ஜி கே வாசன்
இலட்சத்தீவுகளின் ஒரு தீவான அமினி தீவீல் கட்டி முடிக்கப்பட்ட துறைமுகத்தை திறந்து வைக்க, அப்போது கப்பல் துறை அமைச்சராக இருந்த ஜி கே வாசன் அவர்கள் வந்திருந்தார்.
வந்த வேலை முடிந்து, கவரத்தி தீவில் நடைபெற்று வரும் துறைமுக வேலையினையும் பார்வையிட்டார். கடலில் மூழ்கி கட்டுமான வேலை பார்த்தபடி இருந்தனர் உழைப்பாளிகள்.
திடீரென திரும்பினார். ”தமிழ் குரல் கேட்கிறதே? தமிழர்களா? ” விசாரித்தார். ’ஆமாம்’ என்றேன். ”வெறும் கையோடு வந்திட்டேனே! ஏதாவது பழங்கள் வாங்கி வந்திருக்கலாமே! இங்கே பழம் கிடைக்குமா?” கேட்டார். ‘கிடைக்கும்’ என்றேன்.
தன் உதவியாளரை அழைத்து, ”எல்லாருக்கும் பழம் வாங்கிச் சாப்பிட பணம் கொடுங்கள்” என்றார். அமைச்சரின் கட்டளையினை, உடன் உதவியாளர் அமலாக்கினார்.
நான் படம் எடுக்க முயன்றதை புன்சிரிப்போடு தடுத்தார்.
மூப்பனார் அவர்களின் குடும்பம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. இப்போது அவர் வாரிசு மூலமாய் நேரில் தரிசிக்க முடிந்தது. அதிகாரம், மந்திரி பதவி எல்லாவற்றையும் மீறி வாசன் என்ற தனி மனிதரிடமிருந்து வெளிப்பட்ட அந்த அன்பு வியப்பாய் இருந்தது.
தொடரும் அடுத்த விஐபி சேரன்