மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா?


இதென்ன கேள்வி?? பொண்டாட்டி தொந்திரவு வேணாம்னு தானே, மாஞ்சி மாஞ்சி பேஸ்புக்கு முன்னாடி மணிக்கணக்கா கெடக்கிறாய்ங்க… இதுலெ.. கூப்புட்றது எப்படின்னு…. நல்லா கேக்குறானுங்கப்பா கொஸ்சினு…இப்படி உங்க மனசுலெ ஓடும் படம் எனக்கும்.. கொஞ்சம் கேக்கத்தான் செய்யுது.. ஏன்ன்னா… நானும் உங்க கட்சி தானே!! மனைவியை எப்படி அழைப்பது? என்ற கேள்வி வந்த்துமே…. செத்த இருங்க… என் வீட்டுக்காரி அழைப்பு வந்திருக்கு.. என்ன ஏதுன்னு கேட்டுட்டு, அப்புறம் வாரேன்…(ஐ பி எல்லுக்கு கமான், புலாவா ஆயா ஹைன்னு சொல்லிட்டு ஓட்ற மாதிரி ஓட வேண்டி இருக்கு பாருங்களேன்!)

மனைவியை எப்படி அழைப்பது என்பதற்குப் பதிலா… மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்ற வித்தையை கொஞ்சம் பாத்துட்டுப் போலாமே… அவங்க உங்க கிட்டெ கேக்கும் போதே, அவர்களிடம் அந்த கேள்விக்கான பதில் இருக்கும். ரொம்பக் கவனமா கேக்கிற மாதிரி மொகத்தெ வச்சிக்கிடுங்க.. புரிஞ்சாலும் புரியாத மாதிரி மொக பாவனையா வச்சிக்கனும். எதிர் கேள்விகள், உங்கள் மேதாவித்தனைத்தைக் காட்டாமல், அவர்களின் மேதாவித்தனம் வெளிப்படும்படி கேக்கலாம். [என்ன சொதப்பலா சொன்னாலும், மேதாவித்தனம் மாதிரி, உச்சுக் கொட்டியிரனும்]. எல்லாம் முடிச்சு அவங்க என்ன நெனெச்சாங்களோ, அதை அவய்ங்க வாயிலிருந்து வரும் வரை பொறுமையா வெயிட் செய்யனும். அது வந்து விழுந்தவுடன், அட,,.. இதெத்தானெ நானும் நெனெச்சேன்ன்ன்ன்ன் என்று புளுகனும்… நல்ல தாம்பத்யத்தின் ரகசியம் வெளியே சொல்லிட்டேனோ??

சரீ… கூப்பிடு தொலைவில் இருக்கும் மனையாளை எப்படி கூப்புடுவது என்று கேட்டேனே… என்னங்க… ஏனுங்க.. ஏண்ணா, மச்சான், மாமா, மாமோய், என்று கணவர்களை கூப்பிடுவது தெரிகின்றது. மனதிற்குள் கடன்காரன் சனியன் என்று அழைப்பது இங்கு நாகரீகம் கருதி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அப்படியே, மனைவியை கூப்பிட அகராதிகள் தான் தேட வேண்டியுள்ளது. பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் இப்போதைக்கு வந்துவிட்டது. என் அன்பே, காதலியே, உயிரே, கண்ணே, அமுதே.. என்று கல்யாணத்துக்கு முன்னர் கொஞ்சிவிட்டு, அப்புறம் கல்யாணம் ஆன மயக்கத்தில், செல்லம்…செல்லக்குட்டி, செல்லக் கழுதெ..என்றெல்லாம் அழைப்பதும், அப்படியே கொஞ்ச வருடங்கள் கழித்து நாயே, பேயே என்று மனதிற்குள் அழைப்பதும் கணக்கில் வராது.

வட இந்தியர்களுக்கு ஒரு சௌகரியம் இருக்கிறது. டாக்டரின் டக்கர் மனைவியினை டாக்டராயின் என்றும், ஆசிரியனின் ஆசைமனைவியை உபாத்யாயின் என்றும் அழைப்பார்களாம். அப்பொ இஞ்ஜினியரான என் இனிய மனைவியை எப்படி அழைப்பார்கள் என்று கேட்டேன். இஞ்ஜினியராயின் என்று பதில் வந்தது.

அவங்க ஊர் பழக்கம் விட்டுத்தள்ளுங்க. அந்தமான் நிலவரம் பாக்கலாமே. பேர் சொல்ல குழந்தைகள் வேண்டும் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்பெல்லாம் கொழந்தைகளோட பேரெ வச்சித்தான் அவங்க அப்பா அம்மாவைக் கூப்பிடராங்க… ரக்சிகா அப்பாவோ, விஜயம்மா என்றும் தான் வழக்கமாய் ஆகி விட்டது.

மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா? (அப்பாடா அங்கே சுத்தி, அந்தமான் சுத்தி இப்பொ தலைப்புக்கு வந்தாச்சி…) மனைவியை தாய் என்ற உயர்நத இடத்தில் வைத்துப் பார்ப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே…இந்த இடத்தில் கமபரைக் கொண்டு வந்தால் நல்லா இருக்குமோ என்று படுது… கொண்டாந்துட்டாப் போச்சி…

காரியம் ஆகணுமா காலிலே விழுந்தாவது காரித்தை முடி..அப்புறம்… ”தேர்தல் வாக்குறுதியா..?? அதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம் தானே” என்று, இப்பொ சொல்லும் அதே ரேஞ்சுக்கு கம்பன் காட்டும் ஓர் இடம் இருக்கு. வாலிவதம் செய்த காட்சி.. ”ராமனே ஆனாலும் மறைந்திருந்து வாலியை கொன்னது சரியா?” என்று இன்னும் சர்ச்சை நடந்திட்டுத்தான் இருக்கு. அப்படி கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கக் காரணமாய் இருந்த சுக்ரீவன் அப்புறமா, ஓவரா ‘ஹேங்க் ஓவர்’ ஆகும் அளவுக்கு ஓவரா குடிச்சிட்டு இருந்தானாம். பார்த்தார் இளவல் இலக்குவன்… கோபம்னா கோவம்.. உங்கவூட்டு எங்கவூட்டு இல்லெ… அம்புட்டு கோவமா வேக நடை போட்டு கிஷ்கிந்தையில் நுழைந்தார். தடுத்தார் தாரை… விதவைக் கோலத்தில் வாலியின் மனைவி… பார்த்தவுடன் தன் தாயார்கள் நினைவு வந்ததாம். (தாயார்கள் என்பதில் கைகேயியும் அடக்கம்). கோபம் அடங்கியதாம்…
மனைவியின் கோபம் நம்மீது பாய்வதை தடுக்க, அல்லது ஒடுங்க, மனைவியை தாய் மாதிரி நினைக்கலாமோ!!??

அது வரைக்கும் சரீரீரீ…இதென்னெ மம்மீ என்று அழைப்பது? இதுக்கு விளக்கம் சொல்ல நீங்கள் என்னோடு இன்று பாஸ்போர்ட் விசா இல்லாமல் குவைத் வரவேண்டும்.

mammii

அங்கே தான் என் நண்பர் பழனிகுமார் தன் மனைவியை மம்மீ என்று அழைத்து வருவதைப் பார்த்தேன். சற்றே வித்தியாசமாகப் பட்டது. ”ஏன் இப்படி?” என்றேன். ”பெயர் சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன். என் குழந்தைகளும் நாம் செய்வதையே அப்படியே செய்வது போல், அவர்களும் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன வம்பாப் போச்சே என்று, மம்மீ என்று குழந்தைகள் வாயிலிருந்து வரவழைக்க செய்த வேடிக்கையான ஏற்பாடு இன்றும் தொடர்கிறது” என்கிறார்.

எப்படி இருக்கு கதை..? இளைய தலைமுறை நல்லா இருக்க என்ன என்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கு? உறவுமுறைகள் உட்பட..!!!

மீண்டும் ஒரு முறை கம்பர் கிட்டே போலாமே… அங்கே கணவரைக் குறித்துச் சொல்ல வேண்டும், அப்போது, மனைவியின் கணவர் என்று பிட்டுப் போடுகிறார் கம்பர். விரிவாப் பாக்கலாமா? இராமன் மேல் பாசம் கொண்டுள்ள கைகேயி இராமனை காடு அனுப்பும் போது தான் இப்படி வருகின்றது. ரெண்டு வரம் தர்ரதாச் சொன்னியே, ஒன்னிலெ எம் புள்ளெ நாடாளவும், இன்னொன்னுலெ சீதை புருஷன் காடாள்வதுமாக வரங்கள் ரெண்டும் கேட்பதாக வருகிறது கம்பனில்.

இராமன் என்று சொன்னால் எங்கே, ஒளிந்திருக்கும் பாசம் மேலே வந்துவிடுமோ என்று பயந்து, கம்பர் அதனை மறைத்துச் சொல்லாமல், ”சீதையின் கணவன்” என்று சொல்வது, இப்பொ நாம அந்தமான்லெ குழந்தைகள் பேர் சொல்லி அவங்க அப்பா என்று சொல்ற மாதிரி தானே இருக்கு?
வால்மீகி தான், கம்பரின் ”மூலம்”. ஆனால் வரிக்கு வரி காப்பி என்று மட்டும் சொல்லிட முடியாது. வால்மீகியின் வரிகளில், இராமனுக்கு பதவி ஏற்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் அப்படியே பரதனுக்கு செஞ்சிட்டு (இராமனுக்குப் பதிலா பரதன் மட்டும்), இராமனை காட்டுக்கும் அனுப்பிடுங்க என்பதாய் வருகிறது.

பாவம் மாமியார் மருமகள் மீது என்ன பிரச்சினையோ, சீதை பெயரை கைகேயி இழுப்பதாய் கம்பர் சொன்னது இந்த வம்பனுக்குப் படுகின்றது. இதோ பாட்டும்… வருது:

ஏய் வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய்வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்..

அந்த கடைசி வரியில் வரும் சிறந்த என்பது இப்பொ வரும், காமெடியில் கலக்கும், “ரொம்ப நல்லவ” மாதிரி தெரியுது எனக்கு. உங்களுக்கு?

மூக்கறுப்பது எங்கள் குலம்…


கவிதையே பாடலாக என்று ஒரு குறுந்தகடு வெளி வந்தது. வைரமுத்துவின் கவிதைகளை அவர் மேடையில் படிக்க, கலைஞர்.. வாலி.. போன்ற ரசிகர்கள் முன்னிலையில் அதையே பாடலாய் பிரபல பாடகர்கள் பாடி வலம் வரும் இசைத் தொகுப்பு தான் அது. அதில் மதுரையினை மாமதுரை என்று, கலைஞரை புகழ்வது போல் புகழ்ந்து தள்ளிவிட்டு கடைசியில் வைகை வற்றிப் போனதையும், ரசிகர் மன்றம் அதிகமானதையும், ஜாதிச்சண்டைகள் அதிகமானதையும் சோகமாய் தந்திருப்பார் கவிதையாகவும் பாடலாகவும்.

காதலும் வீரமும் தான் தமிழனின் உடன்பிறவா உடன்பிறப்பு. அப்பொ, ’மதுரைக்கும் வீரத்திற்கும் தொடர்பு இருக்கா? இல்லையா?’ என்ற பட்டிமன்றம் வைத்தாலும் ரெண்டு பக்கம் பேசவும் அதே மதுரைக் காரங்களைத் தான் கூப்பிடனும். மதுரையில் பெண் எடுத்த எனக்கு, மதுரையின் வீரம் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும்.

அந்தக் காலத்து ஏபி நாகராஜன் இயக்கத்தில் வந்த திருவிளையாடல் படத்தில் வந்த டயலாக் ஒன்று, அநியாயத்துக்கு இப்பொ ஞாபகத்துக்கு வந்து நிக்குது. சும்மா சொல்லக்கூடாது தமிழன் தைரியமானவன் தான். ஆனா அந்த மதுரைக்காரத் தமிழன், கடவுள் கிட்டேயே தன் தைரியத்தைக் காட்டியவர். ஆனா சந்தடி சாக்கில் சாமிக்கே குலம் பத்தி பேசி, குழப்பும் தைரியசாலிகள். அப்படத்தில் நக்கீரன் பாத்திரம் வழியாய் வரும் டயலாக் தான் நான் சொல்ல வருவது. “சங்கறுப்போர் எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம், உன் போல் இரந்துண்டு வாழோம்…” இப்படி கடவுளுக்கே சவ்டால் விடும் தைரியம் நம்மாட்களை விட்டால் வேறு யாருக்கும் வராது. உண்மையில் நக்கீரன் அப்படிச் சொன்னாரா? அல்லது ஏபிஎன் விட்ட சரடா?

லேசா கிளறித்தான் பாக்கலாமே என்று பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (எஸ் எஸ் மாத்ரு பூதேஸ்வரன் எழுதியது) புரட்டிப் பாத்தேன். தருமிக்கு பொற்கிளி அருளல், கீரனைக் கரையேற்றிடல், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்திடல் என்று மூன்று திருவிளையாடல்கள் ஒட்டித்தான் அந்த நாகேஷ் சிவாஜி புராணம் செய்யப்பட்டிருக்கின்றது. சினிமாவில் வீராப்பாவாய் காட்டப்படும் நக்கீரர் உண்மையில் அப்படித் தெரியவில்லை. தமிழ் இலக்கணம் சரியா தெரியாத காரணத்தால் சிவனை எதிர்த்ததாய் வருகின்றது.

சிவனின் கோவத்துக்கு இன்னொரு சூப்பர் காரணம் சொல்கிறார்கள். ஒரு சமயம் தேவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் வந்து நிக்க, கொடெ சாஞ்சி போச்சாம் பூமி. அப்போ அகத்தியரை நிமித்த அனுப்பினாராம் சிவன். லாங்குவேஜ் பிராப்ளம் வராமெ இருக்க தமிழ் இலக்கண கிராஷ் கோர்ஸ் எடுத்து அனுப்பப் பட்டாராம். இப்படிப்பட்ட தமிழ் யுனிவர்சிட்டியின் வைஸ் சான்ஸ்லர் – விசி எழுதின பாட்டை வீசிட்டு குத்தம் சொன்னா, விடுவாகளா?? அப்புறம் அதே அகத்தியரை டியூசன் மாஸ்டரா ஆக்கி நக்கீரர்ருக்கு நல்ல தமிழ் சொல்லிக் கொடுத்து, ஏற்கனவே எழுதின பாட்டெல்லாம் திருத்தி எழுதினாராம்.. சூப்பரா இருக்கில்லெ கதை…

எதுக்கு இவ்வளவு வருஷம் கழிச்சி இந்த மேட்டர் எல்லாம் தோண்டி எடுத்து ஏன் பழைய ஆட்களின் மூக்கறுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? சும்மா இந்த மூக்கறுப்பு பத்தி இராமயண ஆச்சாரியர்கள் கம்பரும் வால்மீகியும் எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று ”பர்வால்” இராமாயணம் என்று நானும் கொஞ்சமாய் சரடு விடத்தான். (இதெ எழுதவே இப்படி நீட்டி முழக்குறப்போ, எத்தனை நூற்றாண்டு காலமாய் தொடர்ந்து வரும் தொடர்கதையில் அப்படி இப்படி மாற்றங்கள் இல்லாமலா இருக்கும்??) அதை சொல்லத்தான் இவ்வளவு சுத்தி சுத்தி வர்ரேன்.

தாடகை இருக்கும் வனத்திற்கு அழைத்து வருகின்றார் விசுவாமித்ரர் இராம இலட்சுமணர்களை. அந்த வனத்தின் பெயரே தடகாவனமாம். (காரணப் பெயராய் இருக்குமோ?). சிங்கம் புலி எல்லாம் வாழும் செம காடு என்கின்றார் வால்மீகி. நம்ம கம்பர் அதை லேசா மாத்திவிட்டு, மருத நிலமாய் (வயலும் வயல் சார்ந்த இடமாய்) இருந்தது இப்போது பாலை நிலமாய் மாறியதாய் கவிதை பாடுகின்றார். அப்படி மாற்றியவள் தாடகை என்பதையும் கம்பர் சொல்லத் தவறவில்லை. “.. கேடி இலா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினாள்” – இது கம்பர் வாசகம்.
தாடகையைக் கொல்ல வேண்டும் என்று விசுவாமித்ரர் சொன்னதும், ஒரு பெண்ணைக் கொல்வதா என்று யோசித்தாலும், அவள் வரும் எப்பெக்டைப் பாத்ததும் கொஞ்சம் மனசு இரங்கி (அல்லது மேலே போய்..) ”சொன்ன பேச்சு கேக்காட்டி காது மூக்கை அறுத்து கையிலெ கொடுத்திடலாம்” என்று இராமன் திருவாய் மலர்ந்தருளியதாய் வால்மீகியின் ஆக்கத்தில் வருகின்றது. முற்றிலும் ராமனைக் கடவுளின் அவதாரம் என்று காட்ட நினைத்த கம்பரின் வார்த்தையில் இந்த டயலாக் மிஸ்ஸிங்.

அப்படிச் சொல்லிய போதும் தாடகை கற்களையும் பாறைகளையும் ஆகாயத்தில் பொழிந்தாள் என்பதாய் வால்மீகி லேசா டச் செஞ்சிட்டு தவம் செய்யப் போய்விடுகிறார். ஆனா கம்பர் அதை அப்படியே பின்னிப் பெடலெடுத்துக் காட்டுகின்றார். தாடகை, மலைகளையே பரல்களாய் கோர்த்த சிலம்பு அணிந்தவளாம். அவள் நடந்தால், தரையே நெளியுமாம். அந்தக் குழிகளில் கடல் நீர் பாயுமாம். எமனே இவளைப் பாத்தா ஓடியே போவானாம். இவளின் வேகத்தால் மலையெல்லாம் கூட இவளோடு சேர்ந்தே வருமாம்.. எப்படி?? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. கம்பரோடு சேர்ந்து.

நமக்கெல்லாம் மூக்கறுத்தது சூர்ப்பனகை வரும் போது தான் தெரியும். அதுவும் இலக்குவன் செய்தது என்று. (இது பற்றிய அலசல் அப்புறமா வச்சிக்குவோம்). தாடகை வதம் நேரும் பொது மூக்கை அறுப்பேன் என்று சூளுரைத்த்து என்னவோ இராமர் தான். ஆனால் அதை நடைமுறைப் படுத்தியது உடன்பிறப்பான இலட்சுமணன் தான். இராமனைக் கொல்ல வந்தபோது இலட்சுமணன் தடுத்து அவளின் காதுகளையும் மூக்கையும் அறுத்தான் என்று மூக்கறுபட்ட சேதியினை முணுக் என்று கோபம் கொப்பளிக்கும் முனி (விசுவமித்ரர்) முன் செய்ததாய் வால்மீகி சொல்கிறார்.

கம்பர் ஏனோ தெரியவில்லை இந்த மூக்கறுப்புக் காட்சியினை (வரம்பு மீறல் என்று நினைத்தாரோ என்னவோ?) சென்சார் செய்து விட்டார். இவ்வளவு அகோரமான காட்சியை நல்ல மெஸேஜ் ஒன்று குடுத்து பில்டப் செய்கிறார் நம்ம கம்பர். கருப்பான இராமனின் அம்பு, முனிவர்களின் சாபச் சொல் போல் வேகமா வந்திச்சாம். அது இருள் மாதிரியா இருக்கும் (பயங்கரக் கருப்பா) தாடகையின் மார்பில் (வைரம் பாய்ஞ்ச ஒடம்பு என்றும் வருது) அம்பு புகுந்ததாம். பின்புறமா ஓடிப் போயிடுச்சாம். இத்தோடு உட்டாரா நம்மாளு? கல்வி கற்காத இழிந்தவர்களுக்கு, கற்று உணர்ந்த நல்லவர்கள் சொன்ன அறிவுரை போல் பின்புறமாய் விழுந்து விட்டதாம். கம்பர்…. கம்பர் தான்… வால்மீகி வால்மீகி தான்..

பர்வால் அலசல்கள் தொடரும்.