தந்தை பெரியார்
தந்தை பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதே போல் மிகவும் சிக்கனமாய் இருப்பார் என்பதும் தெரிந்த சேதி தானே?
பெரியார் பயணம் செய்து போகும் இடமெல்லாம், யாராவது மாலை போட வந்தால், அதனை மறுத்து அதற்குண்டான பணத்தை வாங்கி விடுவாராம். தன்னிடம் கையெழுத்து பெற, கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள, கூட்டங்களில் பேசிட, குழந்தைக்குப் பெயர் வைக்க இப்படி எல்லாவற்றிற்கும், அதற்கான உரிய பணம் பெற்றுக் கொள்வர் உடன் வருபவர்.
1949 களில் சிவகெங்கையில் நடந்த ஒரு சம்பவம்; தனது மகளுக்கு பெயர் வைக்க வேண்டி இராசாமணி என்பவர் பெரியாரை அணுகினார். பெரியார், ’இளவரசி லெமோரியா’ எனப் பெயரிட்டார் அச் சிறுமிக்கு.
கூட வந்தவர்கள், பெயர் வைத்ததற்கான கட்டணம் கேட்க, பெரியார், ”அவரிடம் பணம் வாங்க வேண்டாம்” என்றாராம்.
என்ன காரணமாய் இருக்கும்?
பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவரின் பெயரைக் கேட்டவுடன் ’ராஜாமணி’ என்று கூறாமல், ’இராசாமணி’ என்று கூறியதாய் இருக்கும் என்பது என் ஊகம்.
எது எப்படியோ, பணமே வாங்காமல் ஒரு குழந்தைக்கு பெயர் வைத்தது வியப்பாய் இருந்தது, என அந்த இராசாமணி அவர்கள் வியந்ததை உங்களோடு பகிர்ந்து வியக்கிறேன்.
[குறிப்பு: திரு இராசாமணி அவர்கள் அந்தமான் தீவில் ஆசிரியராக பணியில் இருந்தவர்; 2006 இல் அவர் எழுதிய ஒரு கடிதம் அந்த வியப்பை உறுதி செய்கிறது.]

தொடரும் அடுத்த விஐபி குன்றக்குடி அடிகளார்