எஸ் பி பாலசுப்பிரமணியம்
அந்தமானில் ஒரு தனியார் இசை நிகழ்ச்சிக்கு எஸ் பி பாலசுபிரமணியம் தம் குழுவோடு வந்திருந்தார். அந்தமானில் ஐ டி எஃப் என்று சொல்லப்படும் திறந்தவெளி கண்காட்சி அரங்கில் தான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு.
சிறிய ஊர் என்பதால், நிகழச்சியில் முதல் வரிசையில் உட்கார ஆசைப்படும் நபர்கள் கிட்டத்தட்ட 50 வரை வந்திருக்க, அனைவரையும் முதல் வரிசையில் உட்காரவைக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார், நிகழ்ச்சி அமைப்பாளர். நான் குடும்பத்தோடு இரண்டாம் வரிசையில் அமர்ந்து ரசிக்க தயாரானேன்.
ஓரிரு பாடல் பாடியவுடனேயே தெரிந்து விட்டது, முதல் வரிசைக்கார்களுக்கு பாடல்களிலும் ஏதும் விருப்பம் இல்லை என்பது. இரண்டாவது வரிசையில் நாம், உற்சாகமாய் கைதட்டி, சிரித்து, பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தோம் (முதல் வரிசை அதை எரிச்சலாய் திரும்பி வேறு பார்த்தது)
எஸ்பிபி யின் பார்வையிலும் இது பட்டது. ரசிக்கும் ரசிகர்களுக்கு முன்னுரிமை தந்தால், நாம் இன்னும் சிறப்பாய் பாடுவோமே, என வேண்டுகோள் விடுத்தார் முன் வரிசையில் இருப்போரைப் பார்த்து. இசை மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லாதோர் எழுந்து பின் வரிசைக்கு வர, நாம் முதல் வரிசைக்கு முன்னேற்றப்பட்டோம்.
”என்னம்மாக் கண்ணு சௌக்கியமா?” பாடலை, உள்ளூர் பாடகருடன், வேறு ஒரு பாடகர் பாடுவதாய் இருந்தது. உற்சாகமான இரசிகர்களைப் பார்த்து எஸ்பிபியே உள்ளூர் பாடகருடன் பாட இறங்கியது அத்தனை இரசிகர்களையும் கவர்ந்தது.
இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் நம் எஸ்பிபி யின் செய்கை இன்று நினைத்தாலும் வியக்க வைக்கிறது.
தொடரும் அடுத்த விஐபி தந்தை பெரியார்