தானாச் சேர்ந்த கூட்டம் (1025)


தானாச் சேர்ந்த கூட்டம் (1025)

குறளின் குரல் – 1

அழைப்பிதழ்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம். சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக, தவிர்க்க முடியாத சூழலாக சில அழைப்பிதழ் வந்து சேரும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் மேடைகளில் அவ்வளவு கவனம் போகாது. ஆனால் பார்வையாளர்களைக் கவனித்தால் செமெ சுவாரசியமாக இருக்கும். அன்றும் அப்படித்தான் ஓர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சி. வழக்கமான, பார்வயாளர்களின் பக்கம் பார்வையைத் திருப்பினேன். ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒரு முறை மாறிக் கொண்டிருக்கிறது. ஏன் என்று புரியவில்லை. நான் மட்டும்தான் புடிச்சி வச்ச பிள்ளையார் மாதிரி இருக்கேன். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடக்கப் போகிறது இந்தக் கூத்து. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மாணவியிடம் விசாரித்தேன் (மாணவர்களிடம் ஏனோ விசாரிக்கத் தோனலைங்கோ…) ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஒரு பீரியட் இங்கு வந்து உட்கார வேண்டும். மதிய சாப்பாடு இருக்கு எனச் சொல்லிவிட்டார்களாம் முன்பே.

ஆக… இது தான் அழைத்து வரப்படும் கூட்டம். ஒரு வேளை பிற்காலத்தில் அரசியல்வாதியாக ஆகும் போது, கூட்டம் சேர்க்கும் கலையும் கத்துக்க, செலெபஸ்லேயே வச்சிருப்பாகளோ? இருக்கலாம். இன்னொரு வகையும் இருக்கு. அது தானே சேரும் கூட்டம். தலைமைப் பண்பு உள்ளவர் எங்கே இருந்தாலும், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தானே சேருமாம்.

சமீபத்தில் பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள பஞ்சவடிக்குப் போயிருந்தேன். (அப்போ… பாண்டிச்சேரி போகலையா? பாண்டிச்சேரிக்கும் போயிட்டுத்தான் வந்தேன். இப்பொ நிம்மதியா? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்டினு…) பஞ்சவடியில் பிரமாண்டமான அனுமார் சிலை. வெளியில் வாட்ச்மேன் போல் ஒரு சிலை. உத்துப்பாத்தா, அட நம்ம சுக்கிரிவன் தான் அது. சுக்ரீவன் ராஜாவாச்சே? கோவிச்சுக்க மாட்ட்டாரா என்ன?

மாட்டார். ஏன் தெரியுமா? தலைவர் வேண்டுமானாலும் சுக்ரீவனாக இருக்கலாம். ஆனால் தலைமைப் பண்பு உள்ளவர் அனுமன். அதான் அவரைத்தேடி கூட்டம் சேருது.

அது என்ன பெரீய்ய பண்பு? ராம இலக்குவர்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்டவர் சுக்ரீவன். அனுமனுக்கு என்னமோ செய்யுதாம். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி என்பது போன்ற ஓர் உணர்வு. எலும்பே உருகிப் போச்சாம். கம்பர் சொன்னா தப்பா இருக்குமா என்ன? (கொஞ்சம் ஓவர் பில்டப் என்றாலும் கூட). அந்த மாதிரி உணர்வு உள்ளவர்களைத் தேடித்தானே கூட்டம் வரும்.

அங்கே என்ன கூட்டம். ஒரே சிவனடியார்கள் கூட்டமா இருக்கே. அங்கே எப்படி கூட்டம் சேர்ந்தது? அங்கேயும் அந்து எலும்பு உருகும் நிகழ்வு நடந்திருக்குமோ? மாணிக்கவாசகர் விளக்கிக் கொண்டிருக்கிறார். நினைக்கும் போதும், பார்க்கும் போதும், பேசும் போதும் அட..எப்போதும் அனைத்தெலும்பும் உள்ளே உருகிட அன்பு செலுத்துகிறார். அப்ப கூட்டம் சேராதா என்ன?

ஐயன் வள்ளுவர் கிட்டே போனா… ரொம்ப சுலுவ்வா ஒரு வழி சொல்றார். நல்லவனா இரு. நாலு பேருக்கு நல்லது செய். உலகமே உன் பின்னால் வரும். அட இம்புட்டுதானா?

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. (குறள் – 1025)

பொருள்

குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

குறளின் குரல் மீண்டும் ஒலிக்கும்.

அந்தமான் தமிழ்நெஞ்சன்

03-05-2022