கற்போம் கம்பனில் – 11
(18-11-2019)
சந்திரமுகி படத்தில் வரும் ஓர் உணர்ச்சிமயமான கட்டம். கங்கா என்ற தமிழ் கதாநாயகி, கொஞ்சம் கொஞ்சமாய் தெலுங்கு பேசும் (ஹீரோயினா? வில்லியா? தெலுசலேது) சந்திரமுகியா மாறும் காட்சி பாத்திருப்பீங்க. அப்படியே சீட்டின் உச்சிக்கே கொண்டு சென்ற இடங்கள் அவை எல்லாம்.
இப்படித்தான், கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை கூட தெரிஞ்சி வச்சிருப்பீங்க. நல்ல வேளை கழுதைகளுக்கும், கட்டெறும்புகளுக்கும் கழகங்கள் இல்லை. அப்புடி மட்டும் இருந்திருந்தால் இந்த ரெண்டும் இந்நேரம் கோர்ட் வாசலில் வழக்குப் போட்டு நின்றிருக்கும்.
வரலாற்று நிகழ்வுகள் கூட அதை எழுதுவோர், நமக்கு எதுக்கு வம்பு? என்ற ரீதியில் எழுதுவது தான் பின்னர் மிகப் பெரும் தவறான புரிதல்களை உண்டாக்கி விடுகின்றது. இல்லாத ஒன்று கொஞ்சம் கொஞ்சமா எப்படி மாறி வந்துள்ளது? தாலி சமாச்சாரம் தான். இப்போதைக்கு பல தமிழ்ப் படங்களின் கதைக் கருவாய் இருப்பதே தாலி தான். (பியூட்டி பார்லர்களில் சர்வ சாதாரணமாய் கழட்டி வைக்கப்படுமாமே! சொல்லக் கேள்வி). சங்க காலத்து இலக்கியப் பாடல்களில் கூட இல்லாத தாலி, 11 ஆம் நூற்றாண்டில் தான் இராசராசன் மூலம் அறிமுகம் ஆனதாம். எப்படி? என்று விசாரித்தால் தாலி வச்சி படமெடுப்பவர்கள் உதைக்க வந்து விடுவார்கள்.
சமீபத்தில் நாம் படித்த சிஐடி கல்லூரி மானவர்கள் ஒன்றாய் ஒரு கல்யாணத்தில் கூடினோம். நமது கணிசமான நேரத்தை இரத்தக் கண்ணீர் வசனங்கள் எடுத்துக் கொண்டன். மாறு வேடப் போட்டிகளில் கண்டிப்பாய் இருக்கும் அந்த ‘அடியே காந்தா… அள்ளி அள்ளிக் கொடுத்தேனே…” அதே அதே, அந்த எம் ஆர் ராதா நடித்த அதே கருப்பு வெள்ளைப் படம் தான். (டீவியில் கருப்பு வெள்ளைப் படம் பாத்தாலே, ஏதோ ஒரு விசேஷ ஜந்து மாதிர் தான் பாப்பாங்க என்னோட ரெண்டு பசங்களும்). ஒருவாரம் கழித்து ஒரு ஞாயிறு அன்று முரசு டிவியில் அப்படம் ஓடுவதாய் கல்லூரிக் குழு தகவல் சொன்னது. பார்த்தேன் முழுதும். அறம் தவறினால் கொஞ்சம் கொஞ்சமாய் சின்னச் சிக்கல் பெரீய்ய சிக்கலாம் எப்படி மாறூம் என்பதை நாசூக்காய் சொல்லிய படம் அது.
நம்ம கவிஞர்கள் கூட அப்படித்தான். ஏதோ ஒண்ணெ சொல்ல வந்த மாதிரி ஆரம்பிச்சி, கொஞ்சம் கொஞ்சமா மாத்திகிடுவாய்ங்க.ஸ்ரீதேவிக்காக கமல் உருகி உருகி பாடிய பாட்டு ஞாபகம் இருக்குங்களா? (பாட்டு மறந்தாலும் அந்த ஸ்ரீதேவீ முகம் என்ன மறக்கக் கூடிய முகமா? ”நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா…”இதில் நீல வானத்தை ஓடையா சொல்லிட்டார். அப்பொ நீந்தும் கப்பலாக வெண்ணிலாவை சொல்லலையே? ஏன்? ஏன்? ஏன்?
வள்ளுவரும் இப்படி விளையாட்டு விளையாடுவார் ஜாலியா… அவர் குறளும் பாப்போமே ஒண்ணு சாம்பிளுக்கு:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இக்குறளில், பிறவியைக் கடலாச் சொல்லிட்டார். ஆனா அதோட சம்பந்தப்பட்ட இன்னொரு பொருளான, இறைவன் திருவடியைத் தெப்பமாக சொல்லணுமா இல்லையா? சொல்லலையே? ஏன் ஏன்? ஏன்?
இன்னொரு கவிஞரை கோவிலில் பிடித்தேன். கணபதி முன் நிக்கிறார் பாடிக் கொண்டு. விநாயகரின் உருவமே கொஞ்சம் வித்தியாசமானது. குள்ளம், தொந்தி, யானை முகம் ஒரு வகையில் பார்த்தால் எதுவுமே விளங்காத கிட்டத்தட்ட மனைவியின் முகம் போல் – இப்படியும் வச்சிக்கலாம். சரீ… இப்பேர்ப்பட்ட கணபதியைப் பாடும் பிரபல புலவருக்கும் அந்த சிக்கல் வராமலா போகும்?
துதிக்கையினையுடைய யானையாகிய மலை – (விநாயகன்) கொன்றைப்பூப் பொன்னாக, செஞ்சடையே பவளக் கொடியாக, மதநீர்ப் பெருக்கே மழையாக, கொம்பே பிறைமதியாகக் காட்சி தருமாம்; இப்படிப் போகுது பாடல். ஏதோ சொல்ல வந்து எப்படி எப்படியோ போகுது பாருங்க.
‘தேன்நக்(கு) அலர்கொன்றை பொன்னாகச்
செஞ்சடையே
கூனல் பவளக் கொடியாகத் – தானம்
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு’
’என்ன இது கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விட்டி வேறு எங்கோ போற மாதிரி இருக்கே? சொல்லியபடி கம்பர் வந்தார்.
’இல்லை ஐயனே… உங்க பாட்டு வைத்து தான் முடிக்கிறேன் எப்போதும்’
‘அப்பொ என்னெயெ ஒரு வழியா உங்க ஊரு ரவிகுமார் மாதிரி கடைசி சீனுக்கு வரும் ஆளா ஆக்கிட்டே… முழுசா படிச்சா… ஏதோ உருவக அணி சொல்ல வந்த மாதிரி தெரியுது. நம்மகிட்டேயும் ஒரு பாட்டு இருக்கு. அதுக்கு முன், இன்று நயன் தாரா பிறந்த நாளாமே? அதை வச்சி சொன்னா உங்களுக்கும் சீக்கிரமா விளங்கிடுமே? (வெளங்கிடும்…ஐயோ ஐயோ)
நயன்(தாரா) போன்ற முகம் எனச் சொல்லி உங்கள் காதலிக்கு ஐஸ் வைத்தால் அது உவமை அணி; அதே கொஞ்சம் கொஞ்சமா மாறி முகநயன் ஆகி விட்டால் அது தான் உருவக அணி. நம்ம பாட்டு ஒன்ணும் இருக்கு. கிட்கிந்தையில், இலக்குவன் கோபமாய் நுழையும் போது திருமதி குரங்குகள் சில அவரை சூழ்ந்து கொண்டன. அதில் தான் இந்த உருவக அணி வச்சிருக்கேன். மகளிர் கூட்டம் போர்க்களம் மாதிரி இருக்கு. சிலம்பும் மேகலையும் போர்ப் பறை மாதிரியும்; புருவக் கொடி கொடி மாதிரி இருக்காம். கொஞ்சம் கொஞ்சமா மாறி எங்கே வந்து நிக்குது பாத்தீங்களா?’
பாட்டு பாருங்களேன்…
வில்லும்,
வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.
[அணிந்துள்ள அணிகலன்கள் தோறும் வில்லும் வாளும் ஒளிவிடவும், மெல்லிய பரல்களை உடைய காற்சிலம்புகளின் ஒலியுமிடையணியான மேகலை (பறையொலிபோல்) ஆரவரித்து எழவும், பலவகைப்பட்ட புருவங்களின் கொடிகள் நிறைந்திருக்கவும், மகளிர்க் கூட்டமாகிய சேனை வலிமையோடு இலக்குவனை வளைத்துக் கொண்டது.]
[கிட்கிந்தா காண்டம், கிட்கிந்தைப் படலம்]
கம்பன் சொன்னதை மேலும் தொடர்கிறேன், உருவக அணிப்பாடத்துடன். உருவக அணி என்பது ‘அதுதான் இது’ என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் உல்டா. உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை கொஞ்சம் கொஞ்சமா எடுத்துட்டு, அவை ரெண்டுமே ஒன்று தான் எனச் சொல்வது தான் உருவக அணி. இதில் 15 வகை இருக்காம்; (நம்மாளுக பிரிச்சி மேஞ்சிருக்காய்ங்க)
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
Best Wishes
நன்றி. நன்றி.
வழக்கம்போல் கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி
Narration is excellent. I enjoyed thoroughly and especially kamban entry
எளிமையாய் கம்பனையும், அணி இலக்கணத்தையும் சொல்லித்தரலாமே என்ற பாமரனின் முயல்வு இது.