கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 8
உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்தது. அதனைக் களைய, கலைக்கோட்டு முனிவரை மகளிர் அழைத்து வந்தனர். அந்த முனிவருக்கும் நம் அரசனுக்கும் இடையே நடக்கும் சந்திப்பை நாம் ஒரு 360 டிகிரியில் பார்க்க உள்ளோம் இன்று கம்பன் வரியில்.
360 டிகிரி அப்ரைசல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஊழியரின் திறனை மதிப்பிடுவதற்கு இது பயன்படுகிறது. ஒரு நபரை மதிப்பீடு செய்வதற்கு, தலைமை அதிகாரி, உடனடியான மேலதிகாரி, கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், உடன் பணியாற்றும் சக பணியாளர்கள், அவருடைய சுய மதிப்பீடு இவை எல்லாவற்றையும் வைத்து செய்யப்படும் ஒரு முடிவு தான் இந்த வித்தை. ஒரு ஊழியரைச் சுற்றி இருக்கின்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு, அவரைப்பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து, அதன் பின்னரே அவருக்கு பதவி உயர்வு போன்றவைகள் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த 360 டிகிரி அப்ரைசல் அலசுகிறது.

நம்முடைய HR ஆசான் திருவள்ளுவர் இதைப்பற்றி ஏதும் சொல்லி இருப்பாரே என்று 360 ஆம் குறளை சற்றே புரட்டிப் பார்த்தேன்.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
ஒன்றின் மீது ஏற்படும் அதீத விருப்பின் காரணமாய், அது கிடைக்காத போது வெறுப்பு மேலிடுமாம். பின்னர் அறியாமை கூடவே வருமாம். ஆக இந்த மூன்று குற்றங்கள் இல்லாமல் இருந்தால் ஒரு துன்பமும் இல்லாத மனிதனாய் அவன் இருப்பான். அவனை வைத்து நாம் வேலையெ வாங்கிக்கிடலாம் என்கிறார் ஐயன் வள்ளுவன்.
காமமும், வெகுளியும், களிப்பும் என்ற அதே வள்ளுவனின் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் கம்பன். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய முனிவர்களுக்கெல்லாம் தலைவனாம் அந்த கலைக் கோட்டு முனிவன். மகளிர் செய்த சூழ்ச்சியினால் இங்கு வந்தவன்.
வந்தவரை வரவேற்கும் மரபு இருக்கிறதே! இரண்டு ஓசனை தூரம் வந்து வரவேற்றாராம் அரசன். அது என்ன ஓசனை? என யோசனை வருகிறதா? அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் கூப்பிடு தொலைவு என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் அழைக்க இன்னொருவர் கேட்கும் தூரம் தான் அது. ஜெரவா மாதிரியான ஆதிவாசிகளுக்கு அது பல கிலோமீட்டர்கள் வரை நீளும். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆன மனைவியைப் பொறுத்தவரை அது சுழியமாகவே இருக்கும். இருந்தாலும், நம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஒரு பார்வை பார்த்திடலாம்.
திருநள்ளாற்றுப் புராணம் 191 ல், காவிரி தெற்கு ஒன்றரை காதம் சிவன்தன் தருப்பை வனம் சிறப்பெனல் எனச் சொல்கிறது. இந்த தூரத்தை கூகுளாண்டவர் மூலமாக அவரின் நிலவரைபடம், வழியாக அளந்து பார்த்தால், 2.5 கிமீ ஆகிறது. இது திருநள்ளாற்றுப்புராண பாடலின்படி ஒன்றரைக் காத தூரம் ஆகும். ஆக, ஒரு காத தூரம் என்பது 1.67 கிமீ ஆகிறது.
திருமந்திர பாடலின் முலமாய்ப் போய்ப் பார்த்தால், கூப்பிடு தூரம் = இரு காதம்
ஆக கூப்பிடுதூரம் (1.67 கிமீ வகுத்தல் 2) = 835 மீட்டர்கள்.
4 கூப்பீடு = 1 காதம் 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை 26.8 கி.மீ ஆக ஒரு ஓசனை தூரம். இரண்டு ஓசனை என்பது கிட்டத்தட்ட சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை இருக்கும் தூரம் என வைத்துக் கொள்ளலாம்.
ஆமா… இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா? அவ்வளவு தொலைவில் வந்து, அரசன் எதிர் கொண்டு வரவேற்பு தந்தானாம். கூடவே கூந்தல் மணம் கமழும் (இயற்கையா? செயற்கையா? சரியாக விளக்கமில்லை) மகளிரும் வந்தார்களாம். இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இதோ கம்பன் வரிகளில்:
‘என்று எழுந்து. அரு மறை முனிவர் யாரொடும்
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்சேர
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் – குவவுத் தோளினான்.
திரண்ட தோள்களை உடைய மன்னன் உரோமபதன் நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து புறப்பட்டு, அரிய வேதங்களைக் கற்ற முனிவருடன் இரண்டு யோசனை தூரம் எதிர் சென்று, மணமும் அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே சிறந்த தவமலை போன்றவளாகிய கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.
சிந்திப்புகளுடன் அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும்…
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
15-08-2022