குன்றக்குடி அடிகளார்
அந்தமானில் தமிழ்க் கலாச்சார இயக்கத்தின் அழைப்பின் பேரில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரை (பெரியவர்) சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள்.
பேசும் இடமெல்லாம் பிரமாண்டமான மேடை அலங்காரம், ஒளிரும் விளக்குகள் இதெல்லாம் பார்த்து பழகிப்போன அடிகளாருக்கு, அந்தமான் அரங்கமேடை மிகவும் எளிமையாய் வித்தியாசமாய்ப் பட்டிருக்கும்.
ஆனாலும் பேச்சைக் கேட்க வந்தோர் கூட்டத்தில் குறை ஒன்றும் இல்லை. அரங்கு நிறைந்த கூட்டம்.
விழா முடிந்து சன்மானம் தரும் போது, அதனை வாங்க மறுத்தார் கலாச்சார இயக்க பொருளாதார நிலை கருதி. அன்பாய் மீண்டும் வற்புறுத்தவே அதனை வாங்கிக் கொண்டார்.
”அந்தமான் திருக்குறள் பேரவை என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி, தீவுகளில் குறள் பரப்பலாமே?”
அது கேள்வியா? ஆலோசனையா? தெரியாது விழித்தனர் இயக்க நிர்வாகிகள். ”செய்யலாம்… எல்லாத்துக்கும் பணம் வேணுமே… ” நியாயமான கவலை சொல்லப்பட்டது..
”இதோ பணம் இருக்கிறதே….” தாம் தமிழ்க் கலாச்சார இயக்கத்திடமிருந்து வாங்கிய சன்மானப் பணத்தை, மீண்டும் தமிழ்க் கலாச்சார இயக்கத்திற்கே தந்து, குறள் வளர்க்கச் சொன்னார் குன்றக்குடியார்.
குறள் வளர்க்க, அவர் தந்த குரல், குன்றக்குடிக் குன்று போல் இன்னும் வியப்பாய் நிற்கிறது.
[தகவல் உதவி: தமிழ்க் கலாச்சார இயக்கத்தின் அப்போதைய செயலர் திரு ஜெயராமன் அவர்கள்]
தொடரும் அடுத்த விஐபி சரசுவதி இராமநாதன்