சென்னை சிவபுரம் கபிலன்
கம்ப்யூட்டரை பாடங்களில் படிக்காமல், அதனை உபயோகிப்பவர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாய் வந்து அமைந்தது ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழ். லிட்டில் அந்தமான் தீவில் இருந்த போது, தமிழ் கம்ப்யூடர் வரவழைத்துப் படிப்பேன். அதில் ஓர் அட்டைப்படம் சற்றே வித்தியாசமாய் பட்டது.
நெற்றியில் பட்டையுடன், கழுத்தில் ருத்திராட்சமும் கொண்டு, வெந்தாடியோடு லேப் டாப் சகிதம் இருந்தார் ஒருவர். தமிழ் மென்பொருள் பற்றிய கட்டுரை அது. கட்டுரை சொன்னது அவர் பெயர் கபிலன் என தொலைபேசியுடன்.

உடனே தொடர்பு கொண்டேன். தொலைபேசியின் மறுபக்கத்தில் “சிவாயநம” என் பதில் ஒலித்தது. ”ஃபோன் எடுத்து, ஹலோ சொல்லாமல், சிவாயநம என்கிறீர்களே?” வம்பைத் துவக்கி வைத்தேன். சென்னைக்கு வரும் போது அலுவலகம் வாருங்களேன். பேசுவோம் என்றார்கள்.
சென்னையில் அவர்கள் அலுவலகம் சென்றேன். பெரீய்ய அளவில் நடராசர், மாணிக்கவாசகர் படங்கள். மறுபுறம் அதே அளவில் தந்தை பெரியார் படம்; வியப்புடன் கேட்டேன். ”சாமி படத்துக்கு சரிநிகர் சமமா சாமியே இல்லேன்னு சொன்ன ஈவே ராமசாமி படமா?”
”பெரியாரைப் பார்த்ததும் ஏன் எல்லாருக்கும் அவரது கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும் நினைவுக்கு வரணும்? அதையும் தாண்டி அவர் மொழிக்கும், சமூதாயத்திற்கும் செய்தவை போற்றப்பட வேண்டும்” என்று சொல்லிய விதம் வியப்பாய் இருந்தது.
வழிபாடு என்பது தனியே ஏதுமில்லை; வாழ்தலே வழிபாடு எனச் சைவ நெறியினை எளிமையாய் விளக்குபவர்; நினைத்த மாத்திரத்தில் மெட்டு போட்டு பாட்டு எழுதும் திறன்; கிராமப்புற மாணாக்கர்களுக்கும் கணிப்பொறி அறிவை தந்திடும் ஆவல்; தேவாரம் திருவாசகப் பாடல்களை அனைவரும் பாடும் வகையில் இசையோடு எளிமையாக்கித் தருவது; இவை எல்லாம் வியப்படைய வைத்தமையின் பிற காரணங்கள்.
அந்த வியப்பில் தொடங்கிய அறிமுகம்தான், இசையமைப்பாளர் வீ. தஷியின் அறிமுகமும் கிட்டிட உதவியது.
தொடரும் அடுத்த விஐபி சாரதா நம்பி ஆரூரன்