நகைச்சுவை நடிகர் செந்தில்

கோவையிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு விமானப் பயணம்; பாதி தூக்கத்தில், விமான இருக்கையில் அமரப் போனேன். ஜன்னலோர இருக்கையில் சிரிப்பு நடிகர் செந்தில்;
“… உன் சீட்டு இங்கே இருக்கு… என் சீட் எங்கே?”
“ அதாண்ணே இது…”
மனதில் காமெடி வசனம் ஓடியது. அமர்ந்தவுடன் ஒரு செல்ஃபி எடுத்து முடித்தேன்; விஐபிக்களைக் கண்டவுடன் செய்யும் முதல் கடமை.
”பேசலாமா” என்றேன்; ”கொஞ்சம் டயர்டா இருக்கு. தூங்குறேனே…” என்று கண் அயர்ந்தார்.
மூன்றாவது சீட்டில் அமர வந்தார் கோட்- டை சகிதம் ஓர் இளைஞர்.
“செந்தில்….வாட் எ சர்பிரைஸ்…!!!” போட்ட கூப்பாடில், நானும் செந்திலும் கண் விழித்தோம். ”நான் வேணும்னா, நடுவில் உக்காரட்டுமா?” கோட் கேட்டது; வள்ளலாய் மாறி இடம் மாறி அமர்ந்தேன்.
தன் லேட்டாப்பை எடுத்து தனது மெஷின் கியர் வகைகளை செந்திலுக்கு, விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார் சென்னை வரும் வரை. புரிந்தும் புரியாமலும் கொட்டாவியினையும் மறைத்தபடி கேட்டு வந்தார் செந்தில்.
“என்னிடம் மட்டும், டயர்டா இருக்கு என்றீர்கள். இந்த கோட்-டை-பார்ட்டி கிட்டே ஏன் அப்படிச் சொல்லலை?” சென்னை விமானநிலையம் வந்ததும் மடக்கிக் கேட்டேன் செந்திலிடம்.
”நீங்க பேசலாமான்னு கேட்டீங்க. அவரு கேக்கலை. அவரா சொல்லிட்டே வரும் போது நான் தூங்கினா, அவர் மனசு வருத்தப் படுமில்லையா?” இது செந்தில்.
தன் ஒவ்வொரு ரசிகனும் வருத்தப் படாமல் சந்தோசமாய் இருக்க வேண்டும் என விரும்பும் திரு செந்தில் அவர்களது நல்ல மனசு, வியப்பாய் இருந்தது.
தொடரும் அடுத்த விஐபி கவிஞர் புலமைப்பித்தன்