இது போல் வருமா?…


கற்போம் கம்பனில் – 12
(23-11-2019)

ஒரு செய்தியைச் சாதாரணமா ஒருவர் சொல்றதுக்கும், அதையே ஒருவர் கவித்தன்மையுடன் (புரியாத பட்சத்தில் கமல்த்தன்மை எனவும் சொல்லலாம்) சொல்வதற்க்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. ஒரு பொண்ணு நல்லா இருக்குண்ணு சொல்றது ஏதோ தகவல் சொல்ற மாதிரி இருக்கும் (தூர்தர்சன் செய்தி போல்); அதையே சில சூடான டீவி சேனல்களில்  பாத்தால், அப்படியே குப்பென்று பிரஷ்ஷர் ஏறும். (டீவி நடத்துவதே அதுக்குத்தானே?) சரீ.. அதே பொண்ணு தமண்ணா மாதிரி இருக்காண்ணு சொல்லிட்டா நச்சுண்ணு புரியும்.

என் நண்பர், ஆசிரியர் திரு கோபாலன் அவர்கள், அடிக்கடி மைக் கையில் பிடித்து பயிலரங்கம் நடத்துவதில் ரொம்பவே பாப்புலர். (மைக் பிடிப்பவர்கள் எல்லாம் நண்பர்களா? அல்லது நண்பர்கள் எல்லாம் மைக் பிடிக்கிறார்களா?) தொடர்ந்து அவரின் பயிலரங்கிற்கு (நட்பு வட்டம் தான்) தாமதமாகவே வந்து கொண்டிருந்தனராம். நம் கோபாலன், ஒரு கவிதை சொல்லி ஆரம்பித்தாராம்.

என் இறப்பின் பின்
அடக்கம் செய்ய
சற்றே தாமதியுங்கள்…..
ஏனெனில்
என் நண்பர்கள் எப்போதும்
தாமதமாய்த்தான் வருவர்,

அடுத்த நாள் முதல் சரியான நேரத்துக்கு முன்னரே அனைவரும் ஆஜர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ… எதையும் நேராக சாதாரணமா சொல்வதை விட கொஞ்சம் மசாலா சேர்த்தல் நலம் தானே!

மசாலா என்றதும் இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. இப்பொ எல்லாம் நம்ம வாழ்க்கையே, வாட்ஸ்ஸப்பில் தானே ஓடுது. தண்ணீ அதிகம் குடிங்க; குடிச்சோம். கம்மியாக் குடிங்க; அப்படியோ செய்தோம்; பிஸ்கெட் வேண்டாம்; பழம் சாப்பிடலாமே? சரி என ஆப்பிள் கட் செய்து ஒரு டப்பாவில் அடைத்தால், சிறிது நேரத்தில் நிறம் மாறிவிடுகிறது. (நிறம் மாறும் பூக்கள் போல், நிறம் மாறும் ஆப்பிள்) ஒரு நண்பர் சொன்னார்; மிளகுப் பொடியினை ஆப்பிள் மேல் தூவி வைத்தால் கலர் மாறுவது தெரியாதாம். இத்தோடு விட்டிருக்கலாம். சரக்கடித்தால்  கவலைகள் மறப்பது போல் என்று பஞ்ச் வேறு. கவலைகள் சரக்கடித்தால் போவாது. ஒண்ணு நிச்சயம், கவலையை விட்டு நாம் விலகிடுவோம். மசாலா போட்டால், ஆப்பிள் நிறமும் மாறும் ஆனா தெரியாது வெளியில்.

நேரடியாச் சொல்லாமெ, ஒன்னொரு சமாசாரத்தெ (சம்சாரத்தை என்றா படிச்சீங்க…அடெ ஆண்டவா?) ஒப்பிட்டுச் சொல்வதே ஒரு கலை தான்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.

இன்றைய நவீன வாழ்வியல், பொருள் ஈட்டி இன்பமாய் இருக்க கத்துக் கொடுக்குது. கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுது. ஆனால் அதனால் இன்பம் வருகிறதா? ஆனால் தமிழ் மொழியில் மூழ்கினாலே இன்பம் கிடைக்கும். அதெப்படி?


RDBMS – Relational Data Base Management System த்தில் மாங்கு மாங்கு என்று MS Access இல் Relationship பற்றிப் படித்திருப்பீர்கள். One to One; One to Many; Many to One வரை தான் இருக்கும். ஆனால் நம் தமிழில் Many to Many யும் சேர்த்து பில்கேட்ஸின் முப்பாட்டன் பிறப்பதற்க்கு முன்பே சொல்லி வைத்தது தான் இனிமை.

ஒண்ணுமில்லை ஒண்ணோட ஒண்ணெக் கோத்து விடணும். ”பொன்னார் மேனியனே”; “செவ்வான் அன்ன மேனி” பொன் போல் அழகன்; சிவந்த வானம் போல் அழகன்; இது ஒத்தைக்கு ஒத்தை கோர்த்து விடுதல்; இளைஞர்களுக்குப் புரிய One to One.

ஒரு கவிஞர் பிறை சந்திரனைப் பார்க்கிறார். தன் காதலியின் பற்கள் ஞாபகத்துக்கு வருதாம் அவருக்கு. ஒரு பிறை Many பற்கள். அப்பொ One to Many  வந்தாச்சா.. “இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு”  (எயிறு= ‘பற்கள்’)

சுறாமீன் கூட்டம் பாத்த கவிஞருக்கு (அட எப்பவுமே காதலி தான் ஞாபகம் வரணுமா என்ன?) வாள் ஏந்திய வீரர்கள் ஞாபகம் வந்ததாம்.  ”சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப”; இதில் நாம Many to Many  கோர்த்து விடலாம்.

இளையராசாவின் குரலில் வாடெ வாட்டுது பாட்டு நினைவிருக்கா? அப்படிப்பட்ட வாடை ஓடிப்போச்சாம். வாடை மீன்ஸ்…? ஒரு வகையான தென்றல் காற்று? .. (True but exactly not like that – கமல் குரலில் படிக்கவும்) எப்படியாம்? கரிகாலன் வீரத்தைப் பாத்து ஓடும் வீரர்கள் போலாம். வீரர்கள் Many;  வாடை – One; Many to One ம் ஆயிடுச்சா?


பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்
பீடு இல் மன்னர் போல
ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?

”என்ன வரலாமா நானு?” கேட்டபடி கம்பர் எண்ட்ரி ஆகிறார்.

”என்ன தான் Relationship  பத்திப் பேசினாலும், உங்க கிட்டெ இருக்கும் ரிலேஷனே அலாதி தான் கம்பரே. எனக்கு மட்டுமா?. உலகத்தில் பலர் இருக்காகளே”

”என்ன என்னையும் உன்னோட Many to One இல் சேர்த்து உட்றியா என்ன?.. ஆமா இன்னெக்கி என்னமோ தாய் அணியா இருக்கும் உவமை அணி சொல்ல வந்த மாதிரி இருக்கு. என் பங்குக்கு சீதை வருந்திய போது ’தீ வீழ் விறகு’ எனச் சொன்ன பாட்டு பொருந்தும் என நினைக்கிறேன். இது One to One இல் வருது. என்ன கிட்டப்பனே? சரி தானே” சொல்லி பாட்டும் தந்து மறைந்தார்.

கம்பர் தந்த பாட்டு இதோ…

எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக்கோள்
வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ? மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!’ என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள்.

[(மேலும் சீதை) என் தந்தையே, என் தந்தையே; இப்போது என் காரணமாக உனக்கு இந்த நிலை வந்துவிட்டதே! என்னை மகளாகப் பெற்றதால் (நீ) வாழ்ந்த தன்மை இதுவே தானோ! நில உலகத்தவர்களுக்குத் தந்தை போல் நல்லது செய்பவனே, தாயைப் போன்றவனே! ஒருவன் செய்த அறம் போல் நன்மை செய்பவனே! பயன் விளைவிக்கும் தவம் போன்றவனே! என்று கூறி கொடிய துயரம் மிகுந்து, தீயில் விழுந்த விறகு போல் (துயரால்) மனம் வெந்து கீழே விழுந்தாள்.

 [யுத்த காண்டம்,  மாயா சனகப் படலம்]

கம்பர் பாடல் உள்ளிட்ட பாடல்கள் மூலம் இன்று நாம் கற்க வந்தது உவமை அணி. ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பல பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். உவமை அணியிலும் 24 வகை இருக்காம். எப்பொ அதெல்லாம் படிக்க நேரம் கிடைக்குமோ?


கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s