வைரம் பாய்ந்த கட்டை


கற்போம் கம்பனில் – 7
(16-10-2019)

இதுவோ அதுவோ என்று ஒரு பாட்டு செமெ ஹை பிட்சில் மேடையில் பாடுவாக. (காலை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர் மல்க SPB முன்னாடியும் பாடுவர் சின்னத்திரையில்). எதையாவது பாத்தாக்கா, சிலருக்கு வேறு ஏதாவது தோணும். சமீபத்தில் முதலையெப் பாக்க சென்னைக்குப் போனேன். அந்தமானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முதலைத் தாக்குதலில் இருந்து காப்பாத்தும் ஒரு நல்ல முயற்சி தான். இலவச இணைப்பாக சிங்கம் புலிகளையும் காட்டினார்கள். சிங்கம் புலிகளை விட சுவாரஸ்யமாக, அதனைப் பார்க்க வந்தவர்கள் அடிக்கும் கமெண்ட் தான் செமெயா இருந்தது. எதையாவது பாத்தா அதெப்பெடி இவங்களுக்கு மட்டும் சட்டுன்னு வேறு நெனெப்பு வருது?

சிறுத்தெ அது பாட்டுக்கு (அது ஏன் நடுவுலெ பாட்டு?) கெடக்கு. நம்மாளு கமெண்ட் பாருங்க. ’ஆமா… பயோமெட்ரிக், GST, டார்கெட் இப்படி எந்த கவலையும் இல்லாமெ எப்புடி தூங்குது பாருங்க? வேட்டையாடவும் வேண்டியதில்லெ. மணியடிக்காமலேயே சோறு கெடைக்கும்.’ இதாவது பரவாயில்லை. இன்னொன்னு சிந்திக்க வைத்தது. ‘பாத்தா அசப்பிலெ, தமிழ்நாட்டு சிறுத்தையா தான் இருக்கணும். அஞ்சு ரூபாவில் அம்மா உணவகத்தின் தீனி. மதியம் கோயில் அன்னதான சோறு, அப்பப்போ மொட்டெ மாடியில் ஏறி யாருக்காவது எதுக்காவது கருப்புக் கொடி காட்டும் சோம்பேறி இனமா போயிட்த்தோ இது?’

இப்படி யோசிப்பது நம்ம பரம்பரையிலேயே வந்திருக்கணும். இல்லாட்டி பாம்பையும் எள்ளையும் சேத்து வச்சி யோசிக்க முடியுமா? (ஒரு வேளை மனைவி எள்ளுருண்டை கீது செஞ்சி குடுத்திருப்பாகளோ?) காளமேகப் புலவரின் கற்பனை இது. (புலவர்களுக்கே இந்தக் கதி என்றால்…?)
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்

மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளனவே யோது.

படமெடுத்து ஆடியபின் குடத்துள் போயிடுமாம், சத்தம் போடுமாம் செக்காடிய பின் எடுத்த எண்ணெயைக் குடத்தில் ஊற்றுவர். அங்கும் சத்தம் இருக்கும். (ஆமா இன்றைய இளைய தலைமுறைக்கு செக்கு என்றால் புரியுமா? செக் புக் மட்டும் தான் தெரியும்) ஆக எள்ளுக்கும் பாம்புக்கும் முடிச்சுப் போட்றார் காளமேகம்.

இன்னொரு புலவனுக்கோ, மண்டெயெச் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்க, சோழன் ஞாபகம் வந்ததாம். (நம்ம கவிஞர் வாலிக்கு எதெப் பாத்தாலும் ஏதோ ஞாபகம் வந்த மாதிரி)

செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் – பொங்குஉதயத்து
ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும்
நீர்ஆழி நீள்நிலத்து மேல்

சூரியனாகப்பட்டது கடல்நீர் சூழ்ந்த பூமி மீது, தன்னோட சிவப்புக் கதிரால் இருட்டை விரட்டுதாம். தாமரையெப் பாத்து சைட் அடிப்பது போல் லேசா மேலே வருதாம். ஒத்தெச் சக்கரம் வச்சிகினு இன்னா சுத்து சுத்துறான் பாரு நம்ம சூரியன்; இப்படி ஒரு அர்த்தம். அப்படியே சோழனுக்கு சூட் ஆகும் பாருங்களேன். எப்புடி? சொல்லுவோம்லெ…

எம் ஜி ஆர் மாதிரி கொடுத்துச் சிவந்த கரம். அந்தக் கையால் வறுமை எனும் இருட்டை விரட்றாராம். லெட்சுமி தாமரை பூவிலெ சம்மணம் போட, வரி வசூல் செமெயா நடக்குதாம். அட அந்த சக்கரம், ஆணைச் சக்கரமா படுதாம். உலகத்தாரால் விரும்பப்படும் இயல்பு உடையவன்; சான்றோர் வகுத்த உயர்ந்த ஒழுக்க நெறியில் நடப்பவன்’ இப்படி மானே, தேனே எல்லாம் சேத்துக்கிடலாம். சூப்பரில்லெ!!

புற400 பக்கம் போனா, அங்கே கோவூர்கிழார் ஒரு பிட்டுப்போடுகிறார். “செல்வை ஆயின் செல்வை ஆகுவை” என்கிறார். “செல்வை’ என்பது “செல்லுதல்’ என்றும், “செல்வத்தை’யும் குறிக்குமாம் என விளக்கம் தாரார். எப்படி பிட்டு? இன்னொரு மாங்குடி கிழாரோ (கிழவரா என்ற குறிப்பு இல்லை) கடற்கரையில் உக்காந்து சைட் அடித்து பாடுகிறார். கேட்டா, “முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்” என்கிறார். நுங்குநீர், கருப்பின் நீர் (சாறு நானுங்க), இளநீரும் சேத்து சாப்டாகளாம். அதான் முந்நீராம். அப்படிச் சாப்பிட்டு சூப்பரா குளிக்கும் போது (டூ பீஸா என்ற விபரமும் இல்லீங்கோ) அவர்கள் “முந்நீர் எனப் பெயர்பெற்றக் கடலில் தான் குளிச்சாகலாம். செமெ லொகேசன் தான் போங்க.

’தென்றல் வந்து முத்தமிடும்…’ என்ற இப்போதைய பாட்டை ஒட்டி ஐங்குறுநூறில் ஒரு பாட்டு இருக்கு. ”மாலை வந்தன்று, மன்ற காலை யன்ன காலை முந்துறுத்தே” “காலை’ என்றால் காற்று என்பதும், எமன் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும். (பீரில் எத்தனை வகை எனக் கேட்டால் டான் டான் என பதில் வருமே!).

சினிமா பாட்டு பத்தி சொல்லாமெ போனா நல்லாவா இருக்கும்? ’சக்கரை நிலவே பெண் நிலவே…’ பாடலில் வருமே…, அதில் காதல் & கடவுளை முடிச்சு போட்டதெப் பாருங்களேன்.

“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல*
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை… “

சரீ… இம்புட்டு சமாச்சாரமெல்லாம் எதுக்கு?

சும்மா செம்மொழிச் சிலேடையணி பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக் கிடலாம்ணு தான். ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தந்தால் அது செம்மொழிச் சிலேடையாம். எல்லாம் சரிதானா? என திரும்ப ஒரு எட்டு படிச்சிப் பாத்துகிடுங்க.

கம்பர் பாட்டு மட்டும் போடலைன்னா, அவரு தொலெச்சிப் புடுவார் தொலெச்சி. வீடியோ காலில் கூப்பிட்டேன். வாட்ஸப்பில் தகவல் வந்தது. பாடல் பற்றிய குறிப்பு. மரத்தைப் பற்றி வைரமுத்து ரேஞ்சில் ஏதோ இருக்குண்ணு பாத்தா, மரத்தையும் வாலி சுக்ரீவன் ரிலேசனையும் சொல்லிட்டு நடையெக் கட்டிவிட்டார் கம்பர்.

இதோ பாடல்.

வள்ளல் இந்திரன் மைந்தற்கும், தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என, ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய;
தெள்ளுநீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண்படம் குடைந்து கீழ் கொகிய வேர.

[கிட்கிந்தா காண்டம், துந்துபிப் படலம்]

[வள்ளலாகிய இந்திரன் மன்னனாகிய வாலிக்கும் அவன் தம்பி சுக்ரீவனுக்கும், பகைமை முற்றிய மனம் போல அம்மரங்கள் ஒன்றைவிட மற்றொன்று உள்ளே வயிரம் பாய்ந்தவை. தெளிவான நீரையுடைய கடலினிடையே தங்கிய பூமியைச் சுமக்கின்ற ஆதி சேடன் என்னும் பாம்பின் வெள்ளி போன்ற வெண்மையான படத்தை துளைத்துக் கொண்டு கீழே ஊன்றிச் சென்ற வேர்களை உடையன.]

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s