வியப்பூட்டும் விஐபி – 40
சமீபத்தில் கமலஹாசன் அவர்கள், ஒரு தலைவரைச் சந்திக்கும் போது, அத் தலைவர் ஒரு நூலைப் பரிசளிக்கிறார் அது கீழடி தொடர்பான புத்தகம். ’நாமளும் படிக்கணுமே’ என்று நினைத்து அது மறந்து போனது.
சில மாதங்கள் கழித்து, பிறந்த ஊரான பரமக்குடி போயிருந்தேன். ஊருக்குப் போனால், இரு ரகமான மக்கள் வீட்டுக்கு வருவர். ”அந்தமான் போக பாஸ்போர்ட் தேவையா?” என ஆரம்பித்து அந்தமான் வர திட்டமிடும் மக்கள் ஒரு வகை. ”வேலை வாய்ப்பு இருக்குமா?” இது அடுத்தவகை.
இந்த இரண்டும் இல்லாமல், ஒருவர் சந்திக்க வந்தார். என் நண்பர் மூலமாய் என் வருகையை அறிந்து வந்துள்ளார். வந்தவர் ஒரு புத்தகம் பரிசாய்த் தந்தார். ’நல்ல பழக்கம்’ எனப் பார்த்தால், அதே கீழடி தொடர்பான புத்தகம். ”நான் தான் இதன் ஆசிரியர் நீசு பெருமாள்”. அறிமுகம் துவங்கியது அதில்.

வியப்பை வீட்டிலேயே கொண்டு வந்து தந்தார் அவர்.
இளைஞர்கள் நம்பிக்கையற்று இருப்பதைக் கவனித்த தோழர் பெருமாள் ’நம்பிக்கை வெளிச்சம்’ என்ற நூலும் எழுதியுள்ளார். அந்நூல் அந்தமான் இலக்கிய உறுப்பினர்களுக்கும் அறிமுகம் ஆகியுள்ளது, அவர் முகம் பாராத போதே. சேக்கிழார் விருதும், நான்காம் தமிழ்ச் சங்க விருதும் பெற்றவர்.
இயற்கையிலேயே அநீதியினைக் கண்டால் போராடும் குணம், ஆனால் சிரித்த முகம், ஆன்மீகத்திலிருந்து முற்றிலும் விலகாமலும், சமுதாய வளர்ச்சிக்கு எதுவெல்லாம் தேவையோ, அதெல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரு வியப்பான ரகம் தோழர் பெருமாள்.
ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, முறையான கல்வி அதிகமாய் ஏதும் கற்காமல், அரசியலிலும் நேர்மையாய் இருந்து, பல் துறையிலும் தனது கருத்துக்களை முத்திரையாய்ப் பதித்து, பரமக்குடியிலிருந்து தோழர் நீ சு பெருமாள் அவர்கள், ஒரு பிரபல நாளிதழுக்கும் தொடர்ந்து தலையங்கமும் எழுதுகிறார் என்றால், அதுவே நமக்கெல்லாம் மகிழ்வும் வியப்பும் தானே!