இளைய நிலா பொழிகிறது….


இளைய நிலா பொழிகிறது….
[கார் நாற்பதில் கம்பராமாயணம் -19]

இளைய நிலா பொழிகிறது என்ற எஸ்பிபியின் குரலில் என்றும் ஓர் இளமை துள்ளும். இளமையாக இருக்கிறீங்க என்ற மந்திரச்சொல்லே மந்திரம் மாதிரி வரம் அள்ளி வழங்கும். நவீன சுயம்வரம் ஒன்றுக்கு (அதுவும் கூட இப்பொ ஆன் லைன் தானே) நானும் தலைகாட்ட, ”மாப்பிள்ளையோ என்று நினைத்தேன்” என்ற கமெண்ட் வந்தது தான் தாமதம், வீட்டம்மாவிடமிருந்து இந்த மாதிரியான மீட்களுக்கு எனக்கு தடா வந்து விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, இளையர் என்று இலக்கியங்களில் பல இடங்களில் கண்ணில் படுது. (இளமைன்னா நம்ம கண்ணிலும் படாமலா போகும்?) தேரில் இருப்பவன் திடீரென்று குதிரையை வேகமாக ஓட்டு என்கிறான். போர் தான் முடிந்ததே? இன்னும் வேகமாப்போய்…என்ன அக்கப்போர் இது? என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான் அந்தச் சாரதி.

என்ன காரணமாம்? இதோ தலைவன் அங்கே கண்ட ஒரு சாதாரணமான காட்சி… அழகான ஆண் கோழி ஈர மணலெக் கிண்டி கிழங்கெடுக்காமல் புழுவை எடுத்து பேடைக்குக் கொடுத்ததாம்.உடனே தலைவனுக்கும், போரில் வெற்றியும், ஈட்டிய பொருளும் சேர்த்து பேடை முன் நிற்க வேண்டும் என நினைப்பு வந்ததாம். (ஆமா நாமளும் தான் எத்தனையோ கோழிகளைப் பாத்திருக்கோம் இந்த மாதிரி நெனெப்பே வரலையே நமக்கெல்லாம்.) நற்றிணையில் மருதன் இளநாகனாருக்குத்தான் இப்படியான யோசனை எல்லாம் வரும். (பேசாமெ இள கிருஷ்ணமூர்த்தி என பேர் மாத்தி வச்சிப் பாக்கலாமோ?) இங்கு இளையர் என்றால் அது வீரரைக் குறிக்கும்.

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ
….. புலரா ஈர்மணல் மலரக் கெண்டி
நாளிரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

திரைப்படங்களில் இளமை என்றும் மாறாது இருக்கும் (நாயகர்களுக்கு அடுத்து) நம்ம நகைச்சுவை சூரி, சந்தாணம், விவேக் போன்றோர்கள். அவர்கள் தான் இந்த காதலியிடம் தூது போகும் வேலையினைச் செய்வோர். தொலகாப்பியர் இவங்களுக்கு இளையர் எனப் பேர் வச்சிருக்கார். வடிவேலு பாஷையில் அங்கே போய் இதர் ஆவோ என்று சொல்வது போல, தூது செல்ல 12 வாயில் இருக்கு என்கிறார் அந்த இலக்கணப் பேராசான்.

தோழி (அது தான் டாப் சாமீ); தாயே (தாயுமா…?), பார்ப்பான் (அட நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி..புர்…. மாதிரியோ?), பாங்கன் (அட நம்ம பக்கத்து, அடுத்த வீட்டுக்காரன் – சண்டெ போடாமெ சுமுகமான உறவில் இருந்தால்…),
பாணன் (அடெ நம்ம ஸ்ம்யுல் பாடகர்கள் உட்பட அனைத்துக் கலைஞர்களும்தான்)
பாடினி (நம்பி தூது அனுப்பலாம், தாளம் தப்பாமல் பாடுவர்)
இளையர் (அடநம்ம சந்தானம், சூரி, விவேக்)
விருந்தினர் (மயில்வாகனம்….என அழைத்து விருந்தளித்து உபயோகிக்கலாம்)
கூத்தர் (சின்னத்திரை நடிகர்களையும் வச்சிக்கலாமா?)
விறலியர் (ஆடிக் கறக்கும் மாட்டை ஆடிக் கறக்க)
அறிவோர், கண்டோர் (சுற்றமும் நட்பும் மாதிரி)

இளைஞர்களுக்குக் கலை என்றால் அது கை வந்தக் கலை தான். கூத்தாடிகள் என இப்போது வேறு அ(ன)ர்த்தம் வந்தாலும், அதில் 20 வகை கலைஞர்கள் இருக்காகளாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எல்லாம் அப்படித்தான் சொல்லுது. லிஸ்டைப் பாத்து வைப்போமே. இளையரும் வாராகளே அங்கும்…. கூத்தர், பொருநர், விறலியர், பாணர், பாடினி, கண்ணுளர், கோடியர், வயிரியர், இயவர், நகைவர், சூதர், மாதகர், அகவன் மகளிர், அகவுநர், கட்டுவிச்சி, கல்லா இளையர் (கர்மவீரர் மாதிரி), கைவல் இளையர்(சுந்தர் பிச்சை மாதிரி), குறுங்கூளியர், உருவெழு கூளியர், வேதாளிகள் என்போரே அவர்கள். இவர்கள் பெரும்பாலும் வாய்மொழிக் கலைஞர்கள்.

அப்படியே கார்நாற்பது பக்கம் வந்தாச்சி. இங்கே இளையர், சேவகர் என்பதாய் வருகிறது. அவர் ஸ்வெட்டர் மாதிரி உடையினை உடுக்க , தலைக்குல்லா அணிந்து வந்தார்களாம். ஜாலியா புல் சுவைக்கும் குதிரை, தேருடன் பூட்டி இருக்காம். காடுகள் பூரிப்பா இருந்ததாம். எப்புடி எப்புடி? நற்குணமுடைய மகளிரின் இளமைச் சொல் போல அழகாகவும், மாசாமாசம் பென்ஷன் வார மாதிரி, செல்வமும் வந்தது போல் பொலிவோடு இருந்ததாம்.

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு. 2
2

இளைய தலைமுறைக்கு அதிகம் கைவசம் ஐடியா வச்சிருப்பார் நம்ம கம்பர். அவர்கிட்டேயும் கையேந்துவோம்.

இஞ்ஞன இளக்கர்க்கு பொருள் யாதெங்கில், இளகும் தன்மையுடடையவாம். (எதைப் பார்த்து?)

பகைவர்கள் நொந்துபோக வைக்கும் அளவுக்கு சிறப்பானவர்போல, காத்து விளக்கை அணைத்துவிட்டது. இதுவரை கம்பர் வரலை. இனி தான் வருகிறார். இருட்டிலும் அங்கே வெளிச்ச மின்னலாம். காரணம் மேனியில் பொருந்தியுள்ள நகைகளாம். ஒரு கொசுறு தகவல்: ஏதோ கலவி சமாச்சாரம் சொல்றா மாதிரி தெரியுது (இன்றும் நல்ல பெயர் தக்க வைத்துக்கொள்ள இத்தோடு விடுகிறேன்)

இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகைசோர உயர்வோரின்
அளக்கரொடு அளக்கரிய ஆசையுற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம்

மீண்டும் வருவேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s