அருட்கவிஞர் அருள்திரு மு. அருள்தாஸ்
லிட்டில் அந்தமான் தீவில், சுனாமியால் பழுதடைந்த துறைமுகத்தினை சீரமைக்கும் பணியில் இருந்தேன். ஒரு நாள் அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார் அருள்தாஸ் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது.

சிவனே என்று திருநீறு பூசி இருக்கும் என்னை, சர்ச்சுக்கு அழைத்து அங்கு வந்திருப்போருக்கு நல்ல கருத்து நாலு சொல்வதற்கான அழைப்பு அது. வந்த வேலை இனிதே முடிந்தது.
அருள்தாஸ் அவர்கள் தனது அடுத்த வேலையினைக் காட்ட ஆரம்பித்தார். அவர் கவிதையும் எழுதுவார். அந்தமான் பற்றி ஒரு பாடல் எழுதி வைத்திருந்தார். அதற்கு டியூனும் போட்டிருந்தார். உள்ளூர் இசைக் கலைஞர்களை வைத்து இசை அமைத்தும் வைத்திருந்தார்.
நான், பாடல் கேட்கத் தயாராய் இருக்கும் போது, மைக் கையில் தந்து பாடுங்கள்; இதை பதிவு செய்யலாம் என்கிறார். சரி… என்று அதுவும் செய்தேன்;
”இது போன்று ஐந்து, ஆறு பாடல்கள் வைத்துள்ளேன்; அதனை எல்லாம் வைத்து ஒரு ஆடியோ ஆல்பமாய் கொண்டு வர நினைக்கிறேன். உங்கள் குரலில் பதிவிட்ட பாடலை, சென்னை போகும் போது எடுத்துச் சென்று, ஆடியோ ஆல்பம் தயாரிக்க விசாரணை செய்து வாருங்கள்” என்றார்.
”பாதிரியார் அருள்தாஸ் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் தன் பாடலுக்கு, என்னை ஏன் தெரிவு செய்தார்?” என்பது அப்போது வியப்பாய் இருந்தது.
ஒருமுறை அரக்கோணம் சென்றபோது, பாதிரியாரிடம் பேசி ரொம்ப நாளாச்சே என நினைத்து தொலைபேசியில் அழைத்தேன். ”இதோ ஐந்து நிமிடத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பேன்” என வந்து சேர்ந்தார். அடெ… அவரும் அரக்கோணத்தில் தான் இருந்திருக்கிறார். வாழ்க்கை தான் எத்தனை வியப்புகளை தந்து கொண்டே இருக்கிறது. நாம் தான் கவனிக்கத் தவறுகின்றோமோ?
ஆமாம்… சென்னையில் இசை அமைப்பாளர் ஒருவரைச் சந்தித்த போது அந்த வியப்பு இன்னும் அதிகம் ஆனது.
தொடரும் அடுத்த விஐபி இசையமைப்பாளர் வீ. தஷி
காத்திருக்கவும். அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ: www.andamantamilnenjan.wordpress.com