அம்மாவாசையும் அப்துல்காதரும்
கற்போம் கம்பனில் – 5
(02-10-2019)
சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டோ, செய்து கொண்டோ (சமந்தாவைப் பார்த்துக் கொண்டோ) இருப்பவர்களை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பேர்வழிகள் என்று அன்போடு அழைப்பர். அண்டப்புளுகு, ஆகாசப் புளுகுனிகள் என அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரும் உண்டு. ஆனா இலக்கிய வட்டத்தில் இத்தகைய புளுகுவோர்க்குத் தான் அதிக மவுசு. எவ்வளவு அதிகம் புளுகுகிறார்களோ, அம்புட்டு மருவாதெ அவுகளுக்கு.
நம்ம பங்குக்கு இப்படி புளுகிய மாமன்னர்களை ஒரு பார்வை பார்ப்போம். ’கடலோரம் வாங்கிய காத்து’ என்று பாட்டுப் பாடாமல் பீச்சுப் பக்கம் காத்து வாங்கப் போகிறார் திருவாளர் புகழேந்தி. (காத்து வாங்கப் போனால் கவிதையும் வாங்க முடியும் என வாத்தியாருக்கு முன்பு, அன்றே சொன்னவர் அவர்) என் கல்லூரி நண்பன் முரளி போல், அவருக்கும் நண்டு மேல் இரு கண்கள். (பின்னே, கல்லூரி விட்டுப் பிரியும் போது, ஆட்டோகிராஃபில் என்றைக்காவது ஒரு நாள் உன் நண்டுக்கறி சாப்பிடுவேன் என முரளியை விட்டா, யாரால் எழுத முடியும்?)
புகழேந்திப் புலவரும், நண்டு வேகமாப் போகுதே? காரணம் தெரியுமா? சொல்கிறார். சமைக்கத் தெரியாத ஆட்கள் மனைவியை விட்டு ஓட யோசிக்கணும். நளபாகமா சமைக்கத் தெரிஞ்ச நளன் ஓடுவதெக் கேக்கவா வேணும்? ஆனா அந்தப் பரிதாபக் காட்சியெப் பாக்கக் கூடாதென நண்டு ஓடிப் போச்சாம். வாரேவ்வா… கற்பனை எப்புடி போகுது பாத்தீயளா?
பாதகனை
பார்க்கப் படாதேன்றோ – நாதம்
அழிக்கின்ற ஆழிவாய்
ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ
உரை. (நளவெண்பா)
எப்போவாவது ஒரு கோவில் குளத்துக்கு, ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்து, அதில் லைட்டே வராதபடி பேரு போடும் ஆட்களெப் பாத்திருப்பீங்க. ஆனா 2700 பாட்டு மொத்தமா எழுதி, எழுதின ஆளு யாருண்ணே தெரிமல் வச்சிருந்தா, அது தான் தி கிரேட் முத்தொள்ளாயிரம் ஆசிரியர். சும்மாவா ஐநாவில் தமிழ் பாடல் பாடிட முடியும் நம் பிரதமரால்? (2.7K மாதிரி, மூன்று தொள்ளாயிரம் 3 X900 = 2700) இதில் வரும் ஓர் அலம்பல் காட்சி பாக்கலாம்.. சோழன் யானைப் படை வச்சிருக்காரு. (ஆமா அந்த சொப்ன சுந்தரீ…?) அது பூமியெக் கூட சுமக்குமாம். (ஆங்கிலேய ஹெர்குலிஸ் கணக்கா) எதிரிப் படெயெப் பந்தாடுதாம், மேலே இருந்து வேடிக்கை பாத்த நிலவு பயந்து போய் மறெஞ்சி போச்சாம். என்ன ஒரு புருடா? இலக்கியத்தில் இதெல்லாம் சகஜமப்பா…
மண்படுதோள்
கிள்ளி மதயானை, மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால், – விண்படர்ந்து
பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று.
இப்பொல்லாம் ஹோட்டல்களிலும் சரி, வீடுகளிலும் சரி, ஒரு கை சாப்பாட்டிலும், இன்னொரு கை ஐ ஃபோனிலும் இருக்கும். (அப்பாடா என்னிடம் ஐ ஃபோன் இருப்பதை ஒருவழியா சொல்லியாச்சி) கை வேணும்னா, இப்படி ரெண்டு வேலை செய்யலாம். ஆனா ரெண்டு கண்ணு இருந்தாலும், அது ஒரே வேலை தான் செய்யும். ஆனா நம்ம ஐயன் வள்ளுவனுக்கு அது வேறெ மாதிரி படுது. இவளுடைய மை போட்ட கண்களுக்கு இருவகையான பார்வைத் தன்மைகள் இருக்காம். ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும். ஐயோ ஐயோ.. ஐயனே.. என்ன ஒரு கற்பனை? ஐயனே எங்கோ போயிட்டீங்க. இப்பொ, எந்தக் கண்ணெப் பாத்தாலும் எனக்கு இப்பொ ரெண்டு ரெண்டா தெரியுதே? (சே…இப்படி புலம்ப விட்டீங்களே)
இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒருநோக்கு
நோய் நோக்கொன் றந்நோய் மருந்து!
நம்ம சினிமா கவிஞர்கள் மட்டும் லேசுப்பட்ட ஆட்களா என்ன? கண்ணெப் பாக்கிறாங்க (இவங்களுமா….?) இமை மூடி மூடித் திறக்குது. (அந்தமானில் பேராசிரியர் வணிதா மேடத்தின் மகள் ருத்ர தாண்டவ நாட்டியம் ஆடும் போது, பாத்தாக்கா கண் இமைப்பதே இல்லை. எப்படி? எனக் கேட்டேன். சிவனருள் என்கிறார்கள். ஓர் அடி பின்னால் வந்து வணக்கம் சொல்லி நகர்ந்தேன்) நம்ம சினிமா கவிஞர்களுக்கோ, ”மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன” ஏதோ பாரு பாரு என கூப்பிட்ற மாதிரி இருக்காம். சும்மா சொல்லக்கூடாது. செமெ கற்பனை தான். (உங்களுக்கு Bar Bar என பார் பார் (அப்பப்போ) ஞாபகம் வந்தா நான் என்ன் செய்ய முடியும்?) .
”அடெ நாமலும் சொல்லுவோம்லெ…” என்றபடி கம்பர் வந்தார். அந்தமானில் சுனாமி வந்திருக்கும் போது, எல்லாரும் பாத்திருப்பீங்களே? மத்தவங்க தசாவதாரம் படத்தில் பாத்ததை ஞாபகம் வச்சிகிடுங்களேன். போருக்கு எழும் படை சுனாமி மாதிரி வருது. செமெயா இல்லே…? சுனாமிப் பேரலை சாதாரணமா வருது. ஆனா நம்ம கண்ணுக்கு அதெப் பாத்தாக்கா, படை எழுவது போல் இருக்கு. என்னம்மா கண்ணுகளா.. பாட்டு வேணுமா?” குடுத்து மறைந்தார் கம்பர். நமக்கு அவரு டிகிரி தோஸ்த்துங்கோ…
போர்ப் பெரும் பணை ‘பொம்’ என் முழக்கமா,
நீர்த்தரங்கம் நெடுந் தடந் தோள்களா,
ஆர்த்தது எழுந்தது – இறுதியில், ஆர் கலிக்
கார்க் கருங்கடல் கால் கிளர்ந்தென்னவே
[ஆரணிய காண்டம், கரன் வதைப் படலம்]
[போரினைத் தெரிவிக்கும் பெரிய முரசுகளின் ஓசை பொம்மென்று ஒலிக்கின்ற ஆரவாரமாக இருக்க; கடல் நீரிலுள்ள அலைகளாக நீண்ட பெரிய தோள்கள் இருக்க, முடிவே இல்லாத ஆரவாரத்தையும் மேகம் போன்ற கரு நிறத்தையுமுடைய கடல் ஊழிக்காற்றினால் பொங்கி மேலெழுந்தார்ப் போல் (அரக்கர் சேனை) ஆரவாரம் செய்து கொண்டு (போருக்கு) எழுந்தது]
இனி இலேசாக்
கம்பனில் நாம் இன்று கற்க
இருக்கும் அணிப்பாடம் காணலாம்:
தற்குறிப்பேற்றஅணி
இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவது தற்குறிப்பேற்ற அணி.
நண்டு நகர்வது, நிலவு தேய்வது, பார்வையும், இமைகள் மூடித்திறப்பதும், சுனாமி வருவதும் இயற்கையான இயல்பான நிகழ்வுகள். அதை புகழேந்தியும், முத்தொள்ளாயிரத்து பெயர் பதியாப் புலவரும், வள்ளுவன், சினிமாக் கவிஞன், கம்பன் என எப்படி தன் கவித்திறனை அதோடு ஏற்றிச் சொன்னார்கள் பார்த்தீர்களா? சுவை கூடுவதில் வியப்பென்ன?
நம்மாளுக பிரிச்சி மேய்வதில் கில்லாடிகள். தற்குறிப்பேற்ற அணியிலும் ரெண்டு வகை இருக்காம். அசையும் சொத்து அசையா சொத்து கேள்விப்பட்டிருப்பீங்க. அதே மாடலில் அணியையும் சொல்றாக.
பெயர்பொருள்
அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டி, நூ. 56)
(பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)
நேற்று அனிட்கோவில்
(அந்தமானின் டாஸ்மாக்) செம்மெயா கூட்டம்;
இன்று காந்தி ஜெயந்தி
இது எந்த அணியில் வரும் என்பது எனக்குப் புரியலை..
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.