கற்போம் கம்பனில் – 28
(25-04-2020)
இப்பொ எல்லாம் வீடியோ கால் சகிதம் மீட்டிங் போடுவது ரொம்ப பாப்புலர் ஆயிடுச்சி. அந்தமானில் அதிசயமா லாக்டவுன் ஆனதிலிருந்து நெட்வொர்க் செமெயா கெடெச்சிட்டு இருக்கு. டெய்லி காலேஜ் அலிமினிகள் கலாய்க்க உட்காருகிறோம். ”உங்களை எல்லாம் பாத்தாக்கா, அந்த வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா, சின்னி ஜெயந்த், விவேக், ஸ்டாலின், ரஜினி, கமல் ஞாபகம் தான் வருது” என்கிறார் என் இனிய பாதி. (எல்லாம் கெழடுங்க…. மனசுக்குள் இளவட்டம்கிற நெனெப்பு…. என்பதின் நாகரீக வடிவம் அது)
இன்னொரு குடும்பத்தில் ’என்னமோ, ஜூம் ஜூம்ங்கிறாகளே, நாமளும் பேசலாமா?’ என மனைவி கேட்க வெளியூரில் இருக்கும் அப்பாவி கணவன் மாட்ட, 7 நிமிடத்துக்கு மேல் பேச ஒண்ணும் இல்லையாம். ஆமா… நம்மாளு எத்தனை நிமிஷம் தான், ஆமா, ம்.., ஆமா ஆமா, சரி தான், கரெக்ட் இப்படிச் சொல்லிட்டே இருக்க முடியும்? கடைசியிலெ வந்த பன்ச் தான் டாப். பொண்ட்டாடியோட 7 நிமிஷம் பேச சபெஜ்க்ட் இல்லெ. ஆனா டெய்லி காலேஜ்ல படிச்சவங்களோட 40 + 40 (இது பெக் கணக்கு இல்லீங்கோ?) என்ன தான் பேசுவீங்களோ…? உயர்ந்த உள்ளங்களோட இருந்தா உற்சாகம் தானே வர்ம்லெ…
நெட் நல்லா கெடெச்சிட்டு இருக்கிறதுனாலே, தொடர்ந்து வரும் தகவலினால் பயம் அப்பப்பொ ஏறிட்டும் இருக்கு. என்னது.. ’உற்சாக பானம் வச்சி மறக்கடிக்கவா?’ இங்கே மட்டும் டாஸ்மாக் திறந்திருக்கா என்ன? இந்தியாவில் தனிமனித சரக்கடிப்பதிலும், பிராய்லர் கோழி சாப்பிடுவதிலும் முன்னணியில் இருப்பது அந்தமான் தான். அப்படி இருப்போரும் வீட்டில் உற்சாக பானம் இல்லாது, உற்சாகமாய் இருப்பதே இங்குள்ள மக்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுதுங்கோ…
சரீ… அப்படியே அந்த உயர்ந்த உள்ளம் படத்துப் பாட்டின் வரிகள் பாக்கலாமே.. காலையிலெ விடியுது. மேட்டர் அம்புட்டு தான். தினமும் நடக்கும் சங்கதி தானே… ஆனா நம்ம வைரமுத்து பார்வையில் எப்படிப் படுது பாருங்க…இனிமே தூங்காமெ எப்பொடா விடியலைப் பாக்கலாம்ணு தோணும். (மனசுக்குள் கோலம் போடும் அம்பிகாக்கள் பார்வையில் படாதா என்ற தேடல் இருப்பதையும் மறுப்பதற்கில்லை)
உறங்கும் மானிடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை நெஞ்சில் ஒரே பூ மழை.
எப்புடீ? படிக்கும் போதே அப்படியே வானத்திலெ உசர்ர வைக்குதில்லெ? கொஞ்சம் எறங்கி அந்தமானுக்கு வாங்க. இங்கேயும் ஒரு சீன் இருக்கு. லாக்டவுனுக்கு அப்புறம், இப்பொல்லாம் அந்தமான்லெ கார் போகும் வழியெல்லாம் மான் போகுதாம். காதலன் அந்தமானில், அந்த மானைப் பார்க்கிறான்; காதலி விழியெப் பாக்கிறான். அன்புள்ள மான்விழியே பாட்டு வருது பாருங்க…
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
இந்த மாதிரி மனசிலேயே உருகி உருகி வடிப்பதை நாம் ரசிக்காமெ இருக்க முடியுமா என்ன? ‘ஒரு’ கடிதம்; ’ஒரு’ கவிதை; இப்படித்தானே எழுதி இருக்கணும்? ஏன் ’ஓர்’ கடிதம்; ’ஓர்’ கவிதை? என கவிஞர் எழுதிட்டார்? கேள்வி நாமளும் கேப்போம்லெ…!!! ‘நற்றமிழ் எழுது பேசு’ குழுவின் குமரன் அவர்கள் தகவல் தந்து உதவினார். ஓர் சொல் = Unique Word அதாவது, அதற்கு ஒத்த சொல் இன்மை அறிந்து (வள்ளுவர் சொன்னது போல்) இருந்தா, அதுக்கும் ’ஓர்’ ஓகேவாம். ஒப்பற்ற மனிதர்களைப் பற்றி பேசும்போது நீங்கள் ஓர்….. என்று சொன்னாலும் சரியே என்கிறார். (அணிகளோடு இதெல்லாம் இலவச இணைப்போ!)
இன்னும் கொஞ்சம் மேலே போய், மகாபாரத்திலெ ஒரு கலாட்டாவெப் பாக்கலாம். நாட்டை விட்டு, காட்டுக்குப் போய், தவம் செஞ்சி அதனாலெ ஸ்லிம் ஆன அரச்சுனன், தனது வில்லை வச்சிகினு தேவர்களுக்குத் தலைவனான இந்திரனை நடுங்கும்படி போர் செய்து அசுரர்களின் குலத்தை அழித்தான். இது தான் நடந்தது. ஆனா கவிஞர் எப்புடி சொல்வார் தெரியுமா? அருச்சுனன் தவம் செய்து உடல் இளைத்த நிலையிலும், தான் ஒருவனாகவே இருந்து, தன்னுடைய வில்லின் துணைகொண்டு அசுரர் குலம் தொலைத்தான். இது தான் உள்ளத்து உயர்ச்சி (அ) ‘உள்ள மிகுதி’
மண் அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,
பண்ணும் தவத்து இசைந்த பார்த்தன்தான் –
எண்இறந்த மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர்
குலம் தொலைத்தான் கோதண்ட மேதுணையாக் கொண்டு
கம்பர் லிங்க் அனுப்பி இருந்தார். டீம்லிங்க் மூலம் பேசுவோம் என. ’நீ எழுதின பதிவை அப்படியே ஷேர் செய்’ என கோரினார். செய்தேன். தொடர்ந்து தகவல் கொட்டினார்…
உதாத்த அணியில் ரெண்டு வகை; செல்வச்செழிப்பைக் காட்டுவது ஒரு வகை; (அது தான் போன பதிவு) மேம்பட்ட உள்ளத்தின் உயர்ச்சியை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லும் ‘உள்ள மிகுதி’ அடுத்த வகை; உன் இன்றைய பதிவில் வருவது எல்லாம் அந்த இரண்டாம் வகைதான். அந்த அம்பிகா (பதி ஞாபகம் வந்திருக்குமோ), ஜெய்சங்கர் (ஆமா இதெ நன் சொல்லவே இல்லையே? கம்பனுக்கே வெளிச்சம்) பாட்டும் சேர்த்துத் தான்.
பாலகாண்டத்தில் நம்மளோட ஒரு பாட்டு இதே அணியிலெ இருக்கு. பாத்துக்க எனச் சொல்லி மீட்டிங்கிலிருந்து வெளியேறினார் கம்பர்.
கம்பர் தந்த பாடல் இதோ….
ஈர நீர் படிந்து, இந்நிலத்தெ சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை
தாரை கொள்ள தழைப்பன சாலியே.
[பாலகாண்டம் – நாட்டுப் படலம்]
குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து (வானத்தில் அல்லாது) இந்த நிலத்திலே சில மேகங்களைப் போல கருமை நிறமுள்ள எருமைகள் நடமாடும், ஊரிலே தங்கிவிட்ட கன்றை நினைப்பதாலே மென்மையான மடியிலிருந்து பாலை, தாரை சொரிவதால் அந்தப் பாலால் செந்நெற்பயிர்கள் தழைக்கின்றன்.
வானத்திலே கருமேகம்; நிலத்திலே கரு மேதி; மேய வரும் போது ஊரில் விட்டுவந்த கன்றை நினைத்த மாத்திரத்திலே பால சொரிய, அந்தப் பால் வெள்ளமெனப் பாய்ந்து செந்நெற் பயிர் தழைத்தனவாம்.
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.