கற்போம் கம்பனில் – 22
(08-04-2020)
இந்த மீம்ஸ் போடுபவர்களின் சமயோசித புத்தியினையும், சந்தடி சாக்கில் தாங்கள் நினைத்ததை சொல்லும் விதமும் பாராட்டியே ஆகணும். சமீபத்திய ஒரு பதிவில் கரோணாவால் வருமானம் இழந்தவர்களுக்கு உதவிய செய்தி. சந்தடி சாக்கில், பாதிக்கப்பட்டோர்கள் ஏற்கனவே ஜி எஸ் டி ஆல் வேறு பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தியில் சிந்து பாடியது ரசிக்க வைத்தது. சாதாரணமான ஒன்றை வித்தியாசமாய் யோசித்து செய்வதில் தானே கிரியேட்டிவிட்டியே இருக்கு, (அதெப்படி நம்ம கணவர் ஜாதியிடம் இந்த மனைவிமார்கள் மட்டும் புதுசு புதுசா கிரியேட்டிவா குத்தம் கண்டு பிடிக்கிறாய்ங்க…? கணவர் – மரியாதை… கவனிக்க. நாமளே நமக்கு மரியாதை குடுக்காட்டி அப்புறம் எப்படி?)
கியா மியா என்று கையில் கெடெச்ச மியூசிகல் இன்ஸ்ட்ரூமென்ண்ட்ஸ் (அல்லது விளையாட்டுச் சாமான்கள்) வச்சி வித்தியாசமா கலாய்ச்சிகிட்டு இருந்தராம் ஒரு மனுசன். அவர் வீட்டிலும் சரி, நண்பர்களும் சரி நிச்சயமா, ஆளு செமெ போருப்பா என்று சொல்லி இருப்பாய்ங்க. ஆனா எந்த விதமான சினிமாவிலும் வராமல், சின்னத்திரை மானாட மயிலாட மாதிரி நமீதா கூடவும் வராமல், தனியா நின்னூ அலெக்ஸ் (இன் ஒண்டர்லேண்ட்) ஸ்டாண்ட் அப் காமெடியில் (பல சமயம் சிட் அப் தான்) கலக்குவது ஆச்சரியமா இருக்கில்லே? ஒன்றை சொல்லும் போதே இன்னொன்றும் மனசிலெ வர வழைக்கணும். அது தான் நல்ல வித்தைக்காரனுக்கு அழகு.
அந்தக் காலத்திலேயே, கிவாஜா இதில் கில்லாடியா இருந்திருகார். (மனுசன் 150 புத்தகங்கள் மேலே எழுதி இருக்கார்… ஆமா அவங்க வூட்டம்மா ஒண்ணும் செல்லாமலா இருந்திருப்பாய்ங்க. இது தான் ஏடா கூடமா, ஒண்ணு கிடக்க ஒண்ணு நினைப்பது என்பது…) ஒரு தோஸ்த் வீட்டுக்குச் சென்றிருந்தார் கி. வா. ஜெகந்நாதன்; ஒரு டம்ளரில் குடிக்க பால் வந்தது; பாலிலே இறந்த எறும்பு மிதந்து இருந்ததாம்.,
”சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்”
என்றாராம்., சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது; சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார்; எப்புடி யோசிப்பு பாத்தியளா? அந்தக்காலத்து மாம்ஸ் குடுத்த மீம்ஸ் இது. (ஆனா இப்பொ உள்ள நிலமையில், கடைசி காலத்தில் பால் ஊத்தவும் முடியாது போலிருக்கே இந்த கரோணா புன்னியத்தில்??)
நம்ம திரைப்படப்பாடல்கள் கூட இப்படி வித்தியாசமா யோசிச்சதுண்டு (அப்படி யோசிச்சி எழுதின மாதிரியா அது படலை…) கல்யாணம் கட்டிகிணு ஓடிப்போலாமா? அல்லது ஓடிப் போயி கண்ணாலம் கட்டிக்கலாமா? என கேக்குது. ஆனா நச்சுன்னு ஒரு புதுக் கவிஞன் கேட்டது பளீச்…
முல்லையின் தேவை
கொம்பு மட்டுமல்ல
பந்தலும் தான்
மேம்போக்காப் படிச்சா, ஒரு குச்சி மட்டும் இருந்தால் போதாது முல்லை படர.. அதுக்கு பந்தல் போட்டாத்தான் அது படர்ந்து வளரும்ணு அர்த்தம் வரும். ஆனா கண்ணாலம் மனசுலெ வச்சிகினு படிங்களேன்… (ஆமா இந்த காலம் போன காலத்திலெ அதெப்பத்தி எல்லாம் யோசிக்கணுமா என்ன?) வேறு ஆங்கிள்லே அர்த்தம் கிடைக்கும். முல்லைக்கொடியாளின் தேவை ஒரு மஞ்சள் கொம்பு கட்டிய தாலி மட்டுமல்ல; பந்தலிட்டு நடக்கும் திருமணம் (அதாவது திருட்டுத் தாலி வேணாம், ஊரறிய கல்யாணம் வேண்டும்) சூப்பரில்லெ. ஆறே வர்த்தையும் இம்புட்டு அரத்தமா?
நாமளும் யோசிப்போம்லெ… இப்புடி! டிவி செய்தி சொல்லுது: சரக்கேற்றும் தொழிலாளி, சரக்கில்லாததால் தற்கொலை. (சரக்கு என்பதற்கு ரெண்டு மீனிங் எல்லாமா வெளக்கணும்? ஆனா இதே மேட்டரெ வச்சிக்கிணு, அந்தக் காலத்திலெ வாரியார் சுவாமிகளும் கலாய்ச்சிருக்காரு. (சரக்கு பத்தி வாரியாரா? – இப்படி வாரியார் வாரிசுகள் சண்டைக்கு வந்திடப் போறாய்ங்க!) ஒன்றும் இல்லை ஜென்டில்மென். வாரியார் சுவாமிகள் சொன்னது இது தான்: “அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்” என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.” அப்பொ அந்தக் காலத்திலும், கிழங்குகள் சாப்பிடாமெ கிழங்கள் பழங் ”கள்” சாப்பிட்டிருக்காய்ங்க… (சாமீ என்ன சொல்ல வந்தாரு, நம்ம மர மண்டைக்கு என்ன புரியுது பாத்தீயளா?)
எல்லாத்துக்கும் பார்வைகள் பலவிதமா இருக்கும். அதனை School of Thoughts என்பார்கள். முகம்மது நபிக்கு முன் அரபிகள் கூட இப்படித்தான் எடக்கு மடக்கா பேசிட்டு இருந்தாகளாம். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசினாகளாம். யூதர்களும் அப்படியே பேசினாகளாம். எதுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணை யோசிக்கனும்? தெளிவான பொருள் கொண்டு பேசுனாலே போதும் என இஸ்லாம் சொல்லி, எடக்கு மடக்கா பேசுவதை இஸ்லாம் தடை செய்ததாம்.. ஆச்சரியமா இருக்கில்லெ..?
இன்னும் கொஞ்சம் முன்னாடி போய் எட்டிப் பாத்தா ஒரு பாட்டு சிக்குது.
தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா அரிமா னிடர்மிகுப்ப – உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு
சோழனோட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் செட் ஆகிற மாதிரி பாடின பாட்டு இது.
ஆதரவாளர்களுக்கு சப்போர்ட் செய்யும் அணியின் சார்பாய் பொருள் இப்படி பாக்கணுமாம். அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.
அப்படியே சோழனை எதிர்போர் படிச்சா இப்படி படிக்கணுமாம். அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.
என்ன கிட்டு…, குண்டக்க மண்டக்க யோசிக்கிறதெ விட்டு ரண்டக்கா
ரண்டக்கா மாதிரி ரெண்டு ரெண்டா மீனிங்க்ளேயே யோசிக்கிறீயே ? – சொல்லியபடி ஜும் வீடியோ காலில் வந்தார் கம்பர். (இந்த லாக் டவுன் முடியும் வரை ஆன் லைன் சந்திப்பு தான்)
இதெத்தான் சிலேடை அணி என்று சொல்றாய்ங்க. ஒத்தெ வார்த்தெ அல்லது குரூப் ஆஃப் வாத்தைகள் வச்சி, பல மீனிங்கு வார மாதிரி வாருவது தான் சிலேடை. உன் கூட சேந்து சேந்து எனக்கும் உன் நடையே தொத்திக்குது (ஆன் லையனின் வந்தாலும் கூட). நம்ம பாட்டும் படிச்சிப் பாரு; ஆறுக்கும் கவிக்கும் முடிச்சுப் போட்டது. நதியே நதியே.. என்று நதிக்கும் பெண்ணுக்கு முடிசுப் போட்டதை உன் மனசு முடிச்சுப் போட்டா, அதுக்கு நான் பொருப்பல்ல.
சொல்லி மறைந்தார் கம்பர். சடையப்பர்கள் மாதிரி ஸ்பான்சர் இல்லாததால் ஃப்ரீ வீடியோ காலில் 40 நிமிசம் மேல் இருப்பதில்லை. கம்பர் தந்துவிட்டுச் சென்ற பாடல் இதோ:
புவியினுக்கு அணிஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்
[ஆரண்ய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்]
பூமிக்கு ஓர் அணிகலன் போன்று அழகூட்டுவதாய் அமைந்து, சிறந்த பொருள்களைக் கொடுத்து, வயல்களுக்கு பயன்படுத்துவதாக ஆகி, தன்னுள் அமைந்த பலநீர்த்துறைகளைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து நிலப்பகுதி வழிகளில் பரவிச் சென்றுசெவ்வையாய் தெளிவுடையதாகி குளிர்ந்த நீரோட்டமும் உடையதாய் கல்வியில் நிறைந்த பெரியோரின் செய்யுள் போல் விளங்கிய கோதாவரி எனும் ஆற்றை இராமலக்குவராம் வீரர்கள் பார்த்தனர்.
ஆறு ஓரளவுக்கு விளங்கிடுச்சி. இந்த கவிக்கு எப்படி மீனிங்கு? அகத்துறை, புறத்துறை என்றால் புரியுது. அந்த ஐந்திணை நெறி? அது புணர்தல், இருத்தல். பிரிதல், ஊடல், இரங்கல்; ம்… அப்புறம், ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட….’ என்பதின் கம்ப வடிவம் தான், தெண்ணென் ஒழுக்கம். என்னது…. ஊடல் என்றால் என்னவா? இப்பவே பதிவு நீளமாயிடுச்சி.. நீங்களே கூகுல் ஆண்டிகிட்டே கேட்டுகிடுங்க. நம்ம வேலை இன்னெக்கி சிலேடை அணி பத்தி சொல்வது தான். வரட்டா..ஆங்…
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.