கற்போம் கம்பனில் – 21
(06-04-2020)
ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற அடைமொழியுடன் வந்த காமெடி ஜோடியை அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியுமா என்ன? அதில் தான், தன்னைப் பற்றி சொல்லும் போது வல்லவர், நல்லவர் என நாலு பேர் கிட்ட சொல்லணும்டா என்பார். உள்ளதை உள்ளபடி சொல்லாமெ (பொண்ணு பாக்கும் போது சொல்வது போல் – ஹலோ ஹலோ, நீங்க ஏன் என்னைப் பாக்குறீங்க? நான் பொதுவாச் சொன்னது) இங்கே ஒரு பெண் பத்தி ஆஹா ஓஹோ என கண்ணதாசன் சொல்வதைப் பாருங்களேன். ( திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்… பாடலில் தான் இப்படி வல்லவரு.. நல்லவரு என வரும். இனி சுருக்கமா வருநரு என வச்சிக்கலாம்)
சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் (பள பள எனவா?)
நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம் (இனி பிரியாணி செய்யும் போது இந்தச் சிரிப்பைப் பாக்கணும் (வீட்டுக்காரிகிட்டே வேறு ஏதாவது பொய் சொல்லித் தப்பிக்கணும். டிப்ஸ் ப்ளீஸ்..)
செம்பருத்தி பூவை போல சிவந்திருப்பாளாம் (சிவப்புன்னா அது செ ப பூ தான்)
நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்பு சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம் (ஒரு பக்கம் சிவப்பு, மறு பக்கம் செப்புசிலை கலர், இன்னொரு பக்கம் கனிந்த மாம்பழக்கலர்… ஐயா கண்ணதாசரே… உங்க கால் குடுங்க; வணக்கம் வச்சிக்கிறேன்..
கண்ணதாசனை விட்டுட்டு, சமீப காலத்திய எழுத்தளர் ஒருவரைக் கேட்டுப் பாக்கலாம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வருந்திய பரம்பரை தானே நம் பரம்பரை. எழுத்தாளர் சமுத்திரம் ஒரு நெற்பயிர் வாடும் நிலை கண்டி வருந்தினாராம். அவரும் வருநரு மாதிரி அடுக்குகின்றார்; விதவைப் பெண், பதவி இழந்த அரசியல்வாதி, பட்டினி கிடந்த குழந்தை மாதிரி இருந்ததாம். சூப்பரான கற்பனை இல்லை.
ஒரு சங்ககாலப் பாட்டில் திருமதி பாணன், விறலி (அழகான பெயர் இல்லெ?) வருநரு பாருங்களேன். பாடினியைப் புகழ்ந்து தள்ளும் பாடல் இது. மழை போல் கதுப்பு; கதுப்பு போல் மயில், மயில் போல் சாயல்; சாயல் போல் நாய்நாக்கு, நாய்நாக்கு போல் (கால்)அடி; அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை), குறங்கு போல் உயரும் வாழை; வாழைப்பூ போல் ஓதி (கொண்டை), ஓதி போல் பூக்கும் வேங்கை; வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு, சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை; முலை போல் பெண்ணை (பனங்காய்), பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்); எயிறு போல் குல்லைப்பூ, குல்லை போல் முல்லை; முல்லை சான்ற கற்பு இப்படி பிட்டு (உண்மயும் தான்போ
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன்
மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து,
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்,
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என,
மால் வரை ஒழுகிய வாழை: வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி,
நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி,
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து,
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி,
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என,
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என,
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்;
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
எனது பதிவுகளை கிருத்தவ தோழிகளும் (அதென்ன தோழிகள்? தோழன்கள் யாரும் படிப்பதில்லையா என்ன?) இன்று அருள் நிறை மரியம்மை என்ற காப்பியத்தில் நுழைவோம். அதில், இயேசு பிறக்கின்றார். எல்லார்க்கும் மகிழ்ச்சி; சூசை அடைந்த மகிழ்வுக்கு வருநரு பாருங்களேன்;
கண்ணிலான் நோய்க்கண் நீங்கிக் கண்ணொளி பெறும் மகிழ்ச்சி
உண்ணவும் உணர்ச்சியில்லான் உறும்பசிக் குணும் மகிழ்ச்சி
வண்ண ஓவியம் வரைந்தோன் வளம் கண்டு பெறும் மகிழ்ச்சி
தண்ணாரின் மகிழ்ச்சி யாவும் தாமே ஆங்கொருவர் பெற்றார்.
கோணார் நோட்ஸ் தேவைப்படாத பாடல். அடுத்த காட்சிக்குப் போலாமா?
கவிஞர் வைரமுத்து கற்பனை தான் சொல்லவே வேணாம்; பக்கத்தில் கலைஞர் இருந்திட்டா வருநரு வருநரு வந்திட்டே இருக்கும். தளபதியோட மகன் திருமண விழாவில் பேசிய வைரமுத்து மணமக்களை பாலும் நீரும் போல, இமையும்-விழியும் போல, உடலும்-உயிரும் போல இணைந்து வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.. பாலில் தண்ணீர் கலந்தவுடன், பால் தன் நிறத்தையும், குணத்தையும் தண்ணீருக்கு வழங்குகிறது. பிறகு பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கும் போது பாலுடன் இருந்த தண்ணீர் ஆவியாக மாறிப் பாலில்இருந்து பிரிய ஆரம்பிக்கிறது. தன்னுடன் இணைந்திருந்த தண்ணீர் ஆவியாவதைப் பார்த்து வேதனைப்படும் பால் உடனே பொங்கி வழிந்து,எரியும் அடுப்பை அணைத்திட முயற்சிக்கிறது. இதைப் பார்க்கும் தாய்மார்கள், கொதிக்கும் பால் மீது சில துளி தண்ணீரைத் தெளிக்கின்றனர். உடனே தம்முடன்இருந்து பிரிந்து சென்ற தண்ணீர் மீண்டும் வந்து விட்டதாகக் கருதி பாலும் சாந்தமாகி விடுகிறது. எனவே மணமக்கள் பாலும் நீரும் போல் இணை பிரியாது வாழ வேண்டும் என்று வைரமுத்து அவர்கள் சொன்னதும் கலைஞர் uட்பட அனைவரும் கைதட்டி ரசித்தார்களாம்.
என்ன ஒரே பில்டப்பா இருக்கு? என்று கம்பர் உதித்தார் கையில் டார்ச் லைட். ஆமா, 9 மணிக்கு உதவுமில்லே (லைட் அடிக்கவா? தன் பயண உதவிக்கா? கேட்டுக்கலை); என்ன ஒரே ஓவர் பில்டப் சமாச்சாரமா இருக்கே? இதைத்தான் அழகா அடுக்கு உவமை அணி என்று சொல்லுவாக. உவமை தான் தெரியுமில்லே? ரதி மாதிரி மனைவி (மனதில் பிசாசு போல் பிராண்டும்) இப்படி ரெண்டும் உவமை தான்; இதையே ஓவரா, அதான் உன் பாஷையில் வருநரு மாதிரி செய்தால் அது அடுக்கு உவமை ஆகும். நம்ம பாட்டும் பாரேன். 9.9 க்கு மறைந்தார்.
கம்பர் குடுத்துப் போன பாட்டு இது தான்:
கனல் வரு கடுஞ் சினத்து அரக்கர் காய, ஓர்
வினை பிறிது இன்மையின், வெதும்புகின்றனர்;
அனல் வரு கானகத்து, அமுது அளாவிய
புனல் வர உயிர்வரும் உலவை போல்கின்றார்.
[ஆரண்ய காண்டம் – அகத்தியஒ படலம்]
தீப்போல் ஒளிவிடும் மிக்க கோபத்தையுடைய அரக்கர்கள் வருந்துவதால், அவர்களை அழைக்கும் தக்க செயல் வேறு ஒன்றும் இல்லாமையால், வாடும் அம் முனிவர்கள் இராமனின் வரவால் தீப்பற்றி எரியும் காட்டில் தேவரமுதத்தோடு கலந்த நீர்ப் பெருக்கு வருவதால், அழியாது அழியாது பிழைத்துத் துளிர்க்கும்உலர்ந்த மரங்களை ஒத்தவராகின்றனர்.
தண்டகாரணியத்து முனிவர்களுக்குக் காட்டிலுள்ள உலர்ந்த மரங்களும்; அரக்கர்களுக்கு நெருப்பும்; அவர்களின் கோபம் வெப்பமாகவும்; இராமன் வரவுக்கு நீர்ப் பெருக்கின் வரவும்; முனிவர் மகிழ்ந்தமைக்கு உலர்ந்த மரங்கள் தளிர்த்துச் செழித்தலும் உவமையாகும். இப்படி அடுகடுக்கா வந்தா அது அடுக்குவமையணி.
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
சும்மா (காசு கொடுக்காமா !) அடுக்கிக் கிட்டே போறீங்க !
ஓ.எஸ்.ஸுப்பிரமணியன்.
On Tue, 7 Apr 2020 at 06:06, அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:
> Tamil Nenjan posted: ” கற்போம் கம்பனில் – 21(06-04-2020) ஆல் இன் ஆல்
> அழகுராஜா என்ற அடைமொழியுடன் வந்த காமெடி ஜோடியை அவ்வளவு சீக்கிரம் மறந்திட
> முடியுமா என்ன? அதில் தான், தன்னைப் பற்றி சொல்லும் போது வல்லவர், நல்லவர் என
> நாலு பேர் கிட்ட சொல்லணும்டா என்பார். உள்ளதை உள்ளபடி சொ”
>
தேடத் தேடக் கெடெச்சிட்டே இருக்கே…