வியப்பூட்டும் விஐபி – 39
ஒரு வித்தியாசமான பட்டிமன்ற நிகழ்வினை முனைவர் கு ஞானசம்பந்தம் அவர்கள் அந்தமான் வந்த போது நிகழ்த்தி இருக்கிறார். அரங்கில் நடக்க வேண்டிய நிகழ்ச்சியினை கிராமப்புற மக்களோடு சேர்ந்து (பாத்துபஸ்தி கோவில் ஒட்டி) நடத்தி இருக்கிறார்கள். வியப்பு தான்.

பல வருடங்களுக்குப் பின் அவரின் மதுரை நண்பர் பாலன் என்பவர் அந்தமானில் சிறிது காலம் இருந்தார். இருவரும் சேர்ந்துதான் ஹுமர் கிளப் ஏற்படுத்தினார்களாம் மதுரையிலும் மற்றும் பல இடங்களிலும்.
பாலன் அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம், ஞாச பற்றித்தான் பேசுவார், அவரின் நகைச்சுவை பற்றியும் பேசுவார். கம்பன் தொடர்பான எனது நகைச்சுவை கலந்த பதிவுகள் பற்றியும் அவரிடம் சொல்லி இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்குப் பின்…
தற்செயலாக மதுரை விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்.
வணக்கம். நான் அந்தமானிலிருந்து வந்திருக்கேன் எனச் சொன்னது தான் தாமதம், ”அங்கே கிருஷ்ணமூர்த்தி என ஒரு இஞ்ஜினியர் இருக்காராமே? தெரியுமா?” என்றார்.
”நான் தான் அது” என வாழைப்பழச் செந்தில் போல் சொன்னதும் மகிழ்ந்தார்.
தொலைபேசி மூலம் அறிமுகம் ஆகி இருந்தும், பெயர் எல்லாம் நினைவு வைத்திருக்கும் பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் அவர்களின் திறன் குணம் வியப்பாய் இருந்தது.
நகைச்சுவை இல்லாத ஞானசம்பந்தமா?
- அந்தமானில் பூமாலைகளை ரொம்ப கவனமாய் கையாளுவதைப் பார்த்து, ”இங்கே பூ கிடைக்காது எல்லாம் சென்னையிலிருந்து வரணும்” என்றவுடன், ”அப்பாடா, இங்கே யாரும் என் காதில் பூ சுற்ற முடியாது”என்றார்.
- ”ஓய்வாக எங்கே போகலாம்?” கேட்டார். ”ஜெயிலுக்கு…” என்றவுடன், என்ன இது வந்தவுடன் ஜெயிலுக்கு அனுப்புறீங்க என்று சிரிக்க வைத்தார்
[தகவல் தந்து உதவிய முனைவர் அய்யாராஜு & முனைவர் கு ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி]