கற்போம் கம்பனில் – 25
(18-04-2020)
ரொம்ப நாளா கேட்டு வந்த அந்த வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் காணாமல் போய்விட்டது. (அப்பப்பொ தேர்தல் வாக்குறுதி நேரத்தில் வந்து நிக்குமோ?) வறுமையில் இருப்பவன் யார்? என்ற வரையறை (அதாங்க டெஃபெனிஷன்) கூட மாறிட்டே வருது. இன்றைய சூழலில் மாருதி கார் வச்சிருப்பவனை பரம ஏழையாப் பாக்குது சமூகம். ஸ்மார்ட் ஃபோன் இல்லையா? அவனும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தான். இப்பொ, எல்லாம் தரைமட்டம் ஆகி இரண்டு பிரிவுகள் மட்டும் உலகத்தில் நிக்குது. Are You OK? கேள்வி கேட்போர் ஒரு புறம். OK எனப் பதில் வந்தால் அவர்கள் இப்புறம். மற்றவர் அப்புறம். விதி வலியது.
கரோணாவுக்குப் பின்னர் என்னென்ன தொழில் ஒழிந்து விடும்? என்ற கேள்வி வந்தது. (என்னவெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு?) படுக்கும் தொழில் ஒரேயடியாய்ப் படுத்துவிடுமாம் சட்டென ஒரு பதில் வந்தது. அடெ நல்லதும் படுக்கும் போலெ சே சே நடக்கும் போல் இருக்கே? மதுவை ஒழிப்போம் என்ற NSK யின் கனவை அமல் படுத்துவதே இப்போது அமலில் இருக்கும் ஊரடங்கு தானே! ஏதாவது எப்படியாவது ஒழிந்தால் சரி.
நம்ம கவிஞர்கள் எவ்வளவு தான் ஒளிவு மறைவா எழுதினாலும் அதை படிக்கும் ரசிக சிகாமணிகள் அதைக் கண்டு பிடித்து ரகசியமாய் ரசிப்பதில் தான் எல்லார்க்கும் திரில்லே!.
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
(இதுக்கு கோணார் உரை தேவை இல்லை என நினைக்கிறேன்)
இதுவே வில்லங்கம்னா, பாக்கும் ஒன்றை விடுத்து வேறு எதுக்கோ முடிச்சுப் போடுவது இருக்கே…! (சரீ சரீ புரியுது புரியுது…; எனக்கு புகழ்ச்சி புடிக்காது ஹி ஹி ) ஒரு கவிஞன் வானத்தைப் பார்க்கிறான். நட்சத்திரம் தெரியுது; பகலில் பார்க்கிறான் சூரியன் தெரியுது. பாட்டு வருது பாருங்க…
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று.
எவ்வளவு அழகா நட்சத்திரம், சூரியன் ரெண்டையும் ஒ(ளி)ழிச்சிட்டாய்ங்க பாத்தீயளா? (கரோணாவை இப்படி ஒழிக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?) நம்மால் முடிந்தது இப்போதைக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்வோர்க்கு தொந்திரவு தராமல் இருப்பது தான். (பாவம்… தினமும் உடல் நலம் பற்றி வீட்டுக்கே வந்து விசாரிக்கும் பணியாளர்களுக்கு ஒரு வாய் காஃபி கூட தர முடிய மாட்டேங்கிறது இன்றைய சூழல்)
இன்னொரு கவிஞன் ஓரளவுக்கு வரும்…ஆனா வராது ரகம்; அவர் சந்திரனைப் பார்க்கிறார் (அவருமா… ?) இது சந்திரன் தான்.. ஆனா இல்லை என்கிறார். வேறு என்னவாம்? வானம் நதியாம்; ம்… அப்புறம்? அதில் ஒரு வெண் தாமரைப் பூவாம். அட.. அட.. அடடே… சூப்பரான கற்பனையில்லே!! இருக்கிறதெ ஒழிச்சிக் கட்டிட்டு இல்லாததெச் சொல்றதில் என்ன ஒரு ஆனந்தம்?
‘மதியன்(று) இதுபுகலின் வான்நதியில் தோன்றும்
புதியதொரு வெண்கமலப் பூ.’
இன்னொரு கற்பனை பாருங்களேன். வீட்லெ எல்லாரும் சும்மா (வெட்டியாத்) தானே இருக்கீங்க? மனைவிக்கிட்டே பக்கத்தில் போய், தமண்ணா மொகம் மாதிரி இருக்கு என்று (கற்பனை தானே) சொல்லித்தான் பாருங்களேன்! உள்ளே இருக்கும் சொர்ணாக்கா வந்தால் நான் பொறுப்பல்ல. இதே மாதிரி கஷ்டத்தில் இருக்கும் மனைவி காணவனைப் பிரிந்துள்ளாராம். அப்பொ நிலாவைப் பார்க்கிறார் மறுபடியுமா?). சுடுதாம் அப்படியே… அம்மாடியோவ்…! ஏனாம்? கடலில் இருந்து புறப்பட்ட Magnified version of Corona மாதிரி தீயாம். ஆக, சந்திரன் தான்…ஆனா இல்லெ; சூரியன் தான் … அதுவும் இல்லெ, ரகம் தான் இது.
பொங்கு வெம்மை பொழிதலி னால்இது
திங்கள் அன்று; தினகரன் தான் அன்று
கங்குல் ஆதலி னால்;கடல் நின்(று) எழீஇத்
தங்கு றும்வட வைத்தழல் ஆகுமே!
”இது தாண்ணே அது” என்ற வாழைப்பழக் காமெடி ரசித்திருப்பீங்க. இது இல்லெ அது; அது தான் இது என்ற ரேஞ்சிலெ இன்னொரு கவிஞரோட கற்பனை ஓடுது. அதுவும் (அதுவும்ம்ம்மா???) நிலவைப் பார்த்துத் தானாம்.
‘தெரியும் இதுதிங்கள் அன்று செழும்பூண்
அரிவைமுக மேதிங்கள் ஆம்.’
“நானு வானத்திலெ பாக்குறது உண்மையான சந்திரன் இல்லையாம்; என் காதலி முகமே உண்மையான சந்திரனாம்- இது எப்படி இருக்கு? சூப்பரில்லெ?
ஐ ஃபோன் சினுங்கினாள்; (இப்பொ ஃபோன் அடிக்கடி தொடுவதால் பெண்பால் ) கம்பரிடமிருந்து வீடியோ கால் வந்தது.
”இப்பொல்லாம் ஜாலியா தோளில் கை எல்லாம் போட்டு பேச முடிவதில்லை. எப்பொத்தான் கரோணாவை விரட்டுவீங்க? பொற போக்குப் பாத்தா உடம்பில் பனியன் போட்ட அடையாளம் போய், முகத்தில் முகமூடி அடையாளம் வந்து விடும் போலிருக்கே!”
ஆமாம் ஐயா… மனதில் பயம் அப்பப்பொ ஒழிக்க முடியாது வருதே!
”அதெல்லாம் ஒழி… நாம் இன்னெக்கி ஒரு சூப்பரா ஒழிப்பு அணி பாட்டே பாக்கலாம்.” சொல்லி மறைந்தார் கம்பர்.
இந்த நக்கீரன் ஞாபகம் இருக்கா? (அட அந்த மீசைக்கார கோவாலு இல்லீங்கோ!) சிவன் கிட்டேயே ஒத்தெக்கு ஒத்தையா ஃபைட் செய்தாரே… என்ன காரணம்? ஞாபகம் இருக்கா? பதில் இங்கே இருக்கு. இயற்கையில் மணமுள்ள கூந்தலை வச்சிகினுகீர சீதையம்மா.. ஆச்சா? அதே பாட்டில் மன்மதன் (அட நம்ம வைரவுத்துவோட சொந்தக் காரருங்க..! எத்தனெ பாட்டுலெ மன்மதனை பயன் படுத்தி இருக்காரு?) அவரை சிவன் எரித்தும் எல்லாருக்கும் தெரிஞ்சது தானே.? கம்பர் அப்படி சொல்லுவாரா என்ன? ஆமாமா அப்படிச் சொல்லிட்டா அவரு எப்படி கம்பர் ஆவார்?
உருவமே இல்லாத மன்மதன் சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்பது பொய்ச் செய்தியாகும். இந்த மணம் கமழும் கூந்தலுடைய சீதையைக் கண்டு மோகமுற்று கவர்ந்து செல்ல இயலாதவனாகி வெளியே சொல்லவும் முடியாத காமப் பெரு நோய் பற்றிக் கொள்ள மிகுதியான ஆசையினாலே, அழகிய மேனி மெலிவுற்று அழிந்தான்.
. சீதையைக் கவரும் ஆற்றல் மன்மதனுக்கும் இல்லை என்று சொல்லிஅதனைச் செய்யுமாறு இராவணனை மறைமுகமாகத் தூண்டுகிறாள் சூர்ப்பணகை. உண்மையான மன்மதன் உருவிலியான காரணம் ஒன்றாக இருக்க, மற்றொன்றைக் காரணமாக்குகிறது கம்பன் வரி. அதான் ஒழிப்பு அணி. ஒரு பொருளினுடைய சிறப்பு பண்பு ஆகிய உண்மை நிலைகளை மறுத்து மற்றொன்றினை அப்பொருள்மேல் குறிப்பாக ஏற்றி உரைக்கும் அணி இது.
ஒரே கல்லிலெ எத்தனெ மாங்கா?
இதோ கம்பர் தந்த ஒழிப்பு அணி வரும் அந்தப் பாடல்
”ஈசனார் கண்ணின் வெந்தான்” என்னும் ஈது இழுதைச் சொல்; இவ்
வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன், வவ்வல் ஆற்றான்,
பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட
ஆசையால் அழிந்து தோய்ந்தான் அனங்கன், அவ்வுருவம் அம்மா!
[ஆரண்யகாண்டம் – சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்]
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.