திரும்பத் திரும்ப…


கற்போம் கம்பனில் – 9
(28-10-2019)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

’ஏம்ப்பா தம்பி…. கையெப் பிடிச்சி இழுத்தியா?’
’என்ன கையெப் பிடிச்சி இழுத்தியா?’
’ஏற்கனவே அவெய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்காத் தகராறு….’
’என்ன வாய்க்காத் தகராறு?….

இப்படித் தொடங்கி, திரும்பத் திரும்ப பேசுறே என முடியும் வடிவேல் காமெடியெத் திரும்பத் திரும்ப பாத்திருப்பீங்க. கூகுளில் கூட, ‘வாய்க்காத் தகராறு’ எனத் தேடினால், சுந்தர் பிச்சை அவர்களும் இதே காமெடியைத் ‘திரும்பத் திரும்ப’ பார்க்க அனுப்புகிறார். தீபாவளி தொடங்கி, காமம், காமெடி, காதல் (திருமணமானவர்கள் மனைவியையை), ரிவ்யூ மீட்டிங், ஹிந்தி பக்கோடா, அதில் சமோசா இவையெல்லாம் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும்.

’வரும்… ஆனா வராது….’ என்ற காமெடியும் அடிக்கடி பாத்திருப்பீயளே? அது காமெடி மட்டும் அல்ல. சிந்திக்கவும் தான். நோய்க்கும் பிணிக்கும் ஒரு, எட்டு வித்தியாசம் எல்லாம் இல்லையாம். ஒரே ஒரு வித்தியாசம் தானாம். நோய் என்பது வரும். ஆனா மருந்து சாப்பிட்டா வராதாம். பிணி என்பது வரும்… ஆனா வரும்; திரும்பவும் வரும், எனச் சொல்வது போல் தான். பசியெ எடுத்துக் கொள்வோம் (எப்படி எடுப்பது என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே?) மூக்குப் புடைக்கத் தின்றாலும் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பசி திரும்பத் திரும்ப வருவதும் நடக்கிறது. (இன்றைய நவீன மருத்துவம் சுகர் இத்யாதி நோய்களையும் பிணி ஆக்கி விட்டது தான், காலக் கொடுமை)

சாமானியர் நமக்கே இப்படி திரும்பத் திரும்ப செய்வதில் இம்புட்டு அலாதி இன்பம் இருக்கறச்சே, கவிஞர்களைப் பத்தி கேக்க வேணுமா என்ன? காலம் காலமா, மன்னர்களை போற்றிப் பாடி வந்தும், ஏழ்மையில் இருந்தவர்கள் தானே அவர்கள். ஒரு புலவன், பகல் வேளை கையில் விளக்குடன் சென்றானாம். ஏன் இந்த விளக்கென்றேன். விளக்கு பத்தி விளக்கம் சொல்றார் அந்தப் புலவர். என்ன தான் நீங்க பலப்பல வண்ண விளக்குகள் வச்சி தீபாவளிக்கு டெக்கரேஷன் செஞ்சிருந்தாலும், அதெல்லாம் விளக்கு என்ற டெஃபனிசனிலேயே வராதாம். அப்பொ எது தான் விளக்கு? பொய் சொல்லாமெ இருப்பது தான் ’நம்’மைப் போன்ற நல்லவர்களுக்கு விளக்காம். (நாமலே நம்மை நல்லவர்னு சொல்லாட்டி வேறு யார் தான் சொல்லப் போறா?) இந்தா நன்பா என வெண்பா என்றபடி வள்ளுவர் வந்தார்.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”

இதே மாதிரி எதையாவது சொல்லி மனைவியிடம் திட்டு வாங்கும் வாலிப வயோதிக ஆண்மக்களே! (தீபாவளியும் அதுவுமா, பாட்டு இந்நேரம் வாங்கியிருப்பீயளே…!) எல்லாத்துக்கும் என்ன காரணம்ணு பாத்தா, நாம பேசும் பேச்சுக்கள் தான். பேச்சு பேச்சா இருக்கணும்கிறது சமாதானத்துக்கான அழைப்பு தான். அந்தப் பேச்சும் எப்புடி இருக்கணுமாம்? இதெவிட நல்ல ஃபிகர், நல்ல மாடல் மொபைல் இருக்கவே படாது, இப்படி இருக்கணுமாம். (அதுவும் அடுத்த ஃபிகர் காட்சி தரும் வரை, அடுத்த மொபைல் விளம்பரம் வரும் வரை தான் நீடிக்கிறது) ஆனா அய்யன் வள்ளுவர் வாக்கே தனிதான். மீண்டும் வள்ளுவர் உதவிக்கு வாரார். எல்லோரும் ஒதுக்கிங்கிங்க ப்ளீஸ்.

சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!

ஒவ்வொரு வீட்டிலும் மனைவி சொல்லும் சொல் தான் வெல்லும் சொல் என்பதை வாசுகி உட்பட அறியாதவர் யார் இருப்பர்?

ஒரு காலத்தில் தீபாவளி நாளை தினசரி காலண்டரின் மடக்கி வச்சி, இன்னும் பத்து நாள், ஒம்பது நாள், எட்டு நாள், ஏழு நாள் என்று எதிர்பார்த்த ஆனந்தம் இப்போது மொபைலில் காலண்டர் பார்ப்பதால் அடி பட்டுப் போச்சி. அன்று நாள் குறையக் குறைய மகிழ்வு அதிகரித்தது. (அதானே நமக்கு முக்கியம்); உண்மையில் தேதி கிழிக்கும் போது, அடடா ஒரு நாள் போயிடுச்சே என்ற வருத்தம் வரும். நாலடியாருக்கும் வந்திருக்கு. ஒவ்வொரு நாளும் காலத்தை அறுக்கும் வாள மாதிரி தெரியுதாம். இனிமே எல்லாரும் நாளின் அருமை தெரிய, தினசரி தேதி காலண்டர் வாங்கி (இதெக்கூட கிழிக்காமெ ஆஃபீசில் என்ன தான் …….) வைய்யும் வாங்கக் கடவார்களாக.

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.

திரும்பத்திரும்ப ஒரே வேலையைச் செய்தால், அதிலும் எக்ஸ்பெர்ட் ஆகாமலா போவர்? எதையுமே திரும்பத் திரும்பச் செய்வதால் அதில் ஒரு ஈடுபாடு வந்திடுமாம். (வம்படிய்யா கல்யாணம் செய்து வைப்பதும் அதுக்குத்தானோ?). இந்து மதத்தை சகட்டுமேனிக்கு (இதுக்கு என்ன அரத்தம்?) திட்ட ஏகப்பட்ட இந்துப் புரானங்கள் படித்தாராம் கண்ணதாசன். அதுவே பின்னர் அர்த்தமுள்ள இந்துமதம் வர காரணமாச்சி. (அர்த்தமற்ற இந்துமதம் எனவும் திக பேர்வளிகள் எழுதி உள்ளனர்); அவர் சொல்லும் போது கம்பனை திரும்பத் திரும்ப படிக்கும் போது அவருக்கே அடிமை ஆனேன் என்கிறார்.

என் பாடல்களை திரும்பத் திரும்ப பயன்படுத்தி வருவதில் எனக்கு ரொம்ப ரொம்ப குஷி தான் சொல்லியபடி கம்பர் வந்தார். எட்டு எட்டா பி(ரி)ச்சிப் பாக்கச் சொன்ன உங்க காலத்துப் பாடல் போல், ஏழு பத்தி பாடின என் பாட்டும் பாரேன் என்றபடி ஒரு டிப்ஸ் தந்து அகன்றார்.

இராமனையே சோதிக்கும் நக்கீரத்தனமான இடம் கிட்கிந்தையில். ’என்னமோ வாலியெ கெடாசிடுவேங்கிறெ, எங்கே இந்த ஏழு மரத்தை ஒரே ஷாட்டில் அடி பாக்கலாம்!!!’ என ஏகே 47 தருவது போல் வரும் சூப்பர் இடம் அது.

பாட்டு பாருங்களேன்…

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப-
’ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?’ என்று எண்ணி

 [கிட்கிந்தா காண்டம்,  மராமரப் படலம்]

[ஏழு கடல்களும், மேலே உயர்தனவாய் உள்ள உலகங்கள் ஏழும், ஏழு குல மலைகளும், ஏழு முனிகளும், சூரியன் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும், இந்த அம்பிற்குக் குறி என்று அஞ்சி நடுங்கினர்]

கம்பனிடம் நாம் கற்கும் இன்றைய அணிப்பாடம்

சொற்பொருள் பின்வருநிலையணி – பாடலில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

குறட்பாவில், ’விளக்கு’, ’சொல்’, நாலடியாரின் வைகல் என்னும் சொற்கள் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

கம்பன் பாட்டிலும் ஏழு என்பதை பலமுறை (அடெ..அதுவும் ஏழு முறை) சொல்லி நமக்கு புரியும் படி சொன்னதும் இதே சொற்பொருள் பின்வரு நிலையணியே தான்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

2 thoughts on “திரும்பத் திரும்ப…

 1. upamanyublog says:

  தமிழ் ஸாஹித்யம்மு பு3டி3 தெலராஸ். ஈதொ சொக்கட் க2ளராஸ் !
  ஸ்வாரஸ்யம் கன் ஸே !

  O.S.Subramanian.

  On Mon, 28 Oct 2019 at 08:59, அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:

  > Tamil Nenjan posted: ” கற்போம் கம்பனில் – 9 (28-10-2019) அனைவருக்கும் இனிய
  > தீபாவளி நல் வாழ்த்துக்கள். ’ஏம்ப்பா தம்பி…. கையெப் பிடிச்சி இழுத்தியா?’
  > ’என்ன கையெப் பிடிச்சி இழுத்தியா?’ ’ஏற்கனவே அவெய்ங்களுக்கும் நமக்கும்
  > வாய்க்காத் தகராறு….’ ’என்ன வாய்க்காத் தகராறு?…. ”
  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s