அழகா பல்லழகா….



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -20]

கொரோணா வந்து எல்லாரையும் வீட்டோடு முடிக்கிப் போட்டது போல் என் விமானப் பயணங்களும் முடங்கிப் போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தில்லி வரை சென்று திரும்ப வாய்ப்பு கிடைத்தது. பயணம் முடிந்து, திரும்பியவுடன் சொன்னேன்,”மூக்கையும் வாயையும் மூடியதால், எல்லாரும் அழகானவர்களாத் தெரியுது…” என்று. துணைவியார் கோபமாய்ச் சொன்னார், “அவனவன் மூச்சுவிடச் சிரமத்திலெ இருக்கும் போது, சைட் அடிச்சிட்டு வாரீக…”

முகத்துக்கு அழகு தருவது பல்…. ஆனா அது எப்படி இருக்கு என்பதே இந்த மாஸ்க்கில் மறைந்துவிடுவது நல்லது தானே? கொரோணா வருவதற்கு முன்பே ஒரு முறை, ஒரு பல் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்கும் மாஸ்க் போட்ட மான் ஒன்று உள்ளே அழைத்துச் சென்றது. என்னை கை கால் எல்லாம் அந்த டெண்டல் சேரில் கட்டிப்போட்டு மாஸ்க் எடுத்தது தான் தாமதம் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அந்தமானின் பற்கள் அப்படி. ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மாஸ்க் எடுக்காத இடமாப் பாத்து, பல் வைத்தியம் செய்து முடித்தேன். (ஆமா… மனைவியும் படிக்கும் பதிவுகளில், ‘பாக்க லட்சணமான இடத்தில்’ எனச் சொல்ல முடியுமா என்ன…?)

சரி… நாம தான் பல்லைப் பாத்து கலாட்டா செய்றோம்ணா, நம்ம திருஞானசம்பந்தர் தன்னோட தேவாரத்தில் பல் வச்சும் வம்புக்கு இழுக்கிறார். நாமெல்லாம் மின்னலடிக்கும் (சூப்பர் ரின்) வெண்மையான உடை, இதைத்தானே பாத்திருப்போம். ஆனா சிவனடியார்களுக்கு அசுரர்களின் பல்லு மின்னல் மாதிரி தெரிஞ்சதாம்.

முழுக்க தேவார அர்த்தமும் பாத்துட்டு அப்புறம் பாட்டும் பாக்கலாம், வாங்க… கூடவே…; மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

ஆனா பல்லு வச்சி நிறைய பழமொழிகள் இருந்தாலும், பல்லுப்போனா சொல்லுப் போச்சு என்பது மட்டும் செமெ பாப்புலர். ஆனா, பல்லுப் போன பலர் ஸ்ம்யூலில் பாடிக் கலக்குவது தான் வேடிக்கை. கிராமப்புரங்களில் ஒரு சொலவடை (அது என்ன வடை என்று மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்) பச்சரிசிப் பல்லழகி... பவழ மொட்டுச் சொல்லழகி...’,மொச்சக் கொட்டப் பல்லழகி… முத்து முத்துச் சொல்லழகி…’ – இப்படி ஒரு கிராமியப் பாடல் வரிகள் வருது.

கிராமப்புறம் வரை வந்தாச்சி…அப்படியே தி. ஜானகிராமன் கதைகளில் வரும் அந்தப் பல்லுப்பாட்டி, சீ..சீ… கொள்ளுப்பாட்டி… இல்லெ இல்லே, பல்லு கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் பாட்டிகளைப் பாப்போம். (வீட்லெ ஒரு மாதிரியாப் பாக்குறாய்ங்க…. பல்லு இல்லாத பாட்டிகளையுமா சைட் அடிப்பீங்க… என்று கேட்காமல் கேட்பது தெரியுது)

தி.ஜானகிராமன் எழுதிய பாயசம் சிறுகதை. அதில் மணமக்களை ஊர்
விதவைகள் ஊஞ்சலில் வைத்துத் தள்ளும் காட்சி வரும். தி.ஜா.வின் பார்வை, அவரின் வரிகளில் இதோ:

‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ சூப்பரா இருக்கில்லெ… கற்பனை.. !இனி நீங்க செய்துகிடுங்க…விடு ஜுட்…

கார் நாற்பது (21) பாடலில் வேறெ லெவல். எதையாவது பாத்தா, காதலியின் ஒரு பாகத்துக்கு ஒப்பு சொல்லுவாக (அட உவமை எனச் சொன்னா, நீங்க ஓடிப் போயிட்டீக என்றால் என்ன செய்ய?) இங்கே என்ன நடக்குது பாருங்களேன் . அலங்கரிக்கப்பட்டத் தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகளப் பாக்குறாக. அது கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று, பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான். இது தாண்டா டாப்பு…

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.21

அப்படியே கம்பன் வீட்டாண்டெ போவோம்ணு பக்கத்தாலே போனா, அவரு தூரப்போ என கொரோணா (பாசிட்டிவ்) வந்த ஆள் மாதிரி விரட்டுகிறார். என்னான்னு கேட்டா, அவரும் ஒரு பல்லு வச்சிருக்கார். பொதுவா, ராக்கெட்டின் பின்னாடி தான் அதிகமா தீ ஜுவாலை கிளம்பும். ஆனா, நம்ம கம்பர் வச்சிருக்கும் ஆயுதத்தின் முன் பகுதியே அக்னியெக் கக்கிட்டுப் போவுதாம். அது என்ன ஆயுதம் எனஉத்துப்பாத்தா… அடெ.. பல்லு… (அட கொக்கமக்கா…பல்லு என்ன இம்புட்டு உக்கிரமான வெப்பனா என்ன?)

ஆமாம் இதெல்லாம் எப்ப நடக்குது எனக் கேக்கீகளா? அனுமனைப் பாம்பு வச்சிக் கட்டும் போது, அதெப் பாத்து அரக்கர்கள் அடிக்கும் கமெண்ட் இப்படியாம்… அது ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல் ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது. ஆதலால் விரைவுபடாது ஆலோசித்து நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்) செய்யுங்கள். (இந்நிலையில் இக்குரங்கு) அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று என்று சில அரக்கர்கள் சொல்வார்கள்.

’காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள்முகம்;
தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி , செய்யுமின்;
வேந்து உறல் பழுது’ என விளம்புவார், சிலர்.

அப்புறம் வேறு கொஞ்சம் பல்லு..சாரீ… வேலையெப் பாத்துட்டு அப்புறம்…. மீண்டும் வருவேன்…

One thought on “அழகா பல்லழகா….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s