கற்போம் கம்பனில் – 26
(20-04-2020)
கயிற்றுக் கட்டில் என்றவுடன், பரமக்குடிஹாசனின் சகலகலா வல்லவன் படம் நினைவுக்கு வருதா? அப்பொ, நீங்க இன்னும் இளைஞர் தான் போங்க! அதிலும் அந்த முக்கல் முனகல் பாட்டு , அதாங்க அந்த ‘நிலாக் காயுதே….’ ஞாபகம் இருக்கா? ஆம் எனில் நீங்க இன்னும் சூப்பர் இளைஞன் தான். ஆனா பரமக்குடியில், அந்தக் காலத்தில் ஒரு மடக்குக் கட்டில் புழக்கத்தில் இருந்தது. தெருவில் அந்த மடக்குக் கட்டில் விரித்துப் படுத்துள்ளோம். ஒரு கொசு பாத்ததில்லை அப்பொ. இப்பொ… தெருவில் நடந்து போகவே மடங்கி மடங்கி போக வேண்டியிருக்கே!
இளவட்டங்கள் மத்தியில் மடக்கிப் போடுதல் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? (அட… இது மட்டும் எப்படி எல்லாருக்கும் கரெக்ட்டாத் தெரியுது?) அப்படிப் பாத்தா, காதலி என்ன வணங்காமுடி மாதிரி மடங்காமுடிகளா என்ன? திருடனை போலீஸ் பிடிக்கும் போது மட்டும், ’சுற்றி வளைத்துப் பிடித்தனர்’ எனப் போடும் தினத்தந்தி, பொது மக்கள், திருடனைப் பிடித்தால் மட்டும் ’மடக்கிப் பிடித்தனர்’ என்று போடுகிறதே? ஏன்? யோசிங்க… யோசிங்க.
ஆண்கள் தான் மடக்குவாகளா என்ன்? ஒரு சங்கீத வித்வானை இசையால் ஒரு பெண் மடக்கி வென்ற காட்சி திரையில் வந்ததே? நினைவிருக்கிறதா? ’நான் ஒரு சிந்து… காவடிச் சிந்து’ என்று பாடி..; மடக்குதல் என்பதற்க்குப் பொருள் தேடினா, ‘ஒருவன் தன் சொல்லாலோ, செயலாலோ மற்றொருவனை அடக்கி தனக்குக் கீழாக ஆக்கிவிடுதல்’ என்பதா கிடைக்குது. அப்பொ சிந்து பைரவி மடக்கல், சூப்பரா ஒத்துப் போகுது? அவெய்ங்க மடக்கிப் போட்டதெ உடுங்க, அந்த பாட்லெ ஒரு வரி பாத்தீயளா?
சொன்னது தப்பாதப்பா
இதனைப் நம்ம பழைய கனவுக்கன்னி சுஹாசினி இருமுறை பாடுவார். முதன்முறை “சொன்னது தப்பாதப்பா” என்று பாடுவார். அதாவது நான் சொல்வது தப்பாதப்பா = தவறாது, நிச்சயம் நடைபெறும்” என்ற பொருள்படி முதலில் பாடப்பட்டிருக்கும்; இரண்டாம் முறை “சொன்னது தப்பா? தப்பா?” என்று பிரித்து பாடுவார். அதாவது “நான் சொன்னதில் ஏதேனும் தப்பு உண்டா? தப்பு உண்டா (தவறு உண்டா)” என்று பொருள்படும்படி பாடி இருப்பார். (ஒரு சினிமா பாட்டுக்கு இம்புட்டு விளக்கம் சொல்ல வேண்டி இருக்கே? ) ஆனா அந்த வரிகள் இப்பவும் ரசிக்க முடியுதில்லெ?
சினிமாப் பாட்டிலேயேயே நம்மளை இந்த மடக்கு மடக்னா, நம்ம பழங் கவிஞர்கள் பத்தி கேக்கவா வேணும்? ஒரு பாட்டு தாரேன். அதுக்கு முன்னாடி தண்ணியெ மடக் மடக் எனக் குடிச்சிட்டுப் படிங்க…
உமாதர னுமாதர; னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர; னுமாதர னுமாதரன்
இப்பொப் புரியுதா? ஏன் தண்ணியெக் குடிக்கச் சொன்னேன்னு. நீங்க 23 ஆம் புலிகேசி மாதிரி விளக்கம் கேட்டா, நான் ஓணாண்டி மாதிரி சொல்லத் தயார் வரிக்கு வரி, இது தானுங்க அதன் மீனீங்கு…
உமாதரன் ஆதரனும் (உமாதேவியின் ஊட்டுக்காரன்; ஆதரவா இருப்பவன்)
மாதரனும் ஆதர (மானை ஏந்தியவன்; உயிரை ஆள்பவன்)
மாதரனும் ஆதர (யானைத் தோலை அணிந்தவன்; இடபத்தை வாகனமாய் உடையவன்)
மாதரனும் ஆதரன் (செல்வத்தை உடையவன்; நம்ம சிவன்)
அடெ ரொம்ம சிம்பிளா ’பித்தா’ என மடக்கும் லெவல்லெ இருக்கும் சிவனைப் பாட, இம்புட்டு சிரமமா?
இதுக்கே இப்படி மிரண்டு போனா எப்படி? இன்னும் ஒரு பாட்டு வருது பாருங்க; கரோணா வந்தா, பிழை இல்லாமல் பத்து தடவை சொல்லச் சொல்லுங்க; ஓடியே போயுடும். ”எங்கே நீ சொல்லு பாப்போம்!” என்று கேட்டா, இன்னா செய்றது? அதனாலே நாமளும் கொஞ்சம் படிச்சி வச்சிக்குவோம்.
காக்கைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை,
கோக்குக்கூக், காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
ஏன்..ஏன்.. இப்படி எந்திரிச்சி ஓடறீங்க? ஒரு லையனாவது பிரிச்சிக் காமிக்கிறேன். அப்புறம் பாருங்களேன்.
காக்கைக்கா காகூகை = காக்கைக்கு ஆகா கூகை
கூகைக்கா காகாக்கை = கூகைக்கு ஆகா காக்கை
என்ன தான் சொல்ல வாராரு அந்த காகா கவிஞரூ? இரவில் காக்கைக்கு ஆந்தை (கூகை) ஆகாதாம். பகலில் கூகைக்குக் காக்கை ஆகாது. பகலில் காக்கை வலிமை பெறும். இரவில் கூகை வலிமை பெறும். அதுபோல காலம் கருதி, அரசன் கொக்கைப்போல காத்திருந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வெற்றியும் இந்திரனாக இருந்தாலும் கிடைக்காது. ஆக நாம் வீட்டோட இருந்து கரோணாவை ஜெயிக்கிற மாரிதி… (யப்பா..ரொம்பவே சிரமம் தான்)
இந்த மாதிரி கரடு முரடான பாடல்களுக்கு மொத்த குத்தகைக்காரர் ஒருத்தர் இருக்கார்ன்னா, அவரு நம்ம ‘முத்தைத் தரு பத்தித் திருநகை’ எழுதிய அருணகிரியார். (என்னது…? ஒட்டக்கூத்தரா..? துண்டெக் காணோம், துணியெக் காணோம்னு ஒட விட்ருவீங்க போல…!!!) அருணகிரி பாட்டு போடலைன்னா முருகனே வேலோட நம்மளை மடக்கிடுவார். அதுக்கு முன்னாடி பழனி முருகன் பாட்டும் பாத்திடலமே…
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.
திருவாவினன்குடியைப் பங்கு போட்டுக் கொண்டவர். எண்ணத் தக்க அழகிய வாவிகள் நிறைந்த நல்ல ஊரில் வாழ்பவர். பரங்குன்று, திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல் படைவீடுகளிலும் சென்று குடிகொள்ளும் திரு ஆவி (ஆவியர்) குடிமக்கள் வாழும், தண்ணிய கார்முகில் பொழியும் மலையின் பெயரைச் சொல்லிப் பயனடையுங்கள்.
இப்புடி சொல்லாட்டி சத்தியமா யாருக்கும் புரியாது.
ஆமா கம்பர் ஏன் இன்னும் வரலை? அடெ… மெஸேஜ் அனுப்பி இருக்கார். சவுத் அந்தமான் பகுதி ஹாட் ஸ்பாட் என்பதால் வரலையாம். மடக்கு அணிக்கு பாட்டு தானே வேணும். சுந்தர காண்டத்தில் இருக்கு தேடிக்கோ… என்று சுருக்.
செய்யுளில் வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லதுஅடிகளிற் பின்னும் வந்தால் அதுவே மடக்கு அணி. (பாட்ஷா படத்து ரஜினி ஸ்டைலில் )எனக்கு யமக என்று இன்னொரு பேரும் இருக்கு. உலகில் இந்த மடக்கு அணியை உரிய முறையில் அமைக்க வல்ல மொழிகள் சிலவே உண்டாம். சம்ஸ்க்ருதம் போன்ற சில மொழிகளில் யமகம் அமைக்க முடியுமாம். ஆங்கிலம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் மடக்கணிப் பாடல்களை அமைக்க முடியாதுங்கிறதும் பெரியவங்க சொல்றாய்ங்க!
கம்பர் தந்த பாடலையும் லேசா படிங்களேன்…
பாடலம் படர் கோங்கோடும், பண் இசைப்
பாடல் அம் பனிவண்டோடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர்வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற, புள் இனம், பார்ப்பொடே
[சுந்தர காண்டம் – பொழில் இறுத்த படலம்]
தமது குஞ்சுகளுடனே மரங்களில் இனிது தங்கியிருந்த பறவைகளின் கூட்டம் துன்பத்தை மிகுதியாய் அடைய உயர்ந்து வளர்ந்துள்ள கோங்கு மரங்களும், பாதிரி மரங்களும், சிறப்பித்துக் கூறப்பெறுகின்ற இசைப் பாடலைக் கொண்ட அழகிய குளிர்ந்த வண்டுகளோடும் பல அலைகள் கரைகளை வந்து தழுவி அலம்பும் கடலிலே போய் விழுந்தன. (யமக அணி விளங்க ஆரம்பிச்சிருச்சோ?)
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்