கற்போம் கம்பனில் – 2
(20-09-2019)
’இங்கெ அடிச்சா அங்கே வலிக்கும்’ – இது அடிக்கடி படத்தில் கேட்டுப் பழகி இருக்கும் டயலாக். இது என்ன புதுக்கதை? இங்கே அடிச்சா இங்கே தானே வலிக்கும்? அங்கே எப்படி வலிக்கும்? விஜய்காந்த்துக்கு நல்ல பேரு வாங்கி(?)க் கொடுத்த படங்களில் ரமணாவும் ஒன்று. (இரமணா என்று தானே டைட்டில் தமிழில் வச்சிருக்கணும்னு ஏன், பீச்சில் போய் தமிழ்ப் போராளிகள் அப்பொ உக்காரலை?) அந்தப் படத்தில் ஒரு சர்தார் தமிழர்களை ‘செண்டிமெண்டல் இடியட்ஸ்’ எனத் திட்டிக்கொண்டிருப்பார். இதுக்கு என்ன தான் மீனிங்கு? என கூகுள்கிட்டே கேட்டா…., இங்கிலீஸ்லே இருக்கும் அம்புட்டு குழப்பமான வார்த்தைகளையும் சேர்த்து குழப்புது. சுருக்கமா சொன்னா, கூட்டத்தோடு கோவிந்தா (புரட்டாசி மாதத்துக்கு ஏதுவா) போடும் ஆட்கள் என வச்சிக்கலாம். ஆனா அந்த சர்தார் ஏதோ சொல்ல வருகிறார் என்பது தான் நம்மை யோசிக்க வைக்குது.
சின்ன ஸ்கூல்லெ படிக்கிறச்செ, ஹெர்குலிஸ் பத்தி படிச்சோம் (அது ஏதோ சைக்கிள் கம்பெனி, என ஞாபகம் வருதா உங்களுக்கு? வாழ்த்துக்கள் சீக்கிரம் வர இருக்கும், அறுபதாம் கல்யாண வைபவத்திற்கு. ) அந்த ஹெர்குலிஸ் தலை மேலே உலகத்தையே சுமப்பவராம். (இதெல்லாம் நம்புவாய்ங்க… கிருஷ்ணன் வாய்லெ, வீடியோ கால் பாருங்கண்னா நம்ப மாட்டாய்ங்க) ஆனா அந்த சுமை சுமந்தாலும், ஒரு வெட்டுக்கிளி கூடுதல் வச்சாக்கா, கொலாப்ஸ் ஆயிடுவாராம் அந்த உலகம் சுமக்கும் பயில்வான். என்னமோ வேறு மெஸேஜ் சொல்ல வார மாதிரி இருக்கோ?
வாங்க நைஸா வள்ளுவர் கிட்டே போவோம். அவரு தான் எல்லாவிதமான வில்லங்கமான மேட்டருக்கும் பதில் வசிருப்பார். அவரு சொல்றாரு,
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்!
இங்கிலீஸ்காரன் வெட்டுக்கிளி வெயிட்டு தாங்காதவன். ஆனா நம்மாளுக்கு ஒரு மயிலிறகு போதும், ஆளைக் கவுக்க என்கிறார் வள்ளுவர். அவரு என்ன சொல்ல வந்தார் என்பது வள்ளுவருக்கு மட்டும் தான் (வாசுகிக்கும் கூட) தெரியும். ஆனா தமிழக அரசு, இந்த குறளுக்கு சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? மூட்டை முடிச்சைக் குறையுங்கள்; வண்டிப்பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள்; வாழ்க்கைப் பயணம் சுகமாகும். எதையோ சொல்லி, ஏதேதோ அரத்தம் வருதோ?
ரெண்டடி பாடி வச்ச வள்ளுவர் கிட்டெ ரெண்டாவது குறளைக் கேட்டேன். அவரும் குடுத்தார்:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்!
என்னதான் எலிகள் எல்லாம் ஒண்ணுகூடி கடல்மாதிரி கூப்பாடு போட்டாலும், பாம்பு மூச்சு உட்டா புஸ்ஸுன்னு அடங்கிடும். இது வள்ளுவர் சொன்னதுங்க. உங்க மனசுலெ கவர்னர் சந்திப்பு & போராட்டம் வாபஸ் எல்லாம் ஞாபகம் வந்தா, அதுக்கு நானா பொறுப்பு? ஒண்ணு மட்டும் நிச்சயம். ஏதோ படிச்சா, என்னமோ வேறு ஒரு ரோசனை வரும். வரணும். வருதே! அதான் தமிழ்..
இப்பொல்லாம் பொதுப் பிரச்சினைக்கு கருத்து கேட்க நேரெ நடிகர் சூர்யாகிட்டெ மைக் எடுத்துப் போயிட்றாங்க. நானும் மைக் நீட்டினேன்; அவரு இந்த மாதிரியான சாதாரண மேட்டர் எல்லாம் அப்ப சிவகுமார் கிட்டே கேளுங்க; கல்வி பாலிஸி மேட்டர் தான் நான் டீல் செய்றேன் என்றார்.
கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் ஜாலியா….
’உச்சி வகிர்ந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி
பச்சைமலைத் தோட்டத்திலே மேயுதென்று சொன்னாங்க’
பாடிகிட்டு இருந்தார். கம்பன் பாடல்களே 500 க்கு மேல் மனப்பாடமா தெரிஞ்சி வச்சிருக்கும் நபர், அவர் படத்துப் பாட்டு பாட கேக்கவா வேணும். ஆனா வெளங்கிடுச்சி அந்தப் பாட்டோட அர்த்தம் எனக்கு. வெளிப் பார்வைக்கு ஒரு மெட்டு போட்டு பாட்றார். ஆனா அந்தத் ’தீபா’ மேட்டர் மட்டும், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் பாத்தவங்களுக்கே புரியும். (ஏன் தான் நாம வெர்டினரி டாக்டர் படிக்காமெ, கிராமத்து போஸ்டிங் போகாமெ போனோம் என்ற ஏக்கமும் வயசான காலத்திலெ வந்து தொலைக்குது); பசு தான் மேயும். கிளி மேயாது. அந்தப் படத்திலெ, மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்து, மனைவி எனச் சொல்லாமலேயே, “கிளி ஊர் முழுக்க மேய்கிறது” என்று பாடுவதும் கொஞ்சம் பாத்தீங்களா? சொல்ல வருவது ஏதோ… ஆனா சொன்னது ஏதோ…
’பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு, மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ ஜாலியா பாட்டு பாடியபடி கம்பர் வந்தார். உன்னோட மேட்டருக்கு மேட்சா ‘கால் வண்ணம், கை வண்ணம்’ பத்தி ஒரு பாட்டு போட்டிருக்கேன். ஆனா அதன் பொருள் என்ன என மேலும் விபரங்களுக்கு, வை மு கோவை அணுகவும் – சொல்லி மறைந்தார் கம்பர்.
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத தரக்கி போரில் மழை வண்ணத் தண்ணலே உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்
[பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம்]
[இந்த விதம் நிகழ்ந்தது போல் இனி இந்த உலகுக்கெல்லாம் ஈடேறும் வழி உன்னை அல்லாமல் வேறு ஓர் துன்பத்தின் வழியை அடைவது சரியோ மையைப் போன்ற கரிய நிறமுடைய அரக்கியோடு செய்த போரில் மேகம் போன்ற கரிய நிறமுடைய இராமனே உன் கையின் திறமையை அந்தப் போரில் கண்டேன் உன் காலின் திறமையை இங்குக் கண்டேன்]
இந்தப் பாட்டிலும் தாடகை, அகலிகை பத்தி எல்லாம் சொல்லாமெ சொன்னது தாங்க நானு இப்பொ சொல்லவரும் சேதி.
கம்பனில் கற்கும் இன்றைய அணிப்பாடம்:பிறிது மொழிதல் அணி
ஏதோ சொல்ல வந்து எதையோ நினைக்க வைக்கும் அணி இலக்கண வித்தை இது. தூய தமிழில் சொன்னா ஓட மாட்டியளே…? உவமானத்தைக் கூறி விட்டு, உவமேயத்தைக் கூறாமல் விட்டுவிடுவது.
செந்தில் பாணியில் சொல்லப்போனா, அது மாதிரியாண்ணே இது? இதுதான்ணே அது? இந்த ரெண்டும் இல்லாமல் வருவது தான் ’பிறிது மொழிதல் அணி’. இலக்கணம் என்றால் சும்மாவா என்ன?
இப்பொ அந்த ரெண்டு குறள்கள், தீபா மேட்டர் பாட்டு, கம்பனின் வண்ணம் சொன்ன பாட்டு எல்லாம் பாருங்க. ஒரே குட்டையில் ஊறிய வகைகள். எல்லாம் நம்ம ’பிறிது மொழிதல் அணி’ வகைகள்.
இப்பொ சொல்லுங்க… இலக்கணம் சொல்லித் தரும் நம்ம கை வண்ணம் எப்புடி??
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.