துளித் துளித் துளித் துளி மழைத்துளி


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s