கற்போம் கம்பனில் – 6
(08-10-2019)
என்ன தான் கணக்குப் பாடம் படித்து அதிக மதிப்பென் வாங்கி, பொறியியல் சீட் சிரமப்பட்டு வாங்கி இருந்தாலும் (அந்தக்காலக் கதைங்க) இந்த ’மைனஸ் X மைனஸ் = ப்ளஸ்’ என்பதை ஏத்துக்க முடியலைங்க. அதெப்படி இரு அதள பாதளங்கள் பெருக்கி, மலையாகும்? கணக்குப் பாடம் சொல்லித் தராத வித்தையினை வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. உயரம் அதிகம் என்ற மைன்ஸ் தான் அமிதாப் என்ற லம்பூவை, உயர்ந்த மனிதனாக்கியது. உயரம் போதவில்லை என்ற மைன்ஸ், கலாமை ராணுவத்தில் சேரவிடாமல் சதி செய்து, பின்னர் முப்படைகளே சலாம் செய்ய வைத்தது மிகப்பெரிய ப்ள்ஸ் தானே.
கொஞ்சம் முன்னாடி போய் பாத்தா அங்கே மாணிக்கவாசகர் பயந்துட்டு நிக்கிறார். குதிரைப்படை வாங்கப் போனவர் ஏதாவது ஊழலில் மாட்டினாரோ என்ற அச்சம் தான் வரும். அவரோ விளக்கம் சொல்றார் பாருங்க. கொடும் வேல் பாத்தாலும் பயமா இல்லையாம். பெண்களின் கடைக்கண் பார்வைக்கும் பயப்பட மாட்டாராம். இரண்டு மைனஸுக்குப் பின் சூப்பர் ப்ளஸ் தருகிறார். சிவனின் அருளை பருகாத ஆளெப் பாத்தா பயம்மா கீது என்கிறார் தன் திருவாசகத்தில்.
வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்,
என்பெல்லாம் உருகநோக்கி அம்பலத்துஆடுகின்ற
என்பொலாமணியை ஏத்தி இனிதுஅருள் பருகமாட்டா
அன்புஇலாதவரைக் கண்டால் அம்ம, நாம் அஞ்சுமாறே.
ஒரே மாதிரி இருக்கும் ஆனா கிளைமாக்ஸில் கொஞ்சம் வித்தியாசமா காட்டும் கலை தான் நம்ம மாணிக்கவாசகர் செய்தது. வள்ளுவர் மட்டும் செய்ய மாட்டாரா என்ன? தீயினால் சுட்றாய்ங்க. நாக்கினாலும் சுட்ற மாதிரி பேசுறாய்ங்க. ரெண்டும் சுடும். ஆனா ரெண்டாவது ஆறவே ஆறாது, என நாம ரெண்டாம் கிளாஸ்லேயே படிச்சிருக்கோமே.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
ரெண்டடியார் இப்படிச் சொல்லிட்டா, அப்பொ நாலடியார் எப்படிச் சொல்றார் என்றும் பாக்கலாமே..? அவர் பார்வைக்கு திங்களும் (அட நம்ம நிலாங்க) சான்றோரும் தென்பட்றாய்ங்க. ரெண்டுமே அழகான இடத்திலெ இருப்பாகளாம். உயர்ந்த இடத்திலும் இருப்பாகளாம். ஆனா ஒரு விஷயத்தில் ஒத்துப் போக மாட்டாக. அதாவது நிலா களங்கத்தை வைத்திருக்கும். சான்றோர் அப்படி இல்லை. தனக்கு ஒரு களங்கம் வந்தா, உசுரையே உட்ருவாகளாம்.
அங்கண்
விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும்
ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர்
அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசுறின்’
லேசா நவீன காலத்துக்கு வருவோம். ஏடும் எழுத்தாணியும் வச்சிகிணு ஏகமா எழுதிக் குவிச்சாய்ங்க நம் மூதாதையர். இப்பொ என்னடான்னா, பெத்த அம்மாவுக்கு கடுதாசி எழுதவே நேரமில்லை. நொந்து போன ஒரு அம்மா தன் மகனுக்கு எழுதிய லேட்டஸ்ட் கவிதை பாருங்களேன்…
”… மகனே…நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில் நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில் தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒருநாள்…
நீ ஈமெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்.
இறுதிப் பயணத்தில் நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை எங்கள் கடைசி மஞ்சமாகும்!….”
தென்னையையும் பிள்ளையையும் ஒண்ணு போலக் காட்டி புள்ளை கடைசியில் கழட்டி விட்ட சோகம் பாத்தீயளா?
‘என்ன கிட்டப்பனே, இன்னெக்கி ஏதோ வேற்றுமை அணி சொல்ல வந்த மாதிரி இருக்கே! நம்ம கிட்டேயும் ஒரு சரக்கு இருக்கே! தரட்டுமா?’ கம்பர் விசாரித்தார்.
’ஐயனே.. இந்த மாதிரி அணியிலெழுதணும்னு யோசிச்சி எல்லாமா எழுதுவீங்க?’ தெரிஞ்சிக்கக் கேட்டேன் நான்.
‘அதெல்லாம் எழுதும் போது கற்பனை தன்னாலெ ஒரு ஃப்ளோவில் வரும். அப்புறம் மானே, தேனே என்று போட்டுக்க வேண்டியது தான். பிற்காலத்தில் வாரவங்க அவங்க பாணியில் வியக்யானம் செய்வாய்ங்க. உன்னெயெ மாதிரி வம்பர்கள் கையிலும் அகப்பட்டு தலை உருளும்; சரி இப்பொ நேரே கிட்கிட்ந்தா காண்டத்துக்குப் போனா, உனக்கு வேண்டிய பாட்டு கிடைக்கும்.’
போனேன். கிடைத்தது.
படர்ந்த நீள் நெடுந் தலை பரப்பி, மீது
அடர்ந்த பாரம் வந்து உற, அனந்தனும்
கிடந்து தாங்கும் இக்கிரியை மேயினான்,
நடந்து தாங்கும், இப் புவனம், நாள் எலாம்.
[கிட்கிந்தா காண்டம், நட்புக் கோட் படலம்]
[ஆதிசேடனும், ஆயிரமாகப் படர்ந்த நீண்ட பெரிய தலைகளைப் பரப்பிக் கொண்டு அத் தலைகளின் மேலே, நெருங்கிப் பாரம் மிகுதியாகப் பொருந்தி இருக்க, (நின்று தாங்க முடியாமல்) கீழே கிடந்து இப்பூமியை நாளெல்லாம் (எக்காலத்தும்) தாங்குவான், இந்தக் கிட்கிந்தை மலையில் வாழும் வாலியோ, நடந்து கொண்டே இப்பூமியைத் தாங்கும் ஆற்றல் உடையவன்.]
ஆதிசேடனும் வாலியும் பூமியைத் தூக்கும் ஆட்கள் போன்ற பலசாலிகள். ஆயிரம் தலெ வச்சி கஷ்டப்பட்டு தூக்கும் இறைவன் எங்கே, நம்ம இஷ்டப்பட்டு நடந்திட்டே ரஜினி ஸ்டைலில் தூக்கும் வாலி எங்கே! சூப்பர் கிளைமாக்ஸ் இல்லெ. அப்படியே இன்றைய அணிப்பாடமும் படிச்சிடுங்க.
வேற்றுமையணி:
செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிய பின்னர், அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாகும்.
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்
நன்றி நன்றி