கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 5
கம்பன் காப்பியத்தில் இன்று நாம் காண இருப்பது நேரடியான சந்திப்பு அல்ல. வசிட்ட முனிவர் சொன்ன ஒரு சந்திப்புக் காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் போனதாம். அக்குறையினைக் களைய முனிவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. மழை என்றதும் நமக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மராபிலேய்… ஹொய்
வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே…
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே
இப்படி ஒரு பாடல் யேசுதாஸ், சித்ரா குரலில் தேனைக் குழைத்துத் தந்தது போல் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். மழை என்றாலே மகிழ்வு தான். அந்தமானில் இருப்போர்க்கு இந்த மழை அடிக்கடி, பல மாதங்களுக்கு வந்து இன்பம் தந்து கொண்டிருக்கும். மழை இல்லை என்றால் குடிநீருக்கும் சிக்கல் தான். ஏன் மழை இல்லாமல் போகிறது? நல்லவர்கள் நாட்டில் குறைவது தான் காரணம் என்கிறது மூதுரை. ரொம்பவெல்லாம் வேண்டியதில்லை. நல்லார் ஒருவர் இருந்தாலும் போதுமாம் மழை பெய்ய.
நம் கல்லூரித் தோழரும் நல்லவருமான அந்த ஒருவர் கதை பார்ப்போம். பொதுவாக யாருக்காவது சிரமம் வந்து, அது நல்லபடியா சரியானால், கடவுளுக்கு நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வர். பொங்கல் வைப்பது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது இப்படி இத்யாதி இத்யாதி. நம் நல்லவரோ, வித்தியாசமான நேர்த்திக்கடன் வேண்டி இருக்கிறார். வருஷத்துக்கு ஓர் இலட்சம் என ஏழைகளுக்கு மருத்துவச் செலவு செய்வதாக. அதுவும் ஐந்து ஆண்டுகள்.
சரி எப்படி உதவ? அதுக்கு ஒரு நல்லவன் தேவைப்பட, நான் அகப்பட்டேன். (இன்னுமா என்னை இந்த உலகம் நல்லவன்னு நம்பிட்டிருக்கு!!) கோவையில் உள்ள ஒரு டாக்டரிடம் விசாரித்த போது, உடன் நோயாளி தயாராய் இருப்பதைச் சொன்னார். தான் வாங்கும் ஃபீஸ் எல்லாம் தள்ளுபடி செய்து உதவ முன் வந்தார். அதெப்படி டிவி நியூஸ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நல்லவர்களாகவே நிறைந்து இருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருந்தது. உதவியது யார் என்றே தெரியாமல், ஓர் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட திருப்தி நம் நண்பருக்கு. தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
நம் நல்ல(வர்) நண்பர் உதவியால் கோவை மருத்தவர், ஏழை நோயாளிகளுக்கு உதவி செய்ய, அது அரசல் புரசலாக வெளியே தெரிந்திருக்கிறது. நாமும் செய்வோம்லே என்று ஒரு குணமடைந்த நோயாளி, 1000 பவுண்ட் (ஏறக்குறைய ஒரு லட்சம்) தந்து விட்டு, அந்த நண்பர் மாதிரியே உதவுங்க எனச் சொல்லிட்டுப் போனாராம். இப்ப தெரிகிறதா கோவையில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணம்?
அப்படியே மழை இல்லாமல் இருந்தால், நல்ல காரியங்கள் செய்யத் தொடங்கினால் போதுமாம்! இப்படித்தான் ஒரு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில், முனிவர் ஒருவர் வசித்து வந்தாராம். அதன் அருகே ஒரு கிராமத்தில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதாம். குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கவலையோடு இருந்தனர். ”இன்னும் சிறிது நேரத்தில், இங்கே மழை பொழிய வைத்து, கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தையும் போக்கப் போகிறேன்; ஆனால், அதற்கு முன், நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்…” என்றாராம் வந்தவர். உங்கள் கிராமம் செழிப்படைந்த பின், தான, தர்மங்கள் செய்வதை அதிகப்படுத்த வேண்டும். என்ற உறுதிமொழி வாங்கி பின்னர் மழை பொழிய வைத்தாராம்.
இதெல்லாம் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா? வெளிநாட்டில் நடந்த சமாச்சாரம் என்றால் நீங்கள் எளிதில் நம்பிட ஏதுவாக இருக்கும். அது 1991 இன் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணம். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மழை இல்லையாம். இந்தியாவிலிருந்து சென்ற யோகி ஒருவர்தான் யாகம் வளர்த்து மழை பெய்ய வைத்தாராம். முதலில் யாகம் வளர்த்த போது, பக்கத்து வீட்டுக்காரரோ தீயணைக்கும் படைக்கு தகவல் சொல்லி யாகத்தை நிறுத்திவிட்டாராம். பின்னர் தான், மழை அவர்களுக்கும் தேவை என்பதால் அனுமதி தந்தார்களாம். யாகம் நடந்த ஒரு வாரகாலத்தில் 08-07-1991 இல் நல்ல மழை பொழிந்ததாம் சுவாமி லக்ஷ்மன் ஜு ரைனா அவர்களின் கைங்கரியத்தால்.
அதென்ன நல்ல மழை என்று கேட்கிறீர்களா? தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான அளவு பெய்தல் தான் நல்ல மழை எனப்படும்.
இப்படித்தான் உரோமபத மன்னன் ஆட்சிக் காலத்திலும் மழை இல்லாமல் சிரமப்பட்டார்களாம். அப்போதைய முறைப்படி (ஏன் இப்போதைய நடைமுறையும் கூட) ஏதாவது சிக்கல் வந்தால் முனிவர்களிடம் ஆலோசனை கேட்கும் சந்திப்பு நிகழ்கிறது. நாம் பார்த்த ஜு ரைனா மாதிரி அந்தக் காலத்தில் கலைக்கோட்டு முனிவர் வந்தாலாகும் என முனிவர்கள் சொன்னார்களாம். இப்படிச் சொல்கிறது கம்பனின் சந்திப்பின் வரிகள் இதோ.
‘அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
நெடுங் காலம் அளவது ஆக.
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம்
பெருகுதலும். வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து. மா தானம்
கொடுத்தும். வான் வழங்காது ஆக.
பின்னும். முனிவரர்க் கேட்ப. “கலைக்கோட்டு-
முனி வரின். வான் பிலிற்றும்” என்றார்.
அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில் நீண்ட கால அளவாக மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால் கொடிய துன்ப நோய் மிகவே அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.
சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
28-07-2022
super
மிக்க நன்றி