கற்போம் கம்பனில் – 10
(13-11-2019)
”அண்ணே!! இந்த கெட்டப்புலெ அம்சமா இருக்கீங்கண்ணே”
“அடேய்.. எண்ணமும் செயலும் நல்லா இருந்தா, கண்ணம் பண்ணு மாதிரியே ஆகி அப்படியே தேஜஸ் ஆயிடும்டா…”
”ஆமாண்ணே… அப்படியே நீங்க ஜேசுதாஸ் கணக்கா இருக்கீங்கண்ணே…”
இப்படி ஒரு வடிவேலு காமெடி ஞாபகம் இருக்குமே!! இதில் நாம் உத்துக் கவனிக்கும் இடம் அந்த, ’எண்ணமும் செயலும் நல்லா இருத்தல்’ தான். அது இருந்தா மகிழ்வான வாழ்வு கிடைக்குமாம். வடிவேலா இருந்தாலுமே, நல்ல விசயம் சொன்னாலும் ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்? (சொல்லும் வாய் எந்த வாய் என்பதைப் பொறுத்தது – வடிவேலனார் வாய் மொழி)
சரீ.. வாழ்வின் நோக்கம் தான் என்ன? என்று கூகுள் ஆண்டி(!!)யைக் கேட்டலாம்ணு தேடினேன். 99 சதவீத பதிவுகள் வாழ்வின் நோக்கமே, ’ஏசு கிருஸ்துவை வணங்க வேண்டும்’ என்பதாய் முடிகிறது. என்னதான் 500 கோடிக்கு மேல் தீபாவளிக்கு சரக்கை விற்றாலும், சின்னதா குடி குடியைக் கெடுக்கும் என்பதை உத்துப் பார்ப்பது போல் பார்த்ததில், சுகிசிவம் அவர்கள் ’மகிழ்வாய் வாழ்வது எப்படி?’ என்று ஒரு கணக்குப் பாடம் சொல்கிறார். பணம் இருந்தால் 10 சதவீத மகிழ்ச்சி வந்திடுமாம் (அடெ… இதுக்குத்தான் நாம் 99 சதவீதம் அலையிறோமே!!); 40 சதம் நீங்கள் யாருடன் இருந்தால் அல்லது யார் உங்களுடன் இருந்தால் மகிழ்ச்சி தருதோ அது தானாம்; எதைச் செய்தால் மகிழ்வோ அது மீதம் 40 சதமீதம்; மீதி 10 அவங்கவங்க சொந்த விருப்பம். (பேணருக்கு பால் ஊத்துவது, பாரையாவது எதிர்த்து மீம்ஸ் போடுதல் – இதெல்லாம் அதில் அடங்கும்; இதெல்லாம் சுகி சிவம் சொல்லலைங்கோ…) ’என்ன செய்றீங்க?’ என்று உங்களையே ஒரு முறை உத்துப் பாருங்க. என்ன மகிழ்ச்சியா இருக்க ரெடியா?
வாழ்க்கைப் பயணம் போல் எந்தப் பயணத்தில் உத்துப் பார்த்தல் தொடரலாம். விமானப் பயணங்களில் பக்கத்து சீட்டுக்காரர் அமைவது அவரவர் வாங்கி வந்த வரம் போல் அமையும். (சில சமயங்களில் சாபமாயும் கூட வந்து சேரும்). இப்படித்தான் ஒரு விமாணப் பயணத்து பக்கத்து சீட்டில் அங்காங்கே கிழிந்த (ஜீன்ஸ்) உடையில் ஓர் இளம்சிட்டு. 90 நிமிடங்கள் அருகே அவஸ்தையுடன். எங்கே பார்த்தாலும் அங்கம் தெரியும் ஆடைகள். (இப்படிக் கிழிந்த உடைகள் விலை அதிகமாம்) இரு தோள்பட்டையின் கீழும், காற்றுப் போக ஓட்டைகள் வைப்பது இப்போது, வர வர தேசீய உடை ஆகி விட்டது. ஆங்காங்கே, முழு முதுகு தெரிய ஜாக்கெட் அணிவதும் தெரிகிறது. கோவா பக்கம் போனால் உடைகள் ஏதோ மகளிர் எல்லாம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பது போலவே இருக்குது. ம்… இத்தனைக்கும் நடுவில் நாம் முனிவர் போல் இருக்கணுமாம். நல்ல தண்டனை தான் போங்கள். அவர்களின் உடலைக் வெளிக்காட்டுவது தான் உடை (கொஞ்சமா) அணிவதின் உள்நோக்கமோ (குத்தோ)? ஆமா இதெல்லாம் ஏன் உத்துப் பாக்கிறே என்கிறீர்களா?
’இதெல்லாம் அந்தக் காலத்திலிருந்து இருப்பது தானே?’ என சோம, சுராக்களை இக்கால சரக்குக்கும், ஒப்பிட்டு பலர் (குறிப்பாக கறுஞ் சட்டையர்களும்) பேசி வருவதை பாத்திருப்பீங்க. பரத்தையர்கள் பற்றிய குறிப்பு எல்லாம் இருக்கே என்பர். சங்க அக இலக்கியத்தை உத்துப்பார்த்தா, அப்படிப்பட்ட சங்கதிகள் ஒரு பாட்டிலும் இல்லையாம். திருக்குறளும் நாலடியாரும் தான் “பிறனில் விழையாமை’ என்று ஹெட்லைன் போட்டு சாட ஆரம்பித்திருக்கிறார்கள். திருமூலரும் இதுக்கு ’ஆமா ஆமா’ என்கிறார். இவர்களை அக்காலக் கலகக் காரர்கள் என்கிறார் நம்ம தமிழருவி மணியன். ஆனா ஒண்ணுங்க ஆம்புளையோ, பொம்புளையோ ரெண்டு பேரும் ஒழுக்கமா இருந்து தொலைங்கப்பா என்று சொல்கிறது நம் முன்னோர் நூல்கள்.
ரொம்பவே உத்துப்பாத்து கண்ணு கெடுத்துக்க வேண்டாம் என இப்போதைய ISO தர நிறுவனங்கள் எது தமது நோக்கம் என்பதை தெளீவ்வா போட்டிருப்பாய்ங்க. ஒரு சிறு நிறுவனத்துக்கே இப்படி என்றால், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிய காப்பியங்களுக்கு ஒரு நோக்கம் இல்லாமலா இருக்கும்? (சமீப காலமாய் எழுதப்பட்டு வரும் காப்பியங்களில் நோக்கம் இருக்கோ இல்லையோ, உள்நோக்கம் கண்டிப்பாக இருக்கும்).
சிலப்பதிகாரத்தைப் பாத்தாக்கா (உத்துப் பாக்கணுமா என்ன?) அதன் நோக்கம் தெரிய வரும். அறம் பிறழாமை; பத்தினியின் பெருமை; ஊழ்வினை இந்த மூனையும் சுத்தின முக்கோணக் கதை (காதல் கதை அல்ல). மகாபாரதம் எடுத்தோம்ணா, மண்ணாசை கூடாதுண்ணு தான் சொல்ல வாராக. கூடவே துரௌபதியின் சபதம் இலவச இணைப்பு நோக்கமா வருது.
யாரோ பின்னடி உத்துப் பாக்கிறாகளேண்ணு திரும்பிப் பாத்தாக்க, அட… நம்ம கம்பர்…கம்பர் இறங்கி வந்தார். சுத்தி வளெச்சி சொல்றதெப் பாத்தாக்கா… ஏதோ, பாவிக அணி பத்திச் சொல்ல வருவது போல் தெரியுது.
ஆமா சாமீ… பாவிக அணி என்று நாம சொல்றதெ வெளிநாட்டவர் ஆர்க்கிதெக்தோனிக்ஸ் (ARCHITECTONICS) என்கிறார்கள். ரசனை அல்லது காவிய நிர்மாணம் எனப் பொருள் கொள்ளலாமாம். (நன்றி வாவேசு ஐயர்).. ஐயனே… உங்க கப்பிய நோக்கம் என்ன என்று சொன்னா நல்லா இருக்குமே?.. இழுத்தேன்.
சிலர் , நீ ஏற்கனவே சொன்னது போல், அடுத்த வீட்டு ஆண்டியை ஆசைப்படதேண்ணு சட்டுண்ணு சொல்லிட முடியாது. ’அறம் வெல்லும்’ அதாவது அவதார நோக்கமே, இராவண வதம் தான். அதனை ஒட்டிய நட்புகள், அது சார்ந்த நிகழ்வுகள் அதற்கான உத்திகள் எல்லாம் தான் காவிய நோக்கம் அதாவது பாவிகம்..
தோதா ஏதாவது பாட்டு கேப்பியே… இதோ தந்துட்டாப் போச்சி…
பாட்டு பாருங்களேன்…
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும், வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!
[மகளிர்க்கெல்லாம் அணி போன்ற சீதா தேவியின் பெருமைக்குரிய அழகும், அவர் (பூண்டிருந்த கற்பும்), ஓங்கிய புயங்களையுடைய இராவணனார் (சீதை மேல் கொண்ட தகாத) காதலும், அந்தச் சூர்ப்பணகை (இதனால்) இழந்து போன மூக்கும், மன்னர்க்கு மன்னனான தயரதன் கொடிய கானகத்தே விரத வேடம் பூண்டு (இராமன்) வந்ததுவும், கடைசியில்; இந்திரனார் செய்த பெருந்தவத்தின் பலனாக முடிந்துவிட்டன]
[யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்]
கடைசி வரியில் தான் அந்த காப்பிய நோக்கம் இப்பாடலிலும் வரும். இப்படியே அடிக்கடி அங்காங்கே இப்படியான் பாடல் வரும் தேடினால் கிடைக்கும். நாம ஒரு சாம்பிள் தந்து இன்றைய அணி இலக்கண பாடம் நடத்தியாச்சி
கம்பனிடம் நாம் கற்ற இன்றைய அணிப்பாடம் பாவிக அணி
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்
miha arumayana tamil nadai pamaranum padithu rasikkalam.
இப்படிப்பட்ட நடையில் எப்படி கம்பனை எழுதப் போச்சி? – என சண்டைக்கு வரும் நபர்களும் உள்ளனர். பாராட்டியமைக்கு நன்றி.
அனைவருக்கும் கம்பன் ; இது தான் என் நோக்கம். அதற்க்காய் இந்நடை.