா, நாகசாகி என இன்றும் உச் கொட்டுவர் பலர்.

எப்படி நிமிர்ந்து வாழ வேண்டும்? என்பதை ஜப்பானியர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ளவேண்டும் என்பர் பலர்.

எவனும் செய்யலை… நான் எதுக்குச் செய்யணும்? – இது இந்திய மனப்பான்மை.
எனவும் செய்யலையா? நான் ஏன் செய்யக் கூடாது? ஜப்பானிய மன ஓட்டம் என்பர்.

உலகமே ஒப்புக் கொண்டாலும், ஜப்பானியகளை மன்னிக்காத இரு பகுதி மக்கள் உள்ளனர்.

அந்தமான் வாழ் மக்கள் & மலேசிய வாழ் மக்கள்.

நாசிச, பாசிச, கெச்டாபோ முறை அடக்குமுறைகள் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டவர்கள் பலர். அதனை ஜப்பானியர் ஆட்சியில் அனுபவித்தவர்கள் அந்தமானிலும், மலேசியாவிலும்.

700 பேரை கப்பல் ஏற்றி நடுக்கடலில் தள்ளிக் கொன்ற கொடூரம். தன் சவக்குழியினை தானே வெட்டி ஜப்பானியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு அந்தமானில்.

ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் என மலேசியாயில் தன் அனுபவங்களை புத்தகமாக்கியுள்ளார் சீ வி குப்புசாமி அவர்கள். ஒரே மூச்சில் படித்து வைக்கும் படியான கொடுமையின் எழுத்து வடிவம் அது.

ஒரு படம் வரலாற்றை கற்க எப்படி எடுத்துச் செல்கிறது பாத்தீயளா?

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

பாமரன் பார்வையில் ஃபாரின் – 81


அந்தமானில் அறு வகை ஆதிவாசிகள் வசிக்கிறார்கள்.

செண்டினலிஸ்
ஜெரேவா
கிரேட் அந்தமானியர்
ஓங்கி
சோம்பன்
நிக்கோபாரிகள்

மலேசியாவில் இதே மாதிரியான ஆதிவாசி குழு ஒன்றும் ஓரங்க அசலி என்ற பெயரில் இருக்கிறார்களாம்.

ஏறக்குறைய அந்தமான் ஆதிகுடிகளை நினைவுபடுத்தும் உடை உறைவிடம் நிறம் ஆகியவை.

அதுவும் குறிப்பாக இந்தோனேஷியாவின் அருகில் இருக்கும் அந்தம்மான் வாழ் பழங்குடிகளான சோம்பன் & நிக்கோபாரிகளை நினைவுக்கு கொண்டுவருகிறது.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 80


வரலாறு பலருக்கும் பிடிப்பதில்லை.

எவன் எப்போ பொறந்தா எனக்கென்ன?

எத்தனை மரம் நாட்டா எனக்கென்ன? எப்போ யாரையோ ஜெயிச்சா எனக்கென்ன ஆச்சி?

இப்படி சிந்திப்போர் பலர்.

அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை (அறிவுரை சொல்ல வயது மட்டும் தான் தகுதி) மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் படிங்க. அப்புறம் பாருங்க…. வரலாறு உங்கள் காதலியை முந்தி நிப்பா.

மலேசியாவின் வரலாறு எப்படி இருந்த நான்… இப்படி வகையில் ஒரு மியூசியம் வைத்துள்ளனர்.

ஒரு பழைய மலேசியா நகரம் போய்வந்த அனுபவம் கிடைக்கும்.

கீழடி போனா இப்படி அனுபவம் கிடைக்குமா? தம்பி அமர்நாத்தை தான் கேக்கணும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 79


வெளிநாட்டுக்குப் போனால் பாஸ்போர்ட் விசா எல்லாம் பெரிதான பிரச்சினையாக இருப்பதில்லை. அங்கு மூன்று வேளையும் நம் முன் நிற்பது சாப்பாடு பிரச்சனை தான்.

அதுவும் பர்கர் பிட்ஸா என்றெல்லாம் சாப்பிட்டு பழகாத நாக்கு ரொம்பவே கஷ்டப்படும்.

நானும் அதில் ஒருவன் தான்.

மலேசியாவில் அட்சய பாத்திரமாய் ஒரு நல்ல அருமையான இந்திய, தமிழக, இராம்நாட் உணவகம் கிடைத்தது.

எம் ஜி ஆர் ஒரு முறை வந்தபோது சாப்பிட்ட உணவகமாம்.

எம் ஜி ஆர் படம் வைத்தால் அவர் குணம் வராமலா போகும்?
ஆம்… வயிறு நிரம்ப சாப்பிடவும், நாமே வேண்டியதை எடுத்து சாப்பிடவும் ஏற்பாடு.

மலேசியாவில் மனதை நிறைத்தது.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 78


மழையும் மலைசார்ந்த இடங்களுக்கும் போனால் இந்தப் பாடல் உங்கள் நினைவுக்கு வரும்..

மலை ராணி முந்தானை சரிய சரிய,
மண் மாதா வண்ணமடி விரிய விரிய,
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ,
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத..

அதே மலையினை வாகனத்தில் அமர்ந்து ஒட்டி மகிழ வசதி மலேசிய காம்ரேன் பகுதியில் செய்து வைத்துள்ளனர்.

பயம் ஒருபக்கம்
பாதாளம் மறுபக்கம்
வானம் தொட்டு விடும் தூரம் என நினைக்க வைக்கும் சூழல்.

மொத்தத்தில் திரில்லான அட்வென்ச்சர் பயணம் .

பாமரன் பார்வையில் ஃபாரின் – 72


நாங்கள் எல்லாம் கையில் ஒரு பைசா வச்சிக்காமெ திரிவோம்லே… என வெளி நாட்டிலிருந்து இறங்கிய சில நாட்களில் பீலா விடும் நபர்களைப் பார்த்திருப்பீர்கள். (எல்லாம் கிரிடிட் கார்டே துணை என இருப்போர்)

நாங்க எல்லாம் அன்பே சிவம் படத்தில், அதெல்லாம் மாதவனுக்கும் கூட உதவாது எனப் பாத்திருக்கோமே!

காசு தந்தால் தான் ஆச்சி என சிங்கப்பூர் ஃப்ளையர் வீல் (ரங்க ராட்டினம்) அருகில் உள்ள கடை, அன்று ஒரு நாள் அடம் பிடித்தது.

இப்போது மலேசியாவிலும் அதே நிலை தான். ஸ்டிராபெரி தோட்டம் பாக்க ஆசையா, கார்டு நீட்டினால் தமிழ்ப் பெண் மலாய் மொழியில் மறுத்து பணமாய் தாருங்கள் என்றார்.

*ஆமா…. தமிழ்ப் பெண் என எப்படி கண்டிபிடிச்சீக? – * இது இனிய பாதியின் கேள்வி.

இராமநாதபுர மாவட்ட நிறம் + கமல் மாதிரி முகம் + மூக்குத்தி; இது போதாதா?

நம்ம ஊர்ல் தயிர் பாக்கெட் போல் இல்லாமல், மலேசியாவில் Selamat Detang என்று பெருசா எழுதி வச்சிருந்தாக. விசாரிச்சா, மலாய் மொழியில் வரவேற்கிறார்களாம்.

அந்த நம்மூர் நிறப் பாப்பா சொன்னது தான் என்பதை ஊகித்தோர்க்கு பாராட்டுகள்.

பேசாமெ நாமும் பால் தயிர் பாக்கெட்களில் Paal Thayir இப்படி போடலாமோ!!

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

பாமரன் பார்வையில் ஃபாரின் – 73


சிலர் மாடியில் தோட்டம் போடுவார்கள்.

(மாடியில் அல்லது மடியில் கடலை போடுவோரும் உண்டு.)

ஸ்டிராபெரி வளக்கவே, மாடி அமைத்ததை பார்க்க மலேசியா தான் போகவேண்டும்.

வாங்களேன். செலவில்லாமே பாக்க..

பாமரன் பார்வையில் ஃபாரின் – 74


கட்டைகளில் நல்ல கட்டை மலேசியா கட்டை என்பர் தச்சர்கள். (நீங்க நாட்டுக் கட்டை என்று சொன்னால், உங்கள் இளமை வெளியே தெரிய வரும்.)

ம்லேசியாவில் மரங்களை வெட்டோ வெட்டு என வெட்டுகிறார்களாம். ஆனாலும் பச்சைப் பசேல் தான் எங்கு பாத்தாலும்…

எப்படி?

எதையுமே ப்ளான் பண்ணிச் செய்தால் அப்படித்தான் என வடிவேல்த்தனமான பதில் வந்தது.

ஒரு பக்கமா மரத்தெ வெட்டிகிட்டே போவாகளாம். மறு பக்கம் மரத்தெ நட்டுகிட்டே போவாகளாம்.

முழுசா வெட்டி முறிப்பதற்குள்… புது மரம் வா..வா…வெட்ட வா என் வரவேற்பு தருமாம்.

நம்மூர்லயும் இப்படித்தானே நடக்குது!!!

ஒரு மரம் நடுவிழா…

எங்கே விழா வைக்கலாம்?

சார்…. வருசா வருசம் இதே இடத்தில் தான் சார் மரம் நடுவிழா வைப்போம். இங்கேயே வச்சிடிலாம் சார்…

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மலேசியாவில் மிச்சம் மீதியான மரத்துண்டுகளையும் கூட அழகா டெக்கரேட் செய்து வைத்தது என் கேமராவுக்கு தீனி இன்று.