கம்பன் பார்வையில் வெற்றிலை


பொதுவாவே ஆஃபீசில் ஏதாவது கடிதம் எழுதிட்டு வரச்சொல்லும் போது, அதில் திருத்தங்கள் செய்வதை பெரும்பாலும் பணியாளர்கள் விரும்புவதில்லை. அடிக்கடி மாத்தி மாத்தி திருத்தம் செய்யும் மேலதிகாரிகளை பணியாளர்கள் வெறுக்கவே செய்வார்கள். இவ்வளவு தெரிஞ்ச பெரிய மனுஷன் அந்தக் கடிதாசியையும் அவரே (அந்த நாயே என்பதை சபை நாகரீகம் கருதி எழுதலை) எழுதி இருக்க வேண்டியதுதானே? சாதாரண கடிதமே அப்படின்னா, கட்டிடம் கட்டுபவர் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு கட்டிடத்தை கட்டுபவரிடம், ஏதாவது குறை இருக்கிறது என்று சொல்லி,  அதனை இடித்து விட்டு மாற்றிக் கட்டுங்கள் என்றால் போதும். அவருக்கு வருகின்ற கோபத்திற்கு அளவே இருக்காது. கட்டும்போதே, பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே! (வெளக்கெண்ணெய் – இதுவும் சபை நாகரீக ஏற்பாடு தான்).  அப்பவே திருத்தி இருப்போமே! என்று கோபம் வெடிக்கும். அப்படியே அவர் கட்டியதை இடித்தாலும், அவர் இடிக்கும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! இடது கையிலும், இடது காலிலும் உதைப்பார்.. இடிக்கச் சொன்னவரையே தன் காலில் உதைப்பது போல். அப்படி இல்லாமல், ஒரு வெத்திலை மிகப்பெரிய கட்டுமானம் செய்ய உதவி இருக்கு என்பது ஆச்சரியமா இருக்கில்லே!

தமிழ் திரையுலகில் அகன்ற திரையில் முதன் முதலாக ஒரு படம் வந்தது, ராஜராஜ சோழன். அதில் கதாநாயகன் ராஜராஜ சோழனை அறிமுகம் செய்து வைக்கும் இடமே மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒரு சிற்பி செதுக்கி கொண்டிருப்பார். அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பையன் வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சென்றுவிட, அவ்வழியாக வந்த ராஜராஜசோழப் பேரரசர், அந்த சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பார். சிற்பி துப்பியதையும் செம்பில் எடுத்துக் கொண்டிருப்பார். தனக்காய் வெற்றிலை மடித்துத் தந்தும், எச்சிலும் ஏந்திய ஓர் அரசனுக்கு நல்ல கட்டுமானம் தராமலா போயுடுவார்கள்? அதன் நிரூபனம் தான் தஞ்சை பெரிய கோவில்.



இப்படித்தான் வெங்கனூர் என்ற ஓர் ஊர்ல, தியாகராஜர் ரெட்டியார் என்பவர் ஒரு கோயில்ல கட்டுவதற்கு உதவிகள் செஞ்சிட்டு இருந்தாராம். ரொம்ப பிரமாதமா, கோயில் சிறப்பாவே எல்லாம் செஞ்சிட்டு இருந்தாங்களாம். அவரும் ஒரு தடவை இந்த மாதிரி (சினிமாஸ்கோப் படம் எல்லாம் பார்க்காமல்), ஒரு சிற்பிக்குத் (தெரியாமலேயே) வெற்றிலை மடித்துக் கொடுத்தாராம். அத அப்புறமா தெரிஞ்சிட்டு அந்த சிற்பி, அதுவரைக்கும் பிரமாதமாக கட்டியிருந்த அந்த கோயில் எல்லாம் பிரிச்சிட்டு, இன்னும் பிரமாதமாக் கட்டினாராம் அந்த சிற்பியின் தலைவன். வெற்றிலை மடித்து கொடுத்த ஆளுக்கு, இந்த மாதிரியான சாதா கோவில் சிற்பம் எல்லாம் சரி வராது. இன்னும் சிறப்பாக ஸ்பெஷல் சிற்பம், சிறப்பா செஞ்சி கொடுத்தாங்களாம்.

உடனே ஆதாரம் கேப்பீங்களே! என் சரித்திரம் என்று உ வே சாமிநாதையர் தன்னுடைய சுயசரிதையை எழுதி இருக்கிறார். (அந்த தமிழ்த் தாத்தாவே தான்) அதில் தான் இந்த வெற்றி(லை)க்கதையெச் சொல்லி இருக்கார். உடனே ஓடிப்போய் என் சரித்திரம் படிக்கத் தேட்றீகளா? ஹலோ ஹலோ… அவ்வளவு சீக்கிரம் எல்லாம் படிச்சிட இயலாது. 960 பக்கம் இருக்குதுங்கோ!  ஆனா படிக்க ஆரம்பிச்சுட்டீங்க…. ஏதோ துப்பறியும் நாவல் மாதிரி அம்புட்டு விறுவிறுப்பா போயிட்டே இருக்கும்! உங்கள கூட்டிக்கொண்டு போய் 1870 களில் உக்கார வச்சிடும். அப்போ எப்படியெல்லாம் சிரமப்பட்டுத் தமிழ் கற்று, தமிழ் வளர்த்திருக்கிறார்கள்? என்பது ரொம்ப நல்லாவே தெரியவரும்! இப்ப எவ்வளவு வசதிகள்? கம்ப்யூட்டர் என்ன? இன்டர்நெட் என்ன? சொல்லச் சொல்ல டைப் அடிக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்ன? இவ்வளவு வச்சுக்கிட்டு நாம் என்ன செய்கிறோம் என்று கேள்வி கண்டிப்பாக மனசுல உதிக்கும், உவேசாவின் சுயசரிதம் படித்தால்.

அது சரி… அம்புட்டு வேலை செய்ய வைத்த அந்த வெத்தலை, அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? இந்த வெத்திலை பலான வேலைகளுக்கும், கரு உருவாகமல் இருக்கவும் பயன் படுமாம்.  வெத்தலை பாக்கு சுண்ணாம்பு இந்த மூணு செமெ காம்பினேஷன் தான். காலை உணவுக்குப் பின், பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு மிக குறைவாகவும் வச்சிக்கணுமாம். அப்பத்தான் பித்தம் ஏறாது என்பர்; மலச்சிக்கலும் வராதாம். மதியம், சுண்ணாம்பு அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வாயு கட்டுப்படும்; ஜீரண சக்தி அதிகரிக்கும். இரவு, வெற்றிலை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கபம் தங்காது; சளி வெளியேறி விடும். இப்படி மூன்று வேளையும் மெல்லுவதால், வெற்றிலையில் உள்ள மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, ‘கால்சியம், இரும்பு சத்து’ போன்றவை இயல்பாக உடலுக்குக் கிடைக்குமாம். ஆனா நாமதான் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காமெ ஒரே மாதிரி பீடாவை போட்டு சாப்பிட்டு இருக்கோம்? (வீட்டுத் தோட்ட்த்திலும் கூட வெற்றிலைக் கொடி இருக்குதுங்கோ…!)

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் கம்பர் ஏதாவது வெற்றிலை பத்தி எங்காவது சொல்லியிருக்கிறாராண்ணு பாக்கலைன்னா அது தெய்வ குத்தம் ஆயிடும்லெ! இணையத்தில் தேடிப் போனா, எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒரே இடத்தில் போய் நிக்குது. சீதை அசோகவனத்தில் இருக்கிறப்போ, ராமரைத் தேடி யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பது ராமனால் முடியாதே! இப்படிக் கவலைப்பட்டாகளாம் சீதையம்மா. அதை ஒட்டிய பாடலில் அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;அப்படிப் போகுது கம்பனின் வரிகள். அதில் மெல் அடகு என்பதை வெற்றிலை என்று சிலரும், கீரை எனப் பலரும் பொருள் சொல்கின்றனர்.

அடுத்து இன்னொரு இடம் பரவலாக சொல்லப்படுது. சீதையம்மா விரக்தியில் இருந்த நேரத்தில், அனுமன் வந்து நல்ல செய்தி சொன்னார். அதனால் மகிழ்ந்த சீதை, அவரைப் பாராட்டும் விதமாக தலையில் வெற்றிலை வச்சு ஆசிர்வாதம் செஞ்சதா பல இணையதளங்கள் சொல்லுது. கம்பர் சொன்னதா வேறு சொல்லுது. ஆனா கம்பருடைய பாடல்களை தேடித் தேடி பார்த்தா அந்த மாதிரி தெரிஞ்ச மாதிரி இல்லை. வால்மீகி ராமாயணத்தை அப்படியே மேலோட்டமா (எதையுமே ஒழுங்காத்தான் படிப்பதில்லையே!) படிச்சு பார்த்தா அதுலயும் ஒன்னும் கிடைச்ச மாதிரி தெரியல.

அப்ப எங்கேதான் கம்பர் வெற்றிலையெக் கொண்டு போய் வச்சாரு? கம்பருக்கும் வெற்றிக்குமாவது தொடர்பு இருக்கா இல்லையா? கண்டிப்பா இருக்கு. கம்பருக்கும் சோழ மன்னருக்குமிடையே  ஒரு சின்ன கருத்து மோதல். கம்பர் கோவிச்சிட்டு சேர நாட்டுக்குப் போய்விடுகிறார். ஆறு ஏழு ரீலுக்குப் அப்புறம், சோழ மன்னன், கம்பரை அழைக்கிறார். கம்பரை ஒரு பல்லக்கில் வைத்து சோழ நாட்டு எல்லைக்கு கம்பருடன் சேரனும் ஒரு அடைப்பக்காரன் (வெற்றிலை வைத்திருக்கும் பெட்டியினை வைத்திருப்பவன்) ரூபத்தில் செல்கிறான். அடைப்பக்காரன் தந்த வெற்றிலையை வாயில் போடாது தனது விரல்களுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறார் கம்பர். சோழன், இது என்ன சமாச்சாரம்? எனக் கேட்க, அடைப்பக்காரராக வந்தது சேர மன்னன் என்பதால் தான். அந்த வெற்றிலையை வாயில் போட்டிருந்தால் அரச பதவிக்கு அது அவமானம் என கம்பர் கூறுகிறார்.
 

கம்பர் வாழ்க்கையில் இப்படி ஒரு சூப்பர் சீன் நடந்திருப்பதை ராமாயணத்தில் தராமலா  இருப்பார்? கம்பர் தன்னுடைய வெற்றிலை புராணத்தை ராவணனுடைய அறிமுகத்தில் காட்டுகிறார். ஊர்வசி இருக்காகளே ஊர்வசி, அவங்க உடைவாளை எடுத்து வராங்களாம். ராவணனுக்கு பின்னாடி மேனகை வெற்றிலையெக் பக்கத்திலிருந்து கொடுத்திட்டே வாராங்களாம்…வெற்றிலை வந்து விட்டதால் கதையெ நிப்பாட்டிட்டு பாட்டு பார்ப்போம்.

உருப்பசிஉடைவாள் எடுத்தனள் தொடர, மேனகைவெள்ளடை உதவ,
செருப்பினைத்தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர்குழாம் புடை சுற்ற,
கருப்புரச்சாந்தும், கலவையும், மலரும், கலந்துஉமி்ழ் பரிமளகந்தம்,
மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக் கைவாய் மூக்கிடை மடுப்ப;
(
சுந்தர காண்டம் 407)

ஊர்வசியானவள் உடைவாளை எடுத்துக் கொண்டு பின்னே வரவும்,
மேனகையானவள்  பக்கத்திலிருந்து வெற்றிலையை  வழங்கவும், திலோத்தமையானவள் செருப்பைச் சுமந்தபடி போகவும்,  மற்ற  தேவ மகளிரின் கூட்டம் பக்கங்களில் சூழ்ந்து வரவும், அவன் மேனியைச் சார்ந்த கர்ப்பூரம் கலந்த சந்தனம் குங்குமம் முதலியவற்றின் சாந்தும் பலவகைப்  பூக்களும் ஒன்று சேர்ந்து  வெளிப்படுத்தும் நறுமணமானது, மலைகளை ஒத்த  திக்கு யானைகளின் புள்ளிகளைப் பெற்ற துதிக்கையிலே உள்ள மூக்கில் கலக்கவும், (இராவணன் வந்தான்).

இன்னொரு பக்கம் போனா கொங்கு மங்கல வாழ்த்து கம்பர் தான் எழுதியது எனச் சொல்கிறார்கள். 1913 ல் வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கு. இந்தக் கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்திலும் பல இடங்களில் வெற்றிலை சொல்லப்படுது. மங்கலம் நிறைந்த வெற்றிலைக்கும் நம்முடைய கட்டுமானத்துக்கும், கம்பனுக்கும் தொடர்பு ஏதோ ஒரு வகையில் (பல வகைகளில்)  இருக்கத்தான் செய்யுது. மீண்டும் வேறு ஒரு கோணத்தில் கம்பனைப் பார்ப்போம்

4 thoughts on “கம்பன் பார்வையில் வெற்றிலை

  1. அருமை

    On Sat, Jan 22, 2022, 19:45 அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:

    > Tamil Nenjan posted: ” பொதுவாவே ஆஃபீசில் ஏதாவது கடிதம் எழுதிட்டு
    > வரச்சொல்லும் போது, அதில் திருத்தங்கள் செய்வதை பெரும்பாலும் பணியாளர்கள்
    > விரும்புவதில்லை. அடிக்கடி மாத்தி மாத்தி திருத்தம் செய்யும் மேலதிகாரிகளை
    > பணியாளர்கள் வெறுக்கவே செய்வார்கள். இவ்வளவு தெரிஞ்ச பெரிய மனுஷன் அந்தக”
    >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s