பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன்
கம்பன் கழகம் நடத்தும் விழாக்களில் சென்றால் ஒரு தாழ்மை உணர்ச்சி வந்துவிடும். பார்க்கும் நபரெல்லாம் முனைவர் பட்டம் வாங்கியிருப்பர். இரண்டு முனைவர் பட்டங்கள் வாங்கியவரும் இருப்பர்.
நூற்றுக் கணக்காய் புத்தகம் எழுதித் தள்ளியும் இருப்பர். நாமெல்லாம் அந்தமானிலிருந்து அங்கே எல்லாம் போனால் காணாமல் போய் விடுவோம். அந்தமானை வைத்துத்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கும்.
இப்படித்தான் 2014 aஅம் ஆண்டு காரைக்குடி கம்பன் கழக விழாவில் என் பஜனை ஓடிக் கொண்டிருந்தது. ஓரிடத்தில் மகளிர் பேராசிரியர் பட்டாளம் இருந்தது. என்னை அறிமுகம் செய்தவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (அதாங்க தமிழில் ஆர் டி ஐ) பற்றி நூல் எழுதி இருக்கார் என்று சொல்லி நகர்ந்தார்.
நானும் கம்பனில் ஆர் டி ஐ சட்டம் வரும் இடங்கள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு அம்மையார் கவனமாய்க் கேட்டார். எல்லாம் கேட்டு முடித்து, ”நான் இதே பொருளில் மூன்று மணி நேரம் பேசியிருக்கேன்!” சொல்லி நகர்ந்தார்.
பின்னர் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் தான் அவர். ஆர் டி ஐ சட்டத்தின் மாநில அளவில் தலையாய பொறுப்பான, மாநில தகவல் ஆணையராகவும் செயல் பட்டிருக்கிறார். கலைமாமணி பட்டம் பெற்றவர். மறைமலை அடிகளின் பெயரர் நம்பி ஆரூரன் அவர்களை மணந்தவர். அத்தகைய பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் அவர்கள், எனது ஆர்டிஐ யின் கம்பன் தொடர்பான அலசல்களையும் காது கொடுத்துக் கேட்டது வியப்பாய் இருந்தது.

கம்பன் கழகம் போன்ற அரங்குகளிலும் கூட, புதியவர்களை பேசவிட்டு, அவர்களின் கருத்துகளையும் கேட்ட தழும்பாத அந்த நிறைகுடமாய் நின்ற பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் செயல் கண்டு, இந்தக் குறைகுடம் வியப்பில் ஆழ்ந்தேன்.