கற்போம் கம்பனில் – 16
(17-03-2020)
சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடினார்கள். (அது தான் எல்லாரும் தான் கொண்டாட்றாகளே… இதெல்லாம் ஒரு மேட்டரா?.. அடெ… கொஞ்சம் என்னன்னு தான் கேளுங்களேன்) நிகழ்சியின் ஒரு பகுதியா பெரீய்ய கேக் வெட்டும் ஏற்பாடும் இருந்தது. ஏற்பாட்டாளர்கள் கேக்கை சுத்தி 21 விளக்குகள் (3X7 =21 கணக்கில் – அது என்ன கணக்கோ?) வைத்திருந்தனர். அபசகுணமாய் விளக்கை அணைப்பதற்குப் பதிலாய் விளக்கேற்றி மங்களகரமாய் ஆரம்பித்தால் என்ன? என்று யோசித்திருந்தனர். (நிச்சயமாய் இது என் ஐடியா கிடையாதுங்க!!)
20 வருவங்களுக்கும் முன்பு இப்படித்தான் என் பையனின் முதல் பிறந்தநாளை வித்தியாசமாக் கொண்டாட நெனெச்சேன். அந்தமானில் இருக்கும் ஒரு வன்வாசி கல்யாண் ஆசிரமத்தில் இருக்கும் ஆதிவாசி குழந்தைகளோடு கொண்டாட நினைத்தோம். அங்கும் இதே போல் மெழுகுவர்த்தி அணைத்து கொண்டாடாமல் விளக்கேற்றி கொண்டாடினோம். தனி மனிதனது விருப்பம் குழு விருப்பமாய் மாற, இப்படி 20 வருஷக் கணக்காய் வெயிட் செய்யணுமோ? ஒரு விளக்கின் ஒளி வைத்து பல விளக்கை ஏற்றுவது எனக்கு உள்ளுக்குள் A(B+C) = AB+AC என்பதை ஞாபகப் படுத்தியது.
இந்தக் கணக்கு எல்லாம்விடுங்கோ..தில்லியில் சானிடைஜர் வாங்கப்போனா, 25% ஆல்கஹாலா அல்லது 75% ஆல்கஹால் உள்ளது வேண்டுமா என்கிறாள் அந்த (மூக்கு+வாய்) அடைத்த மங்கை. (ஆமா என்கிட்டே ஏன் அந்த ஆல்கஹால் பத்தி இவ்வளவு டீட்டெய்லா சொன்னா?) அழகிய மங்கையா? எனக் கண்டுபிடிக்க இயலவில்லை? கண்ணு நல்லா இருந்தது. போதுமா? இப்பொ சந்தோசமா?
ஆமா நடுவில் இந்த ‘+ ‘ போட்டு வந்த கணக்கைப் பாத்தீங்க தானே? அது ஏதோ 1917 வாக்கில் வந்த பூலியன் அல்ஜீப்ரா மாதிரி தெரியுதே? உங்களுக்கும் தெரியுதா? கரோனாவை வைத்து வைத்திருக்கும் தலைப்பைப் பார்த்திகிடுங்க ஒரு முறை. இப்பொ எல்லாம் விளங்கியிருக்குமே?
இந்தக் கணக்கெ ஓர் ஓரமா வச்சிட்டு, நாம கொஞ்சம் மனக்கணக்கா ஒரு பழைய பாடலெப் பாப்போமே. சினிமா பாட்டா? பாத்தாப் போச்சி… வீரத்திருமகன் படத்தில் வரும் ஒரு பாட்டு. PBS மென் குறளில் பாடி அசத்தும் அப்பாடல் தான் ‘ரோஜா மலரே ராஜகுமாரி…” எனத் தொடங்கும் பாடல். அந்தப் பாட்டில் நம்ம பூலியன் அல்ஜீப்ரா போல் வந்திருக்கும் பாட்டு வரிகள் இருக்கு. என்ன நம்ப மாட்டீங்க தானே?
பாடல் வரிகள் இப்படி வருது:
மன்னவர் நாடும் மணிமுடியும், மாளிகை வாழ்வும், தோழியரும்
பஞ்சணை சுகமும் பால்பழமும், படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர்போல் மறையாதோ?
இதனை பூலியன் அல்ஜீப்ரா போல், மறையாதோ (மன்னவர் நாடு + மணிமுடி + மாளிகை வாழ்வு + தோழியர் + பஞ்சணை சுகம் + பால்பழம் + , படை + குடை + சேவகர்) = மன்னவர் நாடு மறையாதோ , மணிமுடி மறையாதோ, மாளிகை வாழ்வு மறையாதோ, தோழியர் மறையாதோ, பஞ்சணை சுகம் மறையாதோ, பால்பழம் மறையாதோ, படை மறையாதோ, குடை மறையாதோ, சேவகர் மறையாதோ இப்படியும் படிக்கலாம்.
இதெல்லாம் சினிமா பாட்டில் தான் சாத்தியம் என்கிறீர்களா? இல்லை.. இல்லை.. இலக்கியப் பாடல்களிலும் அதாவது 1917க்கு முன் எழுதப்பட்ட பாடலிலும் இதனைப் பார்க்கலாம். பாத்துட்டாப் போச்சி.
“சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள் இழிகுருதி – பாய்ந்த
திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த அம்பும்
மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து.”
இங்கே சேந்தன என்றால் சிவந்தன என்ற பொருளாம்… (பெருமூச்சு எல்லாம் விடாதீங்க… எனக்கு மட்டும் முன்னாலேயே தெரியுமா என்ன? நானும் இப்பத்தான் படிக்கிறேன்) அரசனுடைய கண்கள் சிவந்தன; பகை மன்னரின் தோள்கள் சிவந்தன; போரில் சொரிந்த இரத்தம் பாய்ந்த திசைகளெல்லாம் சிவந்தன; வீரவிற்கள் பொழிந்த அம்புகளும் சிவந்தன. அவ்விரத்தத்தின்மேல் வீழ்ந்த பறவைகளும் சிவந்தன;
எப்புடி? பூலியன் இங்கும் பொருந்துதா என்ன? என்னது… குறளிலா? ஏங்க இருப்பதே 7 வார்த்தை, ரெண்டே ரெண்டு வரி. சாலமன் பாப்பையா கிட்டே கேட்டேன்; இருக்குதே என்கிறார். வாங்க அதையும் ஒரு ரவுண்ட் (அதான் கூட்டம் கூடப்படாத்துண்ணு மூடிட்டாய்ங்களே?) பாத்திடலாம்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் (குறள் – 133)
இதில் ஒழுக்கம் (உடைமை குடிமை+ இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்). என்ன பூலியன் இங்கும் ஓகே தானா?
புஷ்..புஷ்.. என்ன இது சத்தம்?
திரும்பிப் பாத்தா சானிடைஜர் போட்டு தயாராகி வந்தார் கம்பர்.
என்ன கரோனா மாதிரி நீயும் மக்களை கணக்கு, பூலியன்னு சொல்லி பயமுறுத்திகிட்டே இருக்கே?
இது சிம்பிளா தீவக அணி (தீவனம் என ஞாபகம் வந்தால் லாலு சாரீ சாரீ நான் பொறுப்பல்ல) ஒரு சொல் உருவகிக்கப்படும் பல சொற்களுடனும் தனித்தனியே இயைந்து பொருள்படும் வகையில் அமைவது தான் தீவக அணி. அது. இப்பொ இதெ பூலியன் கணிதம் என்கிறார்கள்.
நாமளும் நம்ம ராமாயணத்திலெ இப்படி பல பாட்டு வச்சிருக்கோம்லெ… இதோ சாம்பிள் பாட்டு பிடி… மறைந்தார் சோழனுக்கே பயப்படாத கம்பர், கரோனாவுக்கு பை பை சொல்லி விட்டு…,
கம்பன் பாட்டு இப்படிப் போகுது பொருளில்…
போர் முடிந்த பின் (போர் முரசுகள் ஒலி அடங்கின + மேகக் கூட்டங்களில் இடி முழக்கம் ஒழிந்தன் + பகைவரை அழிக்குமம்புகள் வீழ்தல் ஒழிந்தன் + வாட்படைகள் உறைகளுள் மின்னல்கள் எல்லாம் மறைந்தன).
பகைவர்மேல் மாறுபாட்டால் மூண்ட போர் முடிவுற்ற அளவில், போர் முரசுகள் ஒலி அடங்கின போல; கடல்நீரைக் கொள்ளுதல் அமைந்த மேகக் கூட்டங்களில் இடி முழக்கம் ஒழிந்தன். நீண்டதாய்ப் பகைவரை அழிக்குமம்புகள் (போர் முடிந்ததும்) எய்யப்படாமை போல் மழைத்துளிகளும் வீழ்தல் ஒழிந்தன். போர் முடிந்த அளவில்வாட்படைகள் உறைகளுள் (செருகப்பட்டு மறைந்தாற் போல் மின்னல்கள் எல்லாம் மறைந்தன.
கம்பனுக்கும் பூலியன் அல்ஜீப்ரா தெரியுமா என்ன்? கேக்கிறீயளா? இதோ
பாட்டும் பிடிங்க. கொஞ்சம் எட்ட நின்னே…
மூள் அமர் தொலைவுற, முரசு அவிந்தபோல்,
கோள் அமை கண முகில் குமறல் ஓவின்;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்றென மறைந்த, மின் எலாம்.
[கிட்கிந்தை காண்டம்; கார்காலப் படலம்]
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
தீவக அணி – இப்படி இன்னும் எத்தனை அணிகள்
இருக்கு.
88 அணிகள் எனச் சொல்கிறார்கள். ஆனால் அதிலும் உட்பிரிவுகள் அதிகம் உள்ளன். 135 ஐயும் தாண்டலாம். நான் ஒரு 100 அணிகள் வரை தெரிஞ்சிக்கலாம்ணு இருக்கேன். 16 ஆயிடுச்சி இது வரை.