மாலை சூடும் வேளை


மாலை சூடும் வேளை

கற்போம் கம்பனில் – 15
(11-03-2020)

சமீபத்தில் லட்சத்தீவுகளுக்கு மீண்டும் அரசுப் பயணமாய் சென்றேன். இந்த முறை அதன் வரலாறு தேடாலாமென aகத்தி தீவு நூலகத்தில் நுழைந்தேன். வழக்கம் போல் நூலகரும், உடன் இருந்த ஊழியரும் டீவியில் மழையாளத்தில் கத்திக் கொண்டிருந்ததைப் (அதே நம்மூர் அரசியல் அலசல் போல்தான்) பார்த்துக் கொண்டிருந்தனர். சந்தடி சாக்கில் ஒரு குட்டி பாகிஸ்தான் அளவுக்கு எப்புடி 100 சதவீத இஸ்லாம் இங்கு எல்லா தீவுகளிலும் வந்தது? என்ற வரலாறு தேடினேன். கிடைத்தது.

அது நம்மை ஏழாம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்கிறது. முகம்மது நபியின் வாரிசுகளில் ஒருவரான உபைதுல்லாவுக்கு ஒரே கனவு அடிக்கடி வந்ததாம். ’ஏதாவது தூர தேசம் போய் மதபோதனை செய்’ என. கனவும் அடிக்கடி வரவே, துண்டைத் தோளில் போட்டு கிடைத்த படகில் ஏறிப் புறப்பட்டாராம் மெக்காவிலிருந்து. சிந்துபாத கதை மாதிரியே இருக்கில்லெ…? (அப்பொ லைலா… அடெ செத்த பொறுங்களேன்…)

எப்போதும் கடல் பயணத்தில் நடக்கும் சூறாவளி தாக்குதல் அங்கும் நடக்கிறது. படகு மூழ்கிவிட கையில் ஒரு பலகை கிடைக்கிறது. அதைப் பிடித்து கரை ஒதுங்குகிறார். ஒதுங்கிய இடம், இலட்சத்தீவின் அமினி என்ற தீவு. (ஒதுங்கியவரை லைலா வந்து காப்பாற்றினாரா என்ன? கன்னித்தீவு படிச்சிப் படிச்சி ரொம்பத்தான் கெட்டுக் கெடக்குதுங்க உங்க மனசெல்லாம்…) அன்று இரவு அமினித் தீவில் மீண்டும் அதே கனவு. நீ தேடிய இடம் இது தான் என; தைரியமாய் ஒத்தெ ஆளாய் மதப் பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

வழக்கமான நாட்டாமைகளின் எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்க, இவரின் தைரியப் பிரச்சாரம் தொடர்ந்து வந்தும், யாரும் மாறின மாதிரி தெரியலெ. தீவுமக்களும் தொந்திரவு பொறுக்க முடியாமல் இவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்கள். ஒரு மாதம் அவகாசமும் கொடுத்து (ஏன் இந்த அவகாசம்? விளக்கமில்லை). 28 நாள் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. 29 ஆம் நாள் அரு அமினித்தீவு வாழ் பெண் காதல் கொள்கிறாள். (என்ன சந்தோஷமா? லைலா வந்தாச்சா?) ஹமீதாட் பீபி என முதல் இஸ்லாமியராய் தனக்குக் கிடைத்த காதலியை மாற்றி, மாலை சூடி திருமணம் செய்து கொள்கிறார். நாட்டாமை தீர்ப்பும் மாற்றி எழுதப்படுது (தீவு மாப்பிள்ளை ஆகி விட்டதால்), மரண தண்டனை நீக்கப்படுகிறது. பின் அற்புதம்சில செய்து ஒட்டு மொத்த தீவு மக்களும் மதம் மாற்றினராம். அந்த்ரோத் தீவில் வாழ்ந்து சமாதி அடைந்தனர் அத் தம்பதிகள். அங்கே சென்று வழிபட்டேன். ஓர் அதிர்வு இருக்கத்தான் செய்கிறது.

மாலை சூடினாரா? கல்யாணச் சோறு போட்டாறா? போன்ற தகவல் இல்லை. ஆனால் மகாபாரதப் போர் நடந்த போது எல்லா படை வீரர்களுக்கும் (எந்த அணி சார்பாகவும் இல்லாமல்) ஒரு சேர மன்னன் சோறு போட்ட கதையினை, முரஞ்சியூர் முடிநாகனார் சொல்லி இருக்கிறார். இது உண்மை தானா? என கால வரலாற்று ஆய்வு எல்லாம் செய்தால் கதை சரிப்பட்டு வராது. (அப்பா அம்மாவுக்கு சோறு போடவே யோசிக்கும் காலத்தில்… நீங வேறெ?) ’படா காஃனா’ என்பது போல் பெரீய்ய்ய் சோறு போட்டதால அந்த சேரன்,

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என அழைக்கப்பட்டானாம். பாட்டின் சில வரிகள் பாக்கலாமே…

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!

மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே! பூ மாலை போல் பாமாலை அதுக்கு இது, இதுக்கு அது என அடுக்கிய மாதிரி இல்லெ?

அப்படியே அந்தச் சேரப்படையினை அம்போண்ணு விட்டுட்டு, பாம்பையே மாலையா போட்டிருக்கும் சிவபெருமான் மீது ஒரு பாட்டு பாடுறாகளாமே, அதெயும் ஒரு எட்டு பாத்துட்டா போச்சி….

எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்றகத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே.

சிவபெருமானது சடை எரிகின்ற தீயைப் போலவும், அந்தச் சடையில் சுழல்கின்ற நீர் அந்தத் தீயை அணைப்பதற்காகத் தேவர்கள் ஊற்றுகின்ற பாற்கடற் பால் போலவும், அந்த நீரில் மிதந்து செல்கின்ற பிறை ஒரு தோணிபோலவும், அந்தப் பிறையைச் சூழ்கின்ற திறமையுடைய பாம்புகள் அந்தத் தோணியை இயக்குதற்குத் தெரிந்தெடுத்த உறுதியான மூங்கில் போலவும் இருக்காம். வளைச்சி வளைச்சி சொன்னதாப் படுதோ?

திரும்பிப் பாத்தால், கம்பர் ஆஜர். ஒரு மூன்றடி இடைவெளி விட்டு (கரோணா முன் ஜாக்கிரதை உணர்வோ?) கேட்டார். என்ன ஒரே மாலை மாலையா, இந்த மாலை நேரத்தில் ரோசனை? மாலை உவமை அணி பத்தி சொல்ல வந்த மாதிரி தெரியுது. பாட்டும் தரட்டுமா என்றார்….
ஆமா கரோணாவுக்கு மருந்தும் சீனாக்காரன் தான் தரணும்; எனக்கு பாட்டும் நீங்க தான் தரணும். பவ்யமாய்க் கேட்டேன்.

அதென்னமோ தெரியலை சூர்ப்பணகை மேல் இப்பொல்லாம் பாசம் அதிகமா ஆயிட்டு இருக்கு… அப்பொ அதை ஒட்டி, சூர்ப்பணகை எனச் சொன்னவுடன் அனைவரின் நினைவுக்கும் வரும் அந்த ஜிங்சா ஜிங்சா பாடல் இதோ:

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
[ஆரணிய காண்டம்; சூர்ப்பணகைப் படலம்]

 பஞ்சி எனினும் பஞ்சு எனினும் ஒக்கும். செம்பஞ்சிக் குழம்பூட்டப் பெற்ற தளிரும் ஒவ்வாது வருந்தும்படி எனவும் உரைப்பர். பஞ்சியும் பல்லவமும் வருந்தக் காரணம் அவை ஒளி, நிறம், மென்மை, குளிர்ச்சி ஆகிய பண்புகளால் அவள் அடிகளுக்கு ஒப்பாகாமையாம். செவ்விய என்பது செவிய என இடைக்குறையாய் வந்தது. சிறுமை+அடி = சீறடி. மயில் சாயலுக்கும், அன்னம் நடைக்கும் வஞ்சிக்கொடி, துவண்ட நிலைக்கும் நஞ்சு கொடுமைக்கும் உவமை ஆயின. 

ஆக ஒரே துண்டுச்சீட்டை அடிக்கடி உபயோகிக்காமல், பலப்பல உவமைகளை ஒரே துண்டுக் கவிதையில் வைத்திருந்து, அதுவும் அம்மாதிரி பல உவமைகள் மாலை போல் வந்ததால், அதுக்குப் பேரு, மாலையுவமை அணி.

இனிமேல் எந்த மாலையெப் பாத்தாலும் உங்களுக்கு இந்த மாலை உவமையணி ஞாபகத்துக்கு வரணும். என்ன ஓகேவா?

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s