நினைப்புதான் பிழைப்பைக்….


கற்போம் கம்பனில் – 23
(11-04-2020)

இந்த டிக்டாக் மாதிரியான வீடியோக்களைப் பாத்துப் பாத்து, நாம வீட்லெ சாதரணமா பேசும் போது கூட இப்படிப் பேச ஆரம்பிச்சிட்டோம்ணு காத்து வாக்கில் தகவல் வந்தது. சரி… நாமளும் பேசுவோம்லெ ரேஞ்சில், வீட்டு அம்மணியிடம் அன்பாய் ஆரம்பித்தது வம்பு. (வம்பனிடமேவா?) (கடந்த 24 ஆம் தேதியிலிருந்து என்ன பேசினாலும் சண்டையே வரலைங்கிறது சபைக் குறிப்பிலிருந்து எடுத்துடுங்க) ”ஆமா… இந்த மான் எல்லாம் ரோட்டுலெ திரியுதாமெ?”; ”அப்படியா…?” என்றென். ”மானெ காட்லெ பாத்திருப்பீங்க, ரோஸ் தீவுலெ பாத்திருப்பீங்க, ஐஐடியிலெ பாத்திருப்பீங்க… செத்தெ இருங்க… “ மாடிக்குப் போயிட்டாங்க..

நான் சொல்ல நெனெச்ச டிக் டாக் சங்கதி என்னன்னா, மான் தான் நம்ம வீட்லேயே இருக்கே (கண் பாத்து) சொல்ல ப்ளான். என் நினைப்பில் விழுந்தது மண். இப்படி நாம ஒண்ணு நெனெச்சா, வீட்டுக்காரி வேறு மாதிரி நினைப்பதில் தான் சுவாரஸ்யமே இருக்குது (14 ஆம் தேதி வரைக்கும் இப்படித்தான்) அம்மணி வந்தாங்க. ”… மானெச் சேலையில பாத்திருக்கீங்களா?”; “… அட ஆமா… முந்தானை பார்டர் முழுக்க மான் போட்ட சேலையில் என்மான். ”ஆமா இந்தச் சேலை எப்பொ வாங்கினது சொல்லுங்க?” என்ற கேள்வி வந்து, அதுக்கு தப்பா பதில் சொல்லி (எல்லா கனவன்மார்கள் மாதிரித்தானே நானும்) சிங்கம் பட டயலாக், ஓங்கி அடிச்சா…, வருமுன் விடு ஜுட்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை; இந்த மாதிரி PBS தத்துவப் பாடல்கள் தான் இந்தக் கரோணா நேரத்தில் செமெ ஆறுதலா இருக்கு. தெய்வம் இல்லை; ஓடிப்போச்சி என்று நினைக்கும் கூட்டம் ஒருபக்கம்; இதுவும் தெய்வச் செயல் தான் என்பவர் மறுபக்கம். நான் எங்கே இல்லேன்னு சொன்னேன்? இருந்தா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் நம்ம பரமக்குடிகாரர்கள். (24 ஆம் தேதி முதல் பரமக்குடிக்காதவர்கள்)

நாமெல்லாம் ரொம்ம்பக் கேஷுவலா தேதி ஷீட் கிழிப்போம். ஆனா இந்தக் கற்பனை வளம் உள்ளவர்கள் நெனெப்பே வேறு மாதிரி இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பாத்தாக்கா, கண்ணாத் தெரியுதாம் (அது என்ன கண்ணாத்தாள் கண்ணா? அல்லது நெற்றிக்கண்ணா?) சரி… திங்கள் வந்தா பெண்ணா நெனெப்பு வருதாம். ஒருவேளை ‘கள்’ வந்திருப்பதாலோ? அப்பொ சொல்லவே வேணாம் வாய் வந்தால், செவ்வாய் கோவைப்பழம் தான் நினைவிற்கு வந்திருக்கும். (ஆமா சனி வரை ஏன் நெனைக்கலை? என்று கேட்டால், என்ன கிரகமோ? என்று விட்டிருப்பார்களோ? – இது என் நினைப்பு)

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். (ஆன இந்த டை கட்டுவது மட்டும் எனக்கு ஆகவே ஆகாது – கட்டத் தெரியாது என்பதை இன்னும் நாகரீகமா எப்படிச் சொல்ல முடியும்? ) ஆனா சுதந்திரத்திற்கு முன் உள்ள இந்தியர்களின் உடைகள் என்பது ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கிறது. அது எப்பொ பேண்ட் சர்ட் கோட் என மாறினதோ அன்றைக்கே உடையின் தன்மையும் மாறிவிட்டது. தான் ஒரு பெரீய்ய வித்தைக்காரன் என நெனைக்க வைக்க (அடுத்தவங்களுக்காக) நவீன உடை தேவைப்படுது.

கடந்த 24 ஆம் தேதி அறிவிப்பில் இலக்குவன் ரேகைக்குள் இருக்கணும் என்ற வேண்டுகோள் வந்தது. ஆனா நம்ம கவிகள் ஒரு கோடு கிழிக்கிறார்கள். அதுவும் தான் என்னனு பாக்கலாமே?

நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு

இதில் நீ என்னெ நெனெச்சே என்றும் யோசிக்கலாம் அல்லது நீ என்ன நெனெச்சே? எனவும் கேக்கலாம் போல் இருக்கோ?

திருமுனிவரின் அணிக்குறளில் லேசா கொஞ்சம் நித்தியின் நெடி வீசும். அதிகமில்லை ஜெண்டில்மென்,,, லேசா…லேசா…; நித்தி பெண்களைப் பாக்குறாராம். ரதா மாதிரி உடை அனிந்தவங்களைப் பாத்தாராம். நித்திக்கு உடனே ரதா ஞாபகம் வந்ததாம். (நெசமாவான்னு கேக்காதீங்க..சும்மா ஒரு உதாரணத்துக்காய்த்தான்) நித்தி வச்சி விளக்கம் சொல்லவரும் திருமுனிவரின் அ(ண்)ணிக்குறள் இதோ:

அவள்போல் உடையணிந்த பெண்களைக் கண்டு
அவளென்றே நோக்குது கண் கண்டு.

நித்தியாவது ஓரளவு பரவாயில்லை. நம்மாளு ஒருத்தரு தாமரையெப் பாக்குறார். அவங்க மனசுலெ உள்ளவங்க முகம் தாமரையில் தெரியுதாம்,. (சிவா மனசுலெ சக்தி மாதிரி, எந்தச் சிவா மனசுலெ எந்தச் சக்தியோ?)

“ காதலுறு கஞ்சமலர் கண்ட வெனது மனங்
கோதைமுகந் தன்னைநினைக் கும்.”

ரெண்டு வரியிலெ இப்படி ஒரு எஃபெக்ட் வரும் என்பதை நெனைச்சே பாக்கலை.

வாவ்ங்…வாவ்ங்,,,வாங்க் என்ன சரன் ஒலியுடன் ஒரு ஹாஸ்பிடல் கார் வந்தது. வின்வெளி வீரர் உடையில் ஒருவர். ஆஹா நம்மளெ டெஸ்ட் செய்ய வந்துட்டாங்க போலெ..நெனெச்சி .. பயந்தே போனேன். ஆனா வந்தது கம்பர். ”ஐயா இதென்ன கோலம்” என்றேன்? ”ஒண்ணுமில்லெ. யாருக்கு கரோணா இருக்கு? இல்லை என்பதே தெரியலை. அதான் இந்த PPE சகிதம் வந்துட்டேன். ஆமா… லாக்டவுன் முடிஞ்சதும் மக்கள் ஜனத்திகை கூடும்கிறாங்களே? அதுபத்தி உன் கருத்து என்ன?” கேட்டார் கம்பர். (ஆமா அதெ என்கிட்டே ஏன் வந்து கேட்டார்?) “…அப்படி இல்லை ஐயனே; எங்கெங்கயோ ரெண்டுபேர்லெ ஒருவர் (அல்லது இருவருமே) சுத்தி வருவதினால், ரொம்ப ஜாக்கிரதையா இருப்பதால் சிக்கல் இருக்காது என நான் நினைக்கிறேன்”;

”…ம்… அப்பொ சரி; அப்புறம்… ’நினைப்பது’ என்ற வார்த்தை இப்பதிவில் அதிகம் பயன் படுத்தப்பட்டதால் நினைப்பணி தான் இன்றைய பாடம். என்ன? சரி தானே…? ”

நீங்க சொன்னா சரி தான் ஐயனே…

இதோ கம்பன் பரிந்துரைக்கும் அவரின் பாடல், இந்த நினைப்பணி கற்றுக் கொள்ள!

நாளம் கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய நேவி
வாளங்கள் உறைவ கண்டு, மங்கை தன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் நிலையோன்; மற்றை நேரிழை, நெடிய நம்பி
தோளின்கண் நயணம் வைத்தாள், சுடர்மணித் தடங்கள் கண்டாள்.

[ஆரண்ய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்]

நீண்ட வில்லை உடைய இராமன் தண்டினைக் கொண்ட தாமரை மலராகிய படுக்கையில் கண்கள் மூடியிருக்கச் சக்கரவாகப் பறவைகள் (நீர் வாழ் பறவை, வட்டமாய் குவிந்து உயர்ந்து இருக்குமாம்) தங்கி இருப்பதைப் பார்த்து, சீதையின் மார்பகங்களைப் பார்த்தான். தக்க அணிகலன்களை அணிந்த சீதை பெரியோணும், ஆண்களிற் சிறந்தவனுமான இராமனின் தோளினைப் பார்த்தாள். ஒளி வீசும் நீல மணிகளால் ஆகிய குன்றுகளை நோக்கினாள்,

ஆக…, ஒரு பொருளைக் கண்டு, அதனோடு ஒப்புமையுட்டைய மற்றொரு பொருளை நினைத்தலின் அமையும் அணி ‘நினைப்பணி’ எனப்படும். வடநூலார் இதனை ஸ்மிருதி மதாலங்காரம் என்பர். என்ன புரிந்ததா? வாவ்ங்…வாவ்ங்,,,வாங்க்… மீண்டும் சைரன் ஒலியோடு கிளம்பினார் கம்பர்,

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s