திருமுருக கிருபானந்த வாரியார்
பரமக்குடியில் நல்லாசிரியர் PN நாகதாதன் அவர்களிடம், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு அளவு கடந்த பிரியம். வாரியார் சுவாமிகள் பரமக்குடிக்கு வரும் போதெல்லாம் நல்லாசிரியர் வீட்டுக்கு தவறாது வருகை தருவார்.
ஒரு முறை அப்படி வாரியார் அவர்கள், ஆசிரியர் வீட்டுக்கு வந்திருந்தார். ஒவ்வொரு முறை அப்படி வரும் போதும், மாணவர்கள் உதவிக்கு இருப்பர். அப்படி உதவிக்கு இருந்த மாணவர்களில் நானும் ஒருவன். (1975 களில் ஆறாம் வகுப்பு படித்த போது).
வாரியாருடன் சற்று நேரம் பேசி முடித்த பின்னர், கடைசியில் குடிப்பதற்கு பால் வாங்கி வரும் வேலை, எனக்குக் கிடைத்தது. பரமக்குடிக்கே உரித்தான டீக் கடைகளில் ’சிறப்புப் பால்’ கிளாஸில் வாங்கி வந்து வாரியார் முன் நீட்டினேன்.
ஆசிரியர் பதறி விட்டார். சற்றே கோபமாய், ”ஐயாவுக்கு இப்படி கிளாசிலா தருவது?” என, அந்த கிளாஸிருந்து பாலை, சில்வர் டம்ளரில் ஊற்றி வாரியாருக்கு வழங்கினார்.
”குடிக்கப் போறது பால் தானே? எதுலெ குடுத்தாத்தான் என்ன?” – இது என் முனகல்.
வாரியார் காதுக்கு எட்டி விட்டது.
அமைதியாப் பாலைக் குடித்து விட்டு சொன்னார்:
”தம்பீ… பால் ஒண்ணு தான்; ஆனா கொடுப்பதில் தான் குணம் மாறுது; தண்ணீரை எடுத்துக்கோ, கொழாயிலெ வந்தா அது குடிநீர்; கோயில்லெ குடுத்தா அது தீர்த்தம்”
எவ்வளவு பெரீய்ய ஆன்மீகப் பேச்சாளர், ஓர் ஆறாம் வகுப்பு மாணவனுக்கும் புரியும்படி சொல்லிய கிருபானந்த வாரியார் அவர்களின் பெரிய மனது இன்றும் நினைத்தால், வியப்பைத் தருகின்றது.
தொடரும் அடுத்த விஐபி செம்முதாய் சதாசிவம்