வியப்பூட்டும் விஐபி – 87
அந்தமானுக்கு வரும் பிரபலங்கள் பல்வேறு துறைகளில் தத்தம் திறன்களை உச்சத்தில் வைத்திருப்பர். அல்லது அப்படி இருப்போர் தான் அந்தமானுக்கே வருகிறார்களோ? என்ற சந்தேகமும் வரும்.
அப்படிப்பட்ட திறனாளிகளின் குழுவோடு, விஜிபி சகோதரத் தமிழ்த் திறனும் சேர்ந்து கொண்டால், திருவிழாவின் சிறப்பைக் கேட்கவா வேண்டும்?
தமிழறிஞர் என்றால் வேட்டியும் துண்டும் அணிந்திருக்க வேண்டும் என்ற நியதியில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களும், அதற்கு முற்றிலும் மாறாக விஜிபி சகோதரரும் அமர்ந்திருந்தனர். இரண்டிற்கும் நடுவில்தான் இன்றைய வியப்பு தந்த நபர் அமர்ந்திருந்தார் கருமமே கண்ணாக.
முழு நிகழ்ச்சிகளின் படங்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருந்தார். (முகநூல் எல்லாம் அந்தமானில் அவ்வளவாக அரிதாய் அறிந்த காலம் அது)
எட்டிப் பார்த்தபோது, என் கண்களில் ஆர்வத்தைப் புரிந்து கொண்டார்.
”ஜெயில் பார்க்க எல்லாரும் தயார். உங்களை அழைக்கத்தான் வந்தேன்” இது நான்.
”ஜெயிலை அடுத்த முறை கூட பார்த்துக்கலாம். சரீ… ப்ளாக் எழுதுறவங்க யாராவது இருக்காங்களா?” கேட்டார் அவர்.
“ஹாலோ ப்ளாக் வைத்து வீடு கட்டுவதைத் தவிர்த்து, வேறு எந்த ப்ளாக்கும் நானறியேன்” என்றேன் என் உண்மை நிலையை.
”வாருங்கள், உங்கள் நட்புகளோடு, ப்ளாக் அதான் வலைப்பூ எப்படிச் செய்வது என்பதை சொல்கிறேன்” என்று ஒரு மணிநேரம் இலவசமாய் வகுப்பெடுத்தார்.
அந்தமானில் இன்றும் நான்கைந்து வலைப்பூக்கள் மணம் வீசுவதற்கு காரணமான அவர் தான் முனைவர் இளங்கோ.

அந்தமான் வந்தோமா, நான்கைந்து கடற்கரை சுற்றினோமா என இருக்காமல், ஜெயில் கூடப் பின்னர் பார்க்கலாமென்ற முனைப்பில், தமிழினை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வைப்பதில் காட்டிய முனைவரின் முனைப்பு, வியப்பு தான்.
தொடரும் அடுத்த விஐபிக்காய்க் காத்திருக்கவும்.
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலைப்பூ: www.andamantamilnenjan.wordpress.com இந்த வலைப்பூவின் பின்னால் முனைவர் இளங்கோ அவர்களின் உழைப்பும் இருக்கிறது