கற்போம் கம்பனில் – 8
(21-10-2019)
கூட்டல் என்பது எவ்வளவு நல்ல வார்த்தை! கொஞ்சம் கூட்டிக் கொடுப்பா… என்று வியாபாரம் தகையாத போது சொல்லி வந்த வார்த்தை இப்போது வசைபாடும் வார்த்தை ஆகி விட்டது துரதிருஷ்டவசமானது. (நாற்றம் என்ற வார்த்தையின் பொருள் கூட, ஒருகாலத்தில் மணம் என்பதாய் இருந்ததாம்) ஆனா ஒரு பொருளைச் சொல்லும் போது அதை சுவைபடப் பலவற்றோடு கூட்டிச் சொல்வதும் உண்டு. நடைமுறை வழக்கில் இதுக்குப் பேரு பில்டப் எனவும் சொல்லலாம். வடிவேலுவுக்குப் பின் இருக்கும் சிலர் போல். (பிரச்சினைகள் வரும் போது நைஸாகக் கழண்டு விடுவது தான் நகைச்சுவையின் உச்சமே). அரசியல்வாதிகளின் கதை அப்படி அல்ல.
சமீபத்தில் ஓர் அரசியல்வாதியின் அறிமுகம் கிட்டியது. ’நடமாடும் என்சைக்ளொபீடியா’, ’அண்ணன் தான் எங்களுக்கெல்லாம் டேட்டா பேங்க்’ என்ற பில்டப்போடு அவரின் அறிமுகம் ஆனது. ’ஓஹோ… அந்தமானா… அந்தமானில் மொத்தம் 18 தீவுகள்’ என்றார். கூட இருந்தவர்கள், ’பாத்தீயளா நாங்க சொன்னோம்லே, அண்ணன் தகவல் களஞ்சியம் என்று கூ(ட்)டி மகிழ்ந்தனர். அந்தமான் 836 தீவுகளைக் கொண்டது என்று அரசுக் குறிப்பு சொல்லுது. (நான் அவரிடம் எதிர் வாதம் செய்யலை – அடியாட்களின் கரைவேட்டி பயம் காரணமாய்); மறுபடியும் அந்தமான் பற்றி பேச்சு வந்தது, சென்னையிலிருந்து 732 கிமீ தானே? என்ன சரி தானே? என்று எந்தக் குறிப்பும் இல்லாமல் மிரட்டும் தோரணையில் சொல்ல, அப்படியே சென்னையிலிருந்து 1200 கிமீ தூரம் அந்தமானுக்கு ஓடி (ஓடிண்ணா ஓடியா ஃபிளைட் பிடிச்சித்தான்; பிடிச்சி…??) வந்துட்டேன்.
கவிஞர்களுக்கு இப்படிக் கூட்டிச் சொல்ல அனுமதி தரப்பட்டிருக்கு. அவரவர் இஷ்டத்துக்கு பில்டப் செய்து சொல்லலாம். ஒருவரை பிச்சிட்டா போதும், சகட்டு மேனிக்கு தூக்கிப் பாடுவது கவிஞர்களுக்கு கைவந்த கலை. (நான் வாலியைச் சொல்லலைங்க). காஞ்சி என்றவுடன் சங்கராச்சாரியாரும், அறிஞர் அண்ணாவும் நினைவுக்கு வரும் (பட்டுப் புடவை என சத்தம் வருது என் தர்ம பத்தினியிடமிருந்து) ஆனா காஞ்சி நகரம் பத்தி கவிஞர் சொல்றதெப் பாருங்க.
அந்த நகரம் சூப்பரா இருக்காம். காரணம் சொல்ல வந்து, கூட்டிச் சொன்ன விதம் பாருங்க. மலை மாதிரி ஏகாம்பர நாதராம். மலை மேடு பள்ளமாத்தானே இருக்கும்? ஏன் இப்படி ஆச்சாம்? அதுக்கும் பதில் இருக்கே! உமையாள் மார்பில் அனிந்திருந்த அணிகலன்கள் அழுத்தியதால் சிவன் மலையின் நிலை இப்படி ஆச்சாம். (ம்…அப்பா… இப்படி ஒரு அழுத்தமா?) அப்புறம் விளக்கு எப்பவும் வெளிச்சம் தருதாம்; தெய்வீகமானதுமாய் இருக்குதாம். திரி எல்லாம் தேவையில்லாமல் நம்ம Self Inking Pad போல் இருக்காம். மத்தவங்க பாத்து பொறாமெப் படும் அளவுக்கு கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் இருக்கும் சான்றோர்கள் இருக்காகளாம். இப்படி கோரஸ் பாடும் மூன்றும் இருப்பதால் தான் காஞ்சிக்கு பெயரும் புகழுமாம். எப்படி கவிஞரின் கற்பனைப் போக்கு பாத்தீகளா?
‘பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் – நாண்தாங்கும்
வண்மைசால் சான்றவரும் காஞ்சி வளம்பதியின்
உண்மையால் உண்டிவ் வுலகு’
ஒரு விஷயத்தெத் தலைக்கு மேல் தூக்கி வச்சி ஆட மட்டும் தான் கவிஞர்களுக்குத் தெரியுமா என்ன? ஒரு ஆளை தூக்கி சாவடிக்கணும் என்றால், அதுக்கும் நம்ம கிட்ட ஓர் ஆளு பாட்டெ வச்சிகிட்டு ரெடியா இருக்கார் திரிகடுகத்தில். மழை பெய்யாததுக்கு கெரகம் தான் காரணம் என கரகாட்டக்காரனில் கரகாட்டக்காரி கோவை சரளா ரேஞ்சில் வருது பாட்டு. அதிகமா வரி வசூல் செய்யும் ராசாவும், மெய்யே சொல்லாத ஆளும், எல்லை தாண்டும் பொண்டாட்டியும் இருந்தா… அது தான் கெரகமாம்.
கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல் இருந்(து) எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.
அப்படியே நம்ம சீரியல் பக்கம் வந்தா, இப்ப்பொல்லாம் நளினி என்ற ஒரு குண்டம்மா வாராக பாத்திருப்பீயளே! ஒரு காலத்தில், அவுகளை அறிமுகப் படுத்தும் பாட்டு, டி ஆர் போட்டிருக்காரு பாருங்க. பாக்கலையா? உயிருள்ள வரை உஷா படத்தில் பாருங்க. செம்மெ பில்டப்புங்க. (அப்பொ அவுங்க செம ஃபிகரூங்கோ… ஆனா என்ன முகம் மட்டும் கொஞ்சம் ஹி ஹி ஹி முகம் மாதிரிங்கோ). இந்திர லோகத்து சுந்தரி, மோகினி, உயிர் பறிக்கும் காளை, ரதி என்பேன்; மதி என்பேன்; கிளி என்பேன்; உடல் என்பேன்; உயிர் என்பேன்; உறவென்பேன்; இப்புடி.. இப்படி பல விதமா (சீரியல் குண்டம்மாவெ பாத்துட்டே, அந்த பாடல் பாருங்க செமெ காமடியா இருக்கும்..!)
நாங்களும் சொல்லுமோம்லெ….. என்றபடி கம்பர் வந்தார்.
சீதையம்மா அரசவைக்கு வருகிறார். நளினியெப் பாத்தே, டி ஆர் க்கு அம்புட்டு மனசுலெ வந்தா, நம்ம கம்பருக்கு பில்டப் செய்ய வராதா என்ன? கம்பர் சொல்றார். (உங்களை இராமனாக கற்பனை செய்து கொண்டு சீதையைப் பார்க்கவும்.) சீதைப் பெண், பொன் மாதிரி மின்றாகளாம்; குளிர்ச்சியாவும் இருக்காகளாம்; மின்னல் போல் ஒளி பரவுதாம்; பூவின் மணமும் வருதாம் (வெறி என்ற சொல்லுக்கு மணம் என்ற பொருள் இருப்பது கம்பர் சொல்லித்தான் தெரிய வருது). அன்னம், தேவலோக மகளிர், அமிழ்தம் எல்லாமே சீதைக்கு முன் நிக்க முடியாமே ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டாகளாம். யப்பா… முடியலெ.. அப்படியே பாட்டும் பாருங்க.
இதோ பாடல்.
பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் நிழல் அன்னவள் தன் மேனி ஒளி மான,
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.
[பால காண்டம், கோலம் காண் படலம்]
[அந்தச் சீதை, தன் உடலில் எழும் பொலிவுக்கு பொன்னின் ஒளியையும், பூவின் மணத்தையும், சந்தனத்துக் குளிர்ச்சியையும், மின்னலின் அழகையும் ஒப்புச் சொல்லுமாறு , (தன் நடைக்குத் தோற்று) அன்னப் பறவையும், (தன் அழகுக்குத் தோற்று) தேவலோகப் பெண்டிரும், (தன் இனிமைக்குத் தோற்று) அரிய தேவ அமுதமும் வெட்கமுறுமாறு அரசவையில் அமைந்திருந்த மணி மண்டபம் அடைந்தாள்]
கம்பனிடம் நாம் கற்கும் இன்றைய அணிப்பாடம் ”ஒப்புமைக் கூட்ட அணி”. இதெ உடனிலைச் சொல்லணி என்றும் சொல்லுவாக. ஒண்ணெச் சொல்ல வரும் போது, அதன் குணத்தை வச்சி ஓவரா பில்டப் அல்லது பில்டவுன் செய்வது தான் இந்தக் கலை.
ஓவரா பிலடப் செஞ்சாக்கா, புகழ் ஒப்புமைக் கூட்ட அணியாம்.
இதையே உல்டாவா செஞ்சாக்கா, அதாவது ஓவரா பில்டவுன் செய்தால், அது பழிப்பு ஒப்புமைக் கூட்ட அணியாம். (இந்தப் பதிவில் சொல்லிய எல்லாமும் இந்த வகை அணிப் பாடல்கள்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?)
பின் குறிப்பு: கம்பனின் இப்பாடலை கண்ணில் கொண்டு வரும் விதமாய் அருமையான் குரலில், இனிய இசையில், நல்ல காட்சிகளோடு (இங்கும் புகழ் போபுமைக் காட்ட அணி வருதோ?) பாடல் யூ டியூபில் உள்ளது. இந்த அதை இந்த லிங்கில் சொடுக்கி கேட்டு இன்புறவும்.
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்