மெட்ரோ மனிதர் ஸ்ரீதர்
அந்தமானிலும் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் பொறியாளர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். பொறியாளர்களில் சாதனை செய்தவர்களை வரவழைத்துப் பேச வைப்போம். அது இங்குள்ள பொறியாளர்கள் & மாணவர்களுக்கு ஓர் உற்சாகம் தரும்.
ஒரு முறை மெட்ரோ மனிதர் ஸ்ரீதர் அவர்களை சிறப்புப் பேச்சாளராய் அழைத்திருந்தோம்.

பெரும்பாலான அரசு வேலைகள் என்றாலே, அது தாமதமாய்த்தான் முடியும் என்று இருந்ததை மாற்றி அமைத்து, அரசின் வேலைகளும் கூட, குறிப்பிட்ட நாளுக்குள் செய்து முடிக்கலாம் என மெட்ரோ இரயில் திட்டங்களை செய்து காட்டியவர் மெட்ரோ மனிதர் ஸ்ரீதர்
பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாட அதிக ஆர்வம் காட்டினார். மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலரைப் பார்க்கச் சென்ற போது, அவரே எழுந்து வந்து வரவேற்று, பின்னர் வழி அனுப்பவும் செய்தது, அவரின் அர்ப்பணிப்புப் பணிக்கு அங்கீகாரமாய் தெரிந்தது.
மாலையில் குடும்பத்தினரோடு ஒரு கலந்துரையாடல் வைத்திருந்தோம். பொறியாளர்கள் பெரும்பாலும் அதிக நேரம் வேலையில் இருக்கிறார்கள். வீட்டில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மகளிர் அணி வைத்தது.
தான் சரியான நேரத்திற்கு அலுவல் சென்று, அலுவல் நேரத்தில் முழுதும் கவனம் செலுத்தி, பின்னர் வீட்டிற்கான நேரத்தில் குடும்பத்தைக் கவனிப்பேன் என்றார். அதிக நேரம் வேலையில் இருப்போர், ஹார்ட் ஒர்க்கர் என அறியப்பட்டாலும், அவர்கள் அடுத்தவரது வேலையினைச் செய்து கொண்டிருப்பர்.
இப்போது நாட்டிற்குத் தேவையானது ஸ்மார்ட் ஒர்க் செய்பவர்கள்.
எவ்வளவு பெரிய சாதனை எல்லாம் செய்து, அதற்கான காரணம் இவ்வளவு சுலபமாய்ச் சொல்வதைப் பார்த்தால், மெட்ரோ மனிதர் மீது வியப்பு தான் ஏற்படுகிறது.
தொடரும் அடுத்த விஐபி தென்கச்சி சுவாமிநாதன்