வியப்பூட்டும் விஐபி – 24


சுப வீரபாண்டியன்

ஆண்டு தோறும் நடக்கும் விழா போல் 2012 லும் பொங்கல் விழா அந்தமானில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ புகழ் சுப வீரபாண்டியன் அவர்கள்.

அன்றைய நிகழ்ச்சி தமிழ்ப் பள்ளி மாணவிகள் பாடிய தமிழ்த் தாய் வாழ்த்தில் ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாட்டிய நிகழ்ச்சி; தொடர்ந்து ஒரு சிறுவன் ‘மந்திரமா தந்திரமா’ என நடத்திய மேஜிக் நிகழ்ச்சி. பின்னர் சிறப்புப் பேச்சாளர் உரை.

சுப வீரபாண்டியன் அவர்கள், தனது உரையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய மோகன்புரா பள்ளி மாணவிகள் பற்றியும், நாட்டியம் ஆடிய சிறுமி சிவரஞ்சினி குறித்தும், மேஜிக் நிகழ்த்திய சிறுவன் விஜய் குறித்தும் குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டிவிட்டு உரையினைத் துவங்கியது வியப்பாய் இருந்தது (அதுவும் கையில் எந்த விதமான குறிப்பும் இன்றி).

அந்தமான் இலக்கியமன்ற பொருளில்லா பொருளாளர் திரு கண்ணதாசனுடன்

விழா நிறைவானதும், தனது ‘கருப்புச் சட்டைக்காரன்’ பத்திரிக்கைக்கு ”விருப்பமுள்ளவர்கள் சந்தா செலுத்தலாம்” என வேண்டினார். “இது நடுநிலையானாது அல்ல; நான் சார்ந்து நிற்கும் இயக்கம், கட்சிக்கு சார்ந்தே இருக்கும்” என்று சொல்லியே வேண்டிய விதம் , அதன் உண்மை, வியப்பைத் தந்தது.
மேலும் சில வியப்புப் பட்டியல் இதோ: (தகவல் உதவி முனைவர் இராஜ்மோகன்
அவர்கள்):

  1. அந்தமான் தமிழர் பிரச்சினைகளுக்கு தமிழகத்திலிருந்து தீர்த்திட முயல்வது.
  2. தமிழக ஊடகங்களில் வெளிக் கொணர்வது
  3. எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் உடன் பேசும் குணம்.

சுப வீரபாண்டியன் அவர்களின் அன்றைய நிகழ்வு முழுதும் ஒன்றல்ல, பல சொற்களை அவர் நன்றாய்ச் சொல்லிய விதம் வியப்பாய் இருந்தது.

தொடரும் அடுத்த விஐபி அந்தமான் விஷ்ணு பத ரே

காத்திருக்கவும்.

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ: http://www.andamantamilnenjan.wordpress.com

வியப்பூட்டும் விஐபி – 23


தோழர் தியாகு

2017 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவுக்காக தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு அவர்களை அழைத்தோம். விமான நிலையத்தின் உள்ளே சென்று அவரை வரவேற்கச் சென்றோம். ஒரு சிறிய கைப்பையுடன் மிக மிக எளிமையாக வந்து இறங்கினார்

இவரா, ஒரு பிரபல வழக்கில், தூக்குத் தண்டனை கைதியாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்? என்று வியப்பாக இருந்தது. தமிழர் சங்க செயலாளர் காதில், தலைவர் மெதுவாகச் சொன்னார். ”ஐயா அவர்களுக்கு நாளை பொங்கலுக்கு வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து விடவும்” என்று.

மறுநாள் பொங்கல் அன்று மிகச்சிறந்த உரையின் நடுவே, அந்தமான் தமிழர் சங்கம் உடுப்பு வாங்கிக் கொடுத்ததையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்குப் பின் நடந்த நிகழ்வினை தமிழர் சங்க தலைவர் சொல்வதைக் கேட்போமே!

அம்பத்தூர் தாய்த்தமிழ் பள்ளி கட்டிட பணி துவங்கும் விழாவுக்கு தோழர் அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் சென்றிருந்தேன்.

விழா முடிந்ததும் தோழர் செல்ல வேண்டிய வழியில் நானும் செல்ல வேண்டி இருந்ததால் அவரை முதலில் இறக்கி விட்டு விட்டு பின் நான் திரும்பி வந்து விடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் தோழர் பிடிவாதமாக மறுத்து விட்டார். வழியில் பஸ் டிப்போ பக்கத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றார். பேசிக்கொண்டு வந்ததில் ஓட்டுனர் டிப்போவைக் கடந்து விட்டார். வண்டியை நிறுத்தும் போது , ஒரு வழிச்சாலையில் நுழைந்து விட்டது தெரிந்த்து. திரும்பி டிப்போ வருவதற்கு சில கிலோ மீட்டர்கள் ஆகும்.

எவ்வளவோ வற்புறுத்தியும் தோழர், டிப்போவுக்கு நடந்து செல்வேன் கூறிவிட்டு உடன் இறங்கி நடந்து சென்றுவிட்டார். என்னவொரு எளிமை!

சமுதாயப்பணிக்கு நேர்ந்து விட்டவரான தோழர் தியாகு அவர்களின் செயல் வியப்பாய் இருக்கிறதல்லவா?

[நன்றி: அப்போதைய அந்தமான் தமிழர் சங்க தலைவர் திரு காஜா முகைதீன் அவர்கள்]

வியப்பூட்டும் விஐபி – 22


செம்முதாய் சதாசிவம்

அந்தமானுக்கு தமிழ் அறிஞர்கள் பலர் வந்திருக்கின்றனர். ஆனால் பல தமிழறிஞர்கள் ஒன்றாய் வருவது அரிது. அத்தகைய ஒரு நிகழ்ச்சியாக ஒரு  பன்னாட்டுக் கருத்தரங்கம் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது.

தமிழகம், வெளி மாநிலங்கள் தாண்டி வெளி நாடுகளிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து வந்தவர்களில் பேராசிரியர் முனைவர் சதாசிவம் அவர்களும் ஒருவர். தங்குவதற்கு நாம் செய்த ஏற்பாடுகளினால் அவருக்கு சற்று மன உளைச்சல் ஏற்பட்டதை அவர் முகத்தின் கவலை ரேகை சொல்லியது.

”நாமெல்லாம் இப்படி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பதால், எங்களின் அனுபவங்களை நீங்கள் கேட்டு வாங்கி, விழாவை இன்னும் சிறப்பாய் அமைத்திருக்கலாமே …?” என ஆலோசனை கூறினார்.

”சரி ஐயா… அடுத்த முறை நடக்கும் விழாவின் அதனை மறவாமல் செய்கிறோம்” எனச் சொல்லி சமாதானப் படுத்தினோம். விழா இனிதே முடிந்தது. சதாசிவம் அவர்கள் முகம் மலர ஆரம்பித்தது.

அதன் பின்னர் சென்னையில் பல்வேறு இலக்கியவாதிகளைச் சந்தித்து, இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றது; இப்படி எல்லா சதா தரிசனங்களும் இந்தத் சதாசிவம் மூலமாயத்தான். அண்மையில் அந்தமான் அரசுக் கல்லூரியுடன் இணைந்து கருத்தரங்கமும் நடத்தினோம்.

தமிழில் அதிகமான அளவில் ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து, அதனை நூல் வழியில் வெளியிட்டவர்; பற்பல தலைப்புகளில் கருத்தரங்கம்,  உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் நடத்துவபர். கருத்தரங்க நூலை, கருத்தரங்கு நடத்தும் போதே வெளியிடுவது இவரது சிறப்பு. சங்ககாலம் தொடர்பாய் முனைவர் பட்டம் வாங்கி சென்னை கிறுஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராய் இருப்பவர்.

இவ்வளவு பெருமைகளை தன்னுள் வைத்திருந்து, நாம் அந்தமான் தீவில் நடத்தும் விழா கூட  சிறப்புற வேண்டுமென நினைத்த செம்முதாய் சதாசிவம் அவர்களின் மனப்பாங்கு வியப்பாய் இருந்தது.

வியப்பூட்டும் விஐபி – 21


திருமுருக கிருபானந்த வாரியார்

பரமக்குடியில் நல்லாசிரியர் PN நாகதாதன் அவர்களிடம், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு  அளவு கடந்த பிரியம். வாரியார் சுவாமிகள் பரமக்குடிக்கு வரும் போதெல்லாம் நல்லாசிரியர் வீட்டுக்கு தவறாது வருகை தருவார்.

ஒரு முறை அப்படி வாரியார் அவர்கள், ஆசிரியர் வீட்டுக்கு வந்திருந்தார். ஒவ்வொரு முறை அப்படி வரும் போதும், மாணவர்கள் உதவிக்கு இருப்பர். அப்படி உதவிக்கு இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். (1975 களில் ஆறாம் வகுப்பு படித்த போது).

வாரியாருடன் சற்று நேரம் பேசி முடித்த பின்னர், கடைசியில்  குடிப்பதற்கு பால் வாங்கி வரும் வேலை, எனக்குக் கிடைத்தது. பரமக்குடிக்கே உரித்தான டீக் கடைகளில் ’சிறப்புப் பால்’ கிளாஸில் வாங்கி வந்து வாரியார் முன் நீட்டினேன்.

ஆசிரியர் பதறி விட்டார். சற்றே கோபமாய், ”ஐயாவுக்கு இப்படி கிளாசிலா தருவது?” என, அந்த கிளாஸிருந்து பாலை, சில்வர் டம்ளரில் ஊற்றி வாரியாருக்கு வழங்கினார்.

”குடிக்கப் போறது பால் தானே? எதுலெ குடுத்தாத்தான் என்ன?” – இது என் முனகல்.

வாரியார் காதுக்கு எட்டி விட்டது.

அமைதியாப் பாலைக் குடித்து விட்டு சொன்னார்:

”தம்பீ… பால் ஒண்ணு தான்; ஆனா கொடுப்பதில் தான் குணம் மாறுது; தண்ணீரை எடுத்துக்கோ, கொழாயிலெ வந்தா அது குடிநீர்; கோயில்லெ குடுத்தா அது தீர்த்தம்”

எவ்வளவு பெரீய்ய ஆன்மீகப் பேச்சாளர், ஓர் ஆறாம் வகுப்பு மாணவனுக்கும் புரியும்படி சொல்லிய கிருபானந்த வாரியார் அவர்களின் பெரிய மனது இன்றும் நினைத்தால், வியப்பைத் தருகின்றது.

தொடரும் அடுத்த விஐபி செம்முதாய் சதாசிவம்

வியப்பூட்டும் விஐபி – 20


எழுச்சிக் கவிஞர் சிநேகன்

அந்தமான் தீவுகளில் ஒரு பொங்கல் விழா சிறப்பு நிகழ்வுக்காய் ‘எழுச்சிக் கவிஞர் சிநேகன்’ அவர்கள் வந்திருந்தார்கள். பொங்கல் விழா இனிதே முடிந்தது.

”அந்தமான் வருவோர் அனைவரும் போக விரும்பும் இடமான, ஹாவ்லாக் (தற்போது ஸ்வராஜ் தீப்) தீவிற்கு செல்ல ஏற்பாடு செய்யலாமா?” என்று கேட்டபோது கவிஞர் மறுத்தார்.

”ஏதாவது பள்ளிக்குப் போவோம், அதுவும் சற்றே தள்ளி கிராமப்புறப் பள்ளியாய் இருந்தால் நலம்” என்றார்.

பாத்துபஸ்தி என்ற இடத்தில் இருக்கும் பள்ளியில் சினேகன் அவர்களை அழைத்துச் சென்றோம்.

முன்னேற்பாடு ஏதுமின்றி செய்ததால் மேடை போன்ற ஏற்பாடுகள் இல்லை. அப்போது எதிர்பாராத விதமாய் மின் தடையும் ஏற்பட்டது.  பேட்டரியுடன் கூடிய மைக் வைத்துக் கொண்டு ஆசிரியர்களுடன் உரையாடினார். மாணவர்களுடனும் எழுச்சியூட்டும் பேச்சினை வழங்கினார்.

அடுத்த தலைமுறைக்குத் தமிழ் உணர்வு வளர்ந்திட எழுச்சிக் கவிஞர் சிநேகன் அவர்கள் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியது.

தொடரும் அடுத்த விஐபி கிருபானந்த வாரியார்

வியப்பூட்டும் விஐபி – 19


தென்கச்சி சுவாமிநாதன்

’இன்று ஒரு தகவல்’ மூலம் பிரபலமாகி நகைச்சுவைப் பேச்சாளராக உலா வந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள், 2001 ஆம் ஆண்டு, அந்தமான் மனித உரிமைகள் இயக்க நிகழ்ச்சிக்காய் போர்ட் பிளேயர் வந்திருந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை வரவேற்க சிறப்பு அனுமதி வாங்கி,  விமான நிலையத்தின் உள்ளேயே சென்று காத்திருந்தனர்.

தென்கச்சியார் இறங்கி வந்தார். அவரை வரவேற்பு அறையில் அமர வைத்து விட்டு லக்கேஜ் வருவதற்கென காத்திருந்தனர்..

சிறிது நேரம் கழித்து, அவரே ”போகலாம்லெ” என்றார்.

”லக்கேஜ் எந்த கலர், எப்படிப்பட்டது என்று சொன்னால், அதனை  எடுத்துவர உதவிகரமாய் இருக்கும்” இது ஏற்பாட்டாளர்கள்.

”எனக்கு எந்த லக்கேஜும் இல்லையே. கையில் கொண்டு வந்திருக்கும் இந்த மஞ்சள் பை மட்டும் தான் என் லக்கேஜ்”

30 வருடங்களுக்கும் மேலாக எல்லார் காதுகளையே, தன் வசம் வைத்திருந்த தென்கச்சியார், தன் வசம் இவ்வளவு அரிய எளிமையையும்  வைத்திருந்தார் என்பதை அறிந்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

இரவு உணவு தமிழர் சங்க தலைவர் வீட்டில் ஏற்பாடு. தென்கச்சி அய்யா அவர்கள் பல நிகழ்ச்சிகளை கூறி அனைவரையும் சிரிப்பிலும் ஆச்சரியத்திலும் (ஆனால் அவர் சிரிக்காமல்) ஆழ்த்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு சிறுவன் “அங்கிள் நீங்க டி வி லெ மாதிரியே இங்கேயும் ஏன் சிரிக்க மாட்டிறீங்க?“ என்று கேட்டதும் அவர் உட்பட அனவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

தன் சிந்தனைகளாலும், கருத்துக்களாலும் தமிழர் நெஞ்சமெலாம் சிரிக்க வைக்கும் தென்கச்சியாரையே சிரிக்க வைத்த காட்சி வியப்பு தானே!

[தகவல் உதவி: அந்தமான் தமிழர் சங்க தலவர் திரு காஜா முஹைதீன் மற்றும் துணைத்தலைவர்  முனைவர் திரு இராஜ்மோகன் அவர்கள் – சிரிக்க வைத்த சிறுவன் இம்ரான்]

தொடரும் அடுத்த விஐபி எழுச்சிக் கவிஞர் சிநேகன்

வியப்பூட்டும் விஐபி – 18


மெட்ரோ மனிதர் ஸ்ரீதர்

அந்தமானிலும் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் பொறியாளர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். பொறியாளர்களில் சாதனை செய்தவர்களை வரவழைத்துப் பேச வைப்போம். அது இங்குள்ள பொறியாளர்கள் & மாணவர்களுக்கு ஓர் உற்சாகம் தரும்.

ஒரு முறை மெட்ரோ மனிதர் ஸ்ரீதர் அவர்களை சிறப்புப் பேச்சாளராய் அழைத்திருந்தோம்.

பெரும்பாலான அரசு வேலைகள் என்றாலே, அது தாமதமாய்த்தான் முடியும் என்று இருந்ததை மாற்றி அமைத்து, அரசின் வேலைகளும் கூட, குறிப்பிட்ட நாளுக்குள் செய்து முடிக்கலாம் என மெட்ரோ இரயில் திட்டங்களை செய்து காட்டியவர் மெட்ரோ மனிதர் ஸ்ரீதர்

பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாட அதிக ஆர்வம் காட்டினார். மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலரைப் பார்க்கச் சென்ற போது, அவரே எழுந்து வந்து வரவேற்று, பின்னர் வழி அனுப்பவும் செய்தது, அவரின் அர்ப்பணிப்புப் பணிக்கு  அங்கீகாரமாய் தெரிந்தது.

மாலையில் குடும்பத்தினரோடு ஒரு கலந்துரையாடல் வைத்திருந்தோம். பொறியாளர்கள் பெரும்பாலும் அதிக நேரம் வேலையில் இருக்கிறார்கள். வீட்டில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மகளிர் அணி வைத்தது.

தான் சரியான நேரத்திற்கு அலுவல் சென்று, அலுவல் நேரத்தில் முழுதும் கவனம் செலுத்தி, பின்னர் வீட்டிற்கான நேரத்தில் குடும்பத்தைக் கவனிப்பேன் என்றார். அதிக நேரம் வேலையில் இருப்போர், ஹார்ட் ஒர்க்கர் என அறியப்பட்டாலும், அவர்கள் அடுத்தவரது வேலையினைச் செய்து கொண்டிருப்பர்.

இப்போது நாட்டிற்குத் தேவையானது ஸ்மார்ட் ஒர்க் செய்பவர்கள்.

எவ்வளவு பெரிய சாதனை எல்லாம் செய்து, அதற்கான காரணம் இவ்வளவு சுலபமாய்ச் சொல்வதைப் பார்த்தால், மெட்ரோ மனிதர் மீது வியப்பு தான் ஏற்படுகிறது.

தொடரும் அடுத்த விஐபி தென்கச்சி சுவாமிநாதன்

வியப்பூட்டும் விஐபி – 17பெரியார்தாசன்

கருத்தம்மா திரைப்படம் தந்த வெற்றியால், நடிகர் என்று அடையாளம் காணப்படும் பேராசிரியர் பெரியார்தாசன் அந்தமான் வந்திருந்தார். பச்சையப்பன் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியர் அவர். மேடையில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. சோர்வுடன் இருக்கும் யாராவது அந்தப் பேச்சைக் கேட்டிருந்தால் உற்சாகத்தில் திக்கு முக்காடிப் போயிருப்பர்.

மேடையை விட்டு இறங்கியதும், “அருமையான வீராவேசம் மிக்க பேச்சு” என சொல்லுகையில், ”இது எனக்கு நானே வைத்துக் கொண்ட பரீட்சையும், அதில் எனக்குக் கிடைத்த வெற்றியும்” என்றார்.

ஒன்றும் புரியாமல் முழித்தோம்.

அவரே தொடர்ந்தார். விளக்கினார். இன்றைக்கு இப்படி தொடர்ந்து பேசும் பெரியார்தாசன், ஒரு காலத்தில் திக்கு வாயால் பேச இயலாது அவதிப் பட்டவராம்! தன் வாயில் சிறுசிறு கூழாங்கற்கள் வைத்துக் கொண்டு கடுமையான பயிற்சியின் காரணமாய்த்தான் இப்படி சரளமாய் பேச வந்திருக்கிறது என வியப்பின் உச்சத்தை எட்டவைத்தார் அவர்.

அவர், மனைவியோடு அந்தமான் வந்திருந்தார்; போக்குவரத்து, தங்க இடம், உணவு எல்லாச் செலவும் தமிழர் சங்கம் செய்து கொடுத்திருந்தது. ஊருக்கு திரும்பும் போது தன் மனைவிக்காய் சங்கம் செலவு செய்த பணத்தை திரும்பிக் கொடுத்தது தான் வியப்பம்மா!!!

தொடரும் அடுத்த விஐபி மெட்ரோ மேன் ஸ்ரீதர்

வியப்பூட்டும் விஐபி – 16


சரசுவதி இராமநாதன்

திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் காப்பியத் தமிழ் மாநாடு அந்தமானில் நடந்தது (29-04-2012). அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்த பல தமிழறிஞர்களில், திருமதி சரசுவதி இராமநாதன் அவர்களும் ஒருவர்.

விழா மேடையில் அவரது பேச்சுகள் முடிந்த பின்னரும், சிறு சிறு குழுவோடு உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இலக்கியம், ஆன்மீகம், இசை, சினிமா, கண்ணதாசன், கம்பன், வாலி இப்படி பல தளங்களில் ஓடிக் கொண்டிருந்தது அந்த உரைகள்.

நான் அமைதியாய் எல்லாம் கேட்டபடி இருந்தேன். என் அமைதி பார்த்து,

”என்ன ஏதும் பேசாமெ இருக்கீங்க?” அவரே கேட்டார்..

”ஒன்றும் இல்லை, கம்பனின் பாடல்களை எளிமைப்படுத்தி நகைச்சுவை கலந்து எழுதி இருக்கேன்”

”எங்கே பாக்கலாம்….”

ஐ பேடில் கடை விரித்தேன்.

”நல்லாத்தான் இருக்கு… இப்படி யாரும் கம்பனை பாக்கலையே… புத்தகமா போடுங்களேன் நானே அணிந்துரை தாரேனே…”

சென்னை சென்றதும் மறக்காமல், கம்பராமாயண சுந்தர காண்டம் அனுப்பி வைத்தார். கம்பனை கலாய்த்து எழுதிய ‘பாமரன் பார்வையில் கம்பன்’ என்ற என் நூலுக்கு சொன்னபடி அணிந்துரையும் வழங்கினார்.

தமிழகம் தாண்டி, ஒரு புதிய எழுத்தாளனுக்கு, அதுவும் மரபை மீறி கம்பனை எழுதும், இலக்கியத் தொடர்பே இல்லாதவனுக்கு, இவ்வளவு உற்சாகமூட்டிய சரசுவதி இராமநாதன் அவர்களின் தமிழ் உணர்வு வியப்பைத்தான் தருகிறது.

தொடரும் அடுத்த விஐபி பெரியார்தாசன்

வியப்பூட்டும் விஐபி – 15


குன்றக்குடி அடிகளார்

அந்தமானில் தமிழ்க் கலாச்சார இயக்கத்தின் அழைப்பின் பேரில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரை (பெரியவர்)  சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள்.

பேசும் இடமெல்லாம் பிரமாண்டமான மேடை அலங்காரம், ஒளிரும் விளக்குகள் இதெல்லாம் பார்த்து பழகிப்போன அடிகளாருக்கு, அந்தமான் அரங்கமேடை மிகவும் எளிமையாய் வித்தியாசமாய்ப் பட்டிருக்கும்.

ஆனாலும் பேச்சைக் கேட்க வந்தோர் கூட்டத்தில் குறை ஒன்றும் இல்லை. அரங்கு நிறைந்த கூட்டம்.

விழா முடிந்து சன்மானம் தரும் போது, அதனை வாங்க மறுத்தார் கலாச்சார இயக்க பொருளாதார நிலை கருதி. அன்பாய் மீண்டும் வற்புறுத்தவே அதனை வாங்கிக் கொண்டார்.

”அந்தமான் திருக்குறள் பேரவை என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி, தீவுகளில் குறள் பரப்பலாமே?”

அது கேள்வியா? ஆலோசனையா? தெரியாது விழித்தனர் இயக்க நிர்வாகிகள். ”செய்யலாம்… எல்லாத்துக்கும் பணம் வேணுமே… ” நியாயமான கவலை சொல்லப்பட்டது..

”இதோ பணம் இருக்கிறதே….” தாம் தமிழ்க் கலாச்சார இயக்கத்திடமிருந்து வாங்கிய சன்மானப் பணத்தை, மீண்டும் தமிழ்க் கலாச்சார இயக்கத்திற்கே  தந்து, குறள் வளர்க்கச் சொன்னார் குன்றக்குடியார்.

குறள் வளர்க்க, அவர் தந்த குரல், குன்றக்குடிக் குன்று போல் இன்னும் வியப்பாய் நிற்கிறது.

[தகவல் உதவி: தமிழ்க் கலாச்சார இயக்கத்தின்  அப்போதைய செயலர் திரு ஜெயராமன் அவர்கள்]

தொடரும் அடுத்த விஐபி சரசுவதி இராமநாதன்