லாலு பிரசாத் யாதவ்

நாடாளுமன்ற நிலைக் குழுவினருடன், உறுப்பினர் என்ற முறையில் அந்தமான் வந்திருந்த லாலு பிரசாத் யாதவ் அவர்கள் கார்நிகோபார் தீவுக்கும் வருகை தந்தார். அத்தீவில் பெரிய அளவில் துறைமுகம் கட்டும் பணி நடப்பதால் அதையும் அக்குழு பார்வையிட வந்தது.
ராசா (அலைக்கற்றை விவகாரத்துக்கு முன்), பி எச் பாண்டியன் போன்ற ஜாம்பவான்களும் வந்திருந்தனர். ஆனால் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. அனைவருக்கும் அறிமுகம் ஆன ஒரே முகம் லாலுஜீ தான்.
அவரோடு புகைப்படம் எடுத்துககொள்ள அனைவருமே முட்டி மோதிக் கொண்டிருந்தனர். துறைமுகப் பணிகளை மற்ற உறுப்பினர்கள் பார்க்க ஏதுவாய் ஒதுங்கி, பொதுமக்கள் அனைவருடனும் சரளமாய் சிரித்துப் பேசிக்கொண்டு புகைப்படம் எடுக்க போஸ் தந்து உதவினார் லாலுஜீ.
ஊரே அவரைப் பார்க்க, அவரைச் சுற்றிக் கூடி இருந்தனர். ஆனால் லாலூஜீயின் பார்வையோ சிறுவனான என் மகன் மீதே இருந்தது. இருவருக்கும் உள்ளே ஒரே ஒற்றுமை, இருவரின் தலைமுடி, ஒரே மாதிரி இருந்தது தான். தன் அருகில் அழைத்து, படம் எடுத்துக் கொண்டார்.
கூட்டத்தில் பலர் இருக்க, என் மகனை கவர்ந்தது தலைமுடி மட்டும் தான் என அப்போது நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது, என் மகன் சாயலில் அவருக்கு ஒரு பேரன் இருப்பதாய்.
முதல்வராய் இருந்திருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆன போதிலும், ஒரு பாசக்காரத் தாத்தாவை நினைவுபடுத்திய அன்றைய நிகழ்வு வியப்போ வியப்பு.
தொடரும் அடுத்த விஐபி ஔவை நடராஜன்