கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 7
உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய, கலைக்கோட்டு முனிவரை மகளிர் சந்திக்கும் சந்திப்பை இன்று கம்பன் வரியில் பார்க்கலாம். முனிவரே ஆனாலும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி வரவேற்க வேண்டும் என்பதை நாம் இச்சந்திப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கொரோணா வந்த காலத்தில் தான், வீட்டுக்கு வந்தவுடன் கையினைச் சுத்தப்படுத்துங்கள் என அரசு உத்திரவே வந்து விட்டது. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே கம்ப உத்திரவு அப்படித்தான் சொல்கிறது. வீட்டிற்கு யார் வந்தாலும், கைகழுவ நீர் தர வேண்டும் என்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளாக, கை கழுவவும், கால் அலம்பவும், வாய் கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும். இவைகளை அருக்கியம், பாத்யம், ஆசமணீயம் என்பர் வடநூலார். இதனையே இந்தச் சந்திப்பில் கம்பரும் ‘அருக்கியம்’ என்று சொல்கிறார்.
வந்தவருக்கு உரிய உட்கார இடம் அடையாளம் காட்டுங்கள். உட்காரவும் சொல்லுங்கள். கலகலவென்று முகம் மலர்ந்து சிரித்தபடி பேசி வரவேற்று உபசரிப்பு செய்யுங்கள். (கம்பர் தான் இத்தனையும் சொல்கிறார்).
கம்பரின் பார்வை அப்படியே வந்த மகளிரின் பக்கம் செல்கிறது. சிவப்பு நிறம் பளிச்செனத் தெரிகிறதாம். இக்காலத்து நட்சத்திர விடுதிகளின் வரவேற்பாளினிகளின் உதட்டுச் சாயம் போல். நமக்கு மனதில் இப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் கம்பர் மனதிலோ, அந்த சிவந்த உதடுகளைப் பார்த்தவுடன் முருக்கு (முள் முருங்கைப்) பூ நினைவுக்கு வந்ததாம்.

அப்புறம் விருந்தாளிகளுக்கும் ஒரு ஆலோசனை. எவ்வளவு தான் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் ரொம்ப நேரம் கடலை போடக்கூடாது அவர்கள் வீட்டில். (அவர்களுக்கு சுந்தரி தொடர் பார்ப்பது போன்ற பல முக்கிய அலுவல்களும் இருக்கலாம்) எனவே சட்டென்று கிளம்பி விட வேண்டுமாம்.
வடிவேலு துபாய் போய் வந்த கதையினைத், தன் மாப்பிள்ளையிடம் சொன்னதை சற்றே நினைவில் கொள்க.
ஏண்டா மாப்பிள்ளை! துபாய் ரோட்டைப் பாத்திருக்கியாடா நீ?
நானெங்கே பாத்தேன்! நீதான் தென்காசிக்குப் போயிட்டு வந்த மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு போயிட்டு வர்ரே!

இதில் வரும் வடிவேலின் மாப்பிள்ளை, பயன்படுத்திய பொசுக்கென்ற சொல், விரைவுக் குறிப்புச் சொல்லாம். கம்பன் பயன்படுத்திய பொருக்கென என்பதைத்தான் இப்படத்தில் பொசுக்கென பயன்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.
மேலும் சில விரைவுக் குறிப்புச் சொற்கள் பார்க்கலாமே! பொள்ளென, பொருக்கென, கதுமென, சடக்கென, மடக்கென, திடீர் என போன்றவை விரைவுப் பொருளில் வரும் வார்த்தைகள். எடுத்துக்காட்டு சொன்னால் எளிதில் விளங்கிடுமோ!
பொள்ளெனப் பொழுது விடிந்தது
திடீரென மறைந்து விட்டான்
மற்ற விரைவுக் குறிப்புச் சொற்களையும், இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்களையும் இலக்கியங்களில் மட்டுமே பார்க்கலாம் (சில நேரங்களில் வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளிலும் பார்க்கலாம்).
அப்புறம் அதென்ன முனிவனைத் தொழா…? முனிவனை வணங்காமலா? அது தான் இல்லை. பொய்கை ஆழ்வார் பாசுரம் ஒன்றையும் துணைக்கு கையோடு எடுத்துப் பார்க்கலாமே!
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலைநஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி.
எனது வாயானது எம் பெருமானைத் தவிர மற்றொன்றைப் புகழாது. கைகள், உலகங்களைத் தாவி அளந்து கொண்ட திரு விக்கிரமனை அல்லாது வேறு ஒருவனைத் தொழ மாட்டா; பூதனையின் மார்பகங்களில் தடவியிருந்த நஞ்சை உணவாக உண்ட கண்ணபிரானுடைய திருமேனியையும், திருநாமத்தையும் அல்லாது மற்றெதையும் கண்கள் காணாது. காதுகள் கேட்காது. சுருக்கமாய்ச் சொன்னால் உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே; விதை இல்லாமல் வேரில்லையே என்ற இன்றைய வரிகளின் புத்தம் பழைய வரிகள் அது.
எதுக்கு இவ்வளது தூரம் பேசாமல் வள்ளுவனையே அழைக்கலமே!
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!
இனிமேலும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். கம்பனின் சந்திப்புப் பாடலை முழுதும் ஒரு முறை பார்த்துவிடலாம்.
அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து
”இருக்க” என இருந்த பின் இனிய கூறலும்
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர்.
அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து அமர்வீராக என முனிவன் கூற, அந்த மகளிர் அமர்ந்ததன் பின்னர், இனிய உரையால் முகமன் கூறி வரவேற்க முருக்கம் பூப் போன்ற உதடுகளை உடைய அப்பெண்கள் அந்த முனிவனைத் தொழுது (பின்பு) விரைந்தெழுந்து சென்று தமது பன்ன சாலையை அடைந்தனர்.
சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
10-08-2022