மாவீரன் பழ நெடுமாறன்
’அந்தமான் முரசு’ வார இதழின் 40 ஆம் ஆண்டு தொடக்க விழாவின் பொருட்டு அந்தமான் வந்திருந்தார் பழ நெடுமாறன் அவர்கள் (24-08-2008). அதே விழாவில் அந்தமான் அலைகள் என்ற இசைக் குறுந்தகடினையும் வெளியிட்டார்.
சுப்பிரமணிய பாரதியினை மறுபடியும் பிறந்து வரச்சொல்லி அழைப்பு விடுக்கும் பாடல் ஒன்று திரையில் காட்டப்பட்டது. பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும்; தென்னைமரம் வேண்டும்; நிலா ஒளி வேண்டும் என்று கேட்ட அனைத்தும், அதற்கு மேலும் இந்த அந்தமானில் இருக்கிறது. எனவே அந்தமானுக்கு மறுபடி பிறந்து வரச்சொல்லி அழைப்பு விடுக்கும் பாடல் அது.
படக்காட்சிகள் உள்ளூர் நண்பர்களை வைத்துப் படமாக்கியது. ஒரு சிறுவன் தான் சின்ன பாரதியாய் வலம் வருவான்.
பாடல் காட்சி முடிந்தது. நிகழ்ச்சியும் முடிந்தது.
அரங்கின் வெளியே பழ நெடுமாறன் ஐயாவின் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்; அவ்விடம் வந்த ஐயா, அங்கே நின்றிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, ”குட்டி பாரதி நீ தானே?” என்று கண்டுபிடித்து அருகில் அழைத்தார். தனது ’தமிழன் இழந்த பூமி’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். ”இளம் பாரதிக்கு என் இனிய வாழ்த்து” எனக் குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டுத் தந்தார்.
பெருந்தலைவரால் மாவீரன் எனவும், திருமதி இந்திராகாந்தியால் ’என் மகன்’ எனவும் பெயர் வாங்கிய பழ நெடுமாறன் ஐயா, என் மகனான அச் சிறுவனையும் கூட, மதித்துப் பாராட்டிய விதம் வியப்பைத் தந்தது.

அந்த அந்தமான் அலைகள் ஆடியோ ஆல்பம் எப்படி உருவானது? வாருங்கள் லிட்டில் அந்தமான் தீவுக்கு. ஒரு கிருஸ்தவப் பாதிரியார் தான் அதற்கு மூல காரணம்.
தொடரும் அடுத்த வி ஐ பி அந்த அருட்கவிஞர் அருள்திரு மு. அருள்தாஸ்
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ: www.andamantamilnenjan.wordpress.com