[சிட்னி (ஆஸ்திரேலியா) சங்கத்தமிழ் மாநாடு 2014 மலரில் வெளியான எனது கட்டுரை இது… சும்மா எத்தனை நாள் தான் கலாய்ச்சியே எழுதுவீங்க? ஏதாவது நல்ல தமிழிலும் எழுதப்படாதா? என்று என் மீது (ரொம்ப அதிகமாகவே) நம்பிக்கை வைத்து கேட்ட ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்களுக்கு நன்றி…நானும் நல்ல தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன்…இதோ உங்கள் பார்வைக்கு…]
சங்கத் தமிழ் என்ற தேடலுக்குள் செல்லாமல், சமீப காலத்திய காப்பியமான கம்பராமாயணத்தை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கும் வேலையினை செய்து கொண்டிருந்தேன். சிட்னியின் சங்கத்தமிழ் மாநாட்டை ஒட்டி, சங்கத் தமிழின் பக்கம் ஒரு கழுகுப் பார்வை பார்த்திட வாய்ப்பு வாய்த்தது. அகநானூறு பாடல்களை வைத்து கட்டுரை வடிக்க எண்ணம். (அந்தமான் தீவில், கைக்கு எட்டிய நூல் என்ற காரணம் தவிர வேறு ஏதும் யாமறியேன்). காலத்தை மிஞ்சி நிற்கும் கவிகளின் தொகுப்பாம், சங்கத்தமிழ் வகைப்படுத்தித் தந்த அகநானுறுப் பாடலகளை இன்றைய சூழலுக்கும் பொருத்திப் பார்க்கும் முயல்வு தான் இக்கட்டுரை. என்றோ, யாரோ எழுதி வைத்த பாடல்கள் இன்றைய நவீன கணிய உலகில் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி, இயற்கையாகவே எழும். அகநானூறு பாடல்களின் உள்ளே எங்கும் புகாமல், அவைகள் தொகுக்கப் பெற்ற முறையினைப் பார்க்கும் போதே, இன்றைய நவீன யுகத்திற்கு தொடர்பு உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
அறிவியல் வளர்ச்சியினைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தாவரங்கள், விலங்கினங்கள், கணிமங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதின் மூலம் அதன் தொடர்பினையும் தெரிந்து கொள்ள ஏதுவாய் தொகுப்பு செய்யும் பணி நடைபெறும். இப்படி முயன்றதின் மூலமாகத்தான் அறிவியல் நமக்கு அதிகமாய், பெயரிடல் முறையும் பட்டியலிடும் கலையுமாய் தந்துள்ளது இவ்வுலகிற்கு. இத்தகைய தொகுப்பின் மூலமாய்த்தான் விலங்குகலுக்கு பெயரிடுவதும், தாவரங்களுக்கு அறிவியல் பெயர் சூட்டலும் நடைபெறுகின்றது. வேதியியல் பயன்பாட்டில் இருக்கும் கணிம அட்டவணையும் இந்த தொகுக்கும் அறிவியலில் அடங்கும். இவை எல்லாம் இக்கால அறிவியல் முன்னேற்றம் என்று நினைப்போம். இதற்க்கு சற்றும் முறைவான தரம் என்று சொல்ல இயலாதவாறு அகநானூறு பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன சங்க காலத்திலேயே என்பது வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
பெயருக்கு ஏற்றபடியே, அகம் தொடர்பாய் மொத்தம் நானூறு பாடல்கள்.. (நானூறு பாடல்களின் தொகுப்பு என்பதாலேயே அதன் பெயரும் இப்படி) அந்த பாடல்கள் எல்லாமுமே ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன. பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்ட சேதி தான் நாம் அனைவரும் அறிந்த்து தானே? எல்லாப் பாடல்களிலும் ஏதோ ஒரு நிலம் நிச்சயமாய் சம்பந்தப் பட்டு தானே இருக்கும்? அந்த்த் தொடர்பினை வைத்து பாடல்களின் தொகுப்பு நிகழ்ந்துள்ளது. கணிய அறிவியலில் உயிர்நாடியான ஒழுகுபடம் (ஃப்ளோ சார்ட்) மூலம் இதனை நாம் உற்று நோக்கலாம்.
சங்ககாலத் தமிழனின் அறிவியல் பூர்வமான சிந்தனை வடிவாக்கத்தில் அகநானூறுப் பா பாடல்கள் தொகுத்துள்ளனர் என்கின்ற உண்மையினை இந்தச் சிட்னி சங்கத்தமிழ் மாநாட்டில் பதிவு செய்திட விழைகின்றேன். இதோ இதற்கு சான்று சொல்லும் சங்க காலத்துப் பாடல்:
ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.
இனி சற்றே ஓரிரு பாடலை உள் நோக்கி, படித்து இன்புற அகத்தின் உள் செல்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் தீவுகளாம் அந்தமான் நெய்தல் நிலத்தினின்று பல வருடங்கள் வாழ்ந்து வரும் காரணத்தால் நெய்தல் நிலப் பாடல்கள் சில்வற்றை நோக்குங்கால், அன்றைய தமிழரின் அறிவியல் பார்வையும் உடன் தெரிய வந்தது. கடல் மட்டம் ஏறி இறங்கும் இயற்கை நியதியினை அன்றே தெரிந்து சொன்ன, அகப்பாடல் வரிகள் சொல்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையினை தோழி விவரிக்கும் போது,கடலின் இயற்கையான சூழலான அலைகளோ, ஏறி இறங்கும் ஓத மாற்றங்களோ (டைட்) இல்லாமல் இருந்தன என்பதை சேந்தன் கண்ணனார் “ எறிதிரை ஓதம் தரல் ஆனதே” என்று குறிப்பிடுகின்றார். [பாடல் எண் – 250; நெய்தல் நிலப்பாடல் என்று சொல்லவும் வேண்டுமோ?]
நக்கீரணார் பாடிய இன்னொரு பாடலின் மூலம் வடநாட்டவருடன் வியாபாரத் தொடர்புகள் இருந்த செய்தியும் தெரியவருகின்றது. அப்போதே பிடித்த மீனுக்கு பண்டமாற்றாய் கிடைத்த வெண்ணெய் என்ற செய்தியும் கூடவே வருகின்றது. அந்த நெல்லின் மாவினைத் தயிரிட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை தந்ததாய் தகவல் சொல்கின்றது. அப்படியே மணம் பொருந்திய சாந்து உண்டாக்கும் வித்தை சொல்ல வந்த நக்கீரணாரோ, வடநாட்டினரிடமிருந்து வாங்கிய வட்டக்கல்லிலே அரைத்த சேதியும் சொல்கின்றது.
“….வடவர் தந்த வான் கேழ் வட்டம்; குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய; வண்டிமிர் நற்சாந்து அணிகுவம்- திண்திமில்…” இப்படிச் செல்கின்றது அந்த அகநானூற்றுப் பாடல், அகநானூற்றுப் பாடல்கள் இன்றைய சூழலில் ஏற்றவையாக, அறிவியல் மற்றும் வரலாற்றுக் கோப்புகளின் பெட்டகமாய் விளங்குகின்றது என்பது தான் இக்கட்டுரை மூலம் சொல்லவந்த கருத்து.