கரோணாவால் என்ன பயன்?
கற்போம் கம்பனில் – 19
(30-03-2020)
‘எல்லாம் நன்மைக்கே…’ என்று சொல்லிக் கேட்டிருப்பீங்க. இது ஒரு வகையிலெ பாத்தாக்கா, நம்மை நாமே எந்த இடர் வந்தாலும் சாமாளிப்பதற்கு மனசெப் பக்குவப் படுத்தும் செயல் மாதிரி தான் படுது. இப்பவும் தான் பாருங்களேன்… உலகமே கரோணாவின் கோரப் பிடியில் இருந்தாலும், கரோணா வந்ததால் என்ன பயன்? என்று யோசிக்க இடம் தந்திருக்கு. இதுவும் ஓர், ’எல்லாம் நன்மைக்கே’ என்ற இலவச இணைப்பு தானோ? (என்ன… மனதில் யாரெப் பாத்தாலும் வைரஸ் பாதித்த ஆளா இருப்பாரோ? என்ற சந்தேகம் மட்டும் இருக்கத்தான் செய்யுது)
நாங்க எல்லாம் பாக்காத வைரஸ்ஸா? வருஷம் முழுக்க செத்துட்டு தான் இருக்காக? இந்தக் கரோணா எல்லாம் நமக்கு ஜுஜுபி என ராஜ நடை போட்டவர்களும் உண்டு (அவர்களுக்கு இராச மரியாதை கிடைத்ததும் தான் தெரிஞ்ச கதையாச்சே!) அது சரீ கரோணாவால் என்ன பயன்? அதெச்சொல்லுங்க முதல்லெ (இது நெல்லை பழனிராஜின் மைட் வாய்ஸ்)
அந்தமானில் சுனாமி வந்தப்பொ அதோட ஸ்பெல்லிங்கூட தெரியாமெ இருந்தோம். (சுனாமியில் T என்ற எழுத்து இருப்பதே ரெண்டு நாள் கழிச்சித் தான் விளங்கியது) நல்ல வேளை இந்த கரோணாவில் அப்படி ஒரு சிக்கல் இல்லாமல் Covid 19 என அழைக்கப்படுது? (இதுலெ என்ன பயன் வருது? இப்படி தில்லியிலிருந்து குங்கமப் பொட்டு வைத்த சந்துரு புருவம் உயர்த்துகிறார்). ஒரு பொது அறிவு வளத்துக்க உதவியது; இப்படி வச்சிக்கலாமே!
யாருக்கு பயன் இருக்கோ இல்லையோ, என் இல்லத்தரசிக்கு கண்டிப்பாக உண்டு. எப்பொப் பாத்தாலும் ஆஃபீஸ் வேலையை தலையிலெ அட்லெஸ் தூக்கிட்டு சுமக்கிற மாதிரியும், கொஞ்சம் நின்னா உலகம் சுத்துறதே நின்னுடும் போல இருந்தீங்களே… (ஆக… வீட்லெ ரொம்பத்தான் பில்டப் குடுத்துட்டோமோ?) இப்பொ 21 நாள் வீட்டோட கிடங்க என்கிறாய்ங்க.. உங்க ஆஃபீஸ் எல்லாம் நடக்கத்தானே செய்யுது? (ஐயா சாமி இந்த மாதிரி ஞானோதயம் வர்றதுக்கு கரோணா வரை வரவழைக்கணுமா? ஆண்டவனே…)
இதே மாதிரி, இலக்கிய மன்றம் வாங்க, இலக்கியம் படிக்கலாம் எனக் கூப்பிட்டா, உடன் வரும் பதில், ”அதனாலெ என்ன பயன்?” ; என்னைக்கேட்டா இலக்கியம் ஒரு போதை அதாங்க ‘கிக்’; ஒரே ஒரு வித்தியாசம். ஒரு மனுஷனை ஆரம்ப காலத்தில் சரக்கடிக்க வைக்கிற மாதிரி, இது ஈஸியான வேலையா மட்டும் இருப்பதில்லை. ஆனா அந்த டேஸ்ட் மட்டும் பாத்துட்டாய்ங்க, அம்புட்டுத்தான்.
வாங்க அப்படியே போதை தரும் ஓர் இலக்கியத்துப் பக்கம் போய் ஒரு பார்வெ பாத்துட்டு வருவோம். அதிலும் ஏதாவது பயன் இல்லாமலா போவுது? நாம எட்டிப் பாப்பது திருவாளர் திருவள்ளுவர் வீட்டிலெ. லாக் டவுன் பீரியட்லெயும் வாசுகி அம்மா விசிறி எடுத்து வீசிட்டு இருக்காங்க. குடுத்துவச்ச மவராசன்.. (ம்..ம்… எல்லா வீட்லெயும் நடப்பது தானே? இதுலெ என்ன எங்க வீட்டுப் பக்கம் எட்டிப் பாக்கீக?) வள்ளுவர் ஒரு குறள் காட்டினார்.
தேவர் அனையர் கயவர் அவரும்தான்
மேவன செய்து ஒழுகலான்
என்ன தான் ஊரடங்கு சட்டம் போட்டாலும் சரி, நம்மளைக் கேக்குறதுக்கு எவன் இருக்கான் என்ற மெதப்பில், ஆகாயத்தில் மிதப்பவர்கள் தேவர்களாம். கிட்டத் தட்ட அதே மாதிரி தான் எந்தவிதமான லத்திசார்ஜ், உக்கி போடுதலுக்கும் கட்டுப்படாமல் சுத்தும் இளவட்டம் தான் கயவராம். கயவர் எப்பேர்ப்பட்ட ஆளுன்னு சொல்லப் போய், தேவர் மாதிரி (But not exactly like that) என கமல் மாதிரி முடிகிறார் நம் வள்ளுவர். தேவர்கள் செய்யும் எல்லாக் காரியத்திலும் ஒரு பயன் இல்லாமலா இருக்கும்? (பயன் இருக்குமா… இருக்காதா?)
எனக்கு லேசா இப்படி ஒரு டவுட் வருது! மழை பெய்தால் கரோணா ஒழிப்புக்கு பயன் கிடைக்குமா? பதில் சொல்லத்தான் ஆள் இல்லை. அந்தமானில் மழை மே மாசம் ஆரம்பிக்கும். அதுக்குள் இந்த கரோணாவாசம் (ஜானவாசம், வனவாசம் மாதிரி யோசிக்க வேண்டி இருக்கு… ஐயோ..ஐயோ…) ஆனா மழை பத்தி பாடுவது நம்ம கவிகளுக்கு தண்ணி பட்ட பாடு. அவர்கள் கொடையாளிகளை ஆஹா ஓஹோ என்று புகழ்வதில் கில்லாடிகள். ஒருவகையில் பாத்தாக்கா, பயனாளிகள் இவர்கள் தானே (சிலர் மைக் வச்சி மேடை பூரா பகழ்வதும் நடக்குது.) மழை பத்தி வரும் ஒரு பாட்டும் பாருங்களேன்:
மாரி அன்ன வண்கைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே
ஆய் என்ற வள்ளல் மழை மாதிரி தரக்கூடியவராம். சலோ…ஆய் சலோ. என்று தமிழ்ப் புலவர் கிளம்பின கதை சொல்லும் பாடல் இது. பயன் வேண்டிப் புறப்பட்ட பயணம் தான் இதுவும்.
லொக் லொக்… ரிங் டோன் கேட்டது; பார்த்தால் அருகில் என் 95 மாஸ்க் போட்டபடி கம்பர்; நான் வந்ததில் என்ன பயன் என்று கேப்பியோ?
இதோ இந்த மழை சம்பந்தப்பட்ட பாட்டுக்கு விளக்கம் சொல்றேன்.. மாரியால் அதாகப்பட்டது மழையினால் விளையும் பயனும், வள்ளலின் கொடையால் விளையும் பயனும் ஒட்டுக்கா இருக்காம். ஆக… சுத்தி வளைச்சி பயன் உவமை அணி பத்திச் சொல்ல வருவது தெரியுது. இப்படி ஒரே மாரிதி இருக்கிறதாலே இது பயன் உவமைங்கிறாய்ங்க.
ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும்உவமை, பயன் உவமை எனப்படும். (அப்பாடா தூய தமிழில் கூட ஒரு வரி எழுத வருதே!) உவமை அணியை பொதுவாக பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என மூன்றாகப் பிரிக்கலாம்; ராமாயணத்திலெ அதிகாயனுக்கு கரோணா பாசிட்டிங் எனத் தெரிஞ்ச போது, (சாரீ சாரீ ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி) இலக்குவன் கையால் மரணிக்கும் போதும் ஒரு பயன் உவமை அணி வரும்… போலீஸ் சைரன் கேட்டதும், பாட்டு தந்து மறைந்தார் கம்பர்.
இதோ கம்பர் தந்த பாடல்:
எய்தனன் எய்த எல்லாம், எரி முகப் பகழியாலே
கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில் கோபம்
செய்தனன், துரந்தான், தெய்வச் செயல் அன்ன கணையை; வெங்கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத
[யுத்த காண்டம் – 2; அதிகாயன் வதைப் படலம்]
ஆடவர் திலகனாகிய இலக்குவன், அதிகாயன் எய்த எல்லா அம்புகளையும், நெருப்பை முகத்தில் கொண்ட அம்பால் அறுத்து அகற்றி, பேரொலி செய்யும் அரக்கனாகிய அதிகாயனைக் சினந்தவன் ஆகி தவறாது பயன் விளைக்கும் தெய்வச் செயலை ஒத்த அம்புகளைச் செலுத்தினான். இலக்குத் தறாத அந்தக் கொடிய அம்புகள் எல்லாமந்த அதிகாயனுடைய கவசத்தை எளிமையாகப் பிளந்து நுழைவனவாயின.
தெய்வச் செயல் அன்ன கணை – செய்த வினைக்கு ஏற்பப் பயன் விளைவிக்கும் தவறாத தய்வச் செயலை ஒத்த அம்புகள். பாத்தீங்களா… இது தான் பயன் உவமை அணி.
கரோணாவும், நாம செய்த வினைக்கு ஏற்பப் பயன் தரும் என மனசெத் தேத்திக்கலாமோ? கம்பருக்கே வெளிச்சம்.
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
கம்பர் வந்து அருமையான செய்தியை தந்து விட்டு சென்று விட்டார்…
எனக்கு ஐயன் கூடவே இருப்பார்…
எந்தக் கேள்விக்கும் விடையுடன் கம்பன் வருவது தான் சிறப்பு ஐயா.