வம்பன் பார்வையில் கம்பன் – 100
(16-09-2019)
‘வம்பன் பார்வையில் கம்பன் -100 எங்கே?’ எனப் பலர் கேட்டதை ஒட்டி இப்பதிவு வருகிறது. ’கற்போம் கம்பன்’ கூட…. ம் ஓகே தான். ஆனா உங்க ஸ்டைல், நையாண்டி, குறும்பு, ஜனரஞ்சகம் அதெல்லாம் இல்லாமெ, ஏதோ அந்தக்காலத்து டாக்குமெண்டரி படம் மாதிரி இருக்கு’ எனவும் பலர் கருத்து தெரிவித்ததால், நமக்கு சரளமா வரும் (யார் அந்தச் சரளாவா? இப்படி கேட்கும் விசிறிகளுக்கு நான் எப்படி எழுத?) அதே ஸ்டைலில் தொடராலாம் என நினைக்கிறேன். ’தூய தமிழ் வேண்டும்’ என எதிர்பார்க்கும் தமிழ் அன்பர்கள் மன்னிக்க. (நமக்கு அது சரிப்பட்டு வராது என பெரும்பான்மையினர் முடிவு செய்த பிறகு, மறுபடியும் எஜமான் ஸ்டைலில் துண்டு எல்லாம் தூக்கிப் போட்டு… எதுக்கு அந்தப் பொல்லாப்பு?)
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிவனடியார் ஒருவர் அந்தமான் வந்திருந்தார். (இந்த மாதிரி வீணாப்போன ஏற்பாடெல்லாம் நீங்க தானே செய்வீங்க? – இப்படி என் மனைவி ரேஞ்சுக்கு ஏன் பாக்குறீங்க?) ஏர்போர்டில் கால் வைத்தவுடன் சொன்னார், இந்த மண் அடியார்களின் பாதம் அதிகம் படாத மண். இனி இது மாறும் என்றார். சிங் சிக்கா, சிக்கா சிக்கா பாடல் புகழ் சோலார் சாய் அவர்களின் சிவமயமான பாடல் யூ டியூபில் பாக்கும் போது, அந்தமானில் இப்படி ஒரு மாற்றம் வந்தால் எப்படி இருக்கும்? என நினைத்தது, இப்போது இனிதே நடந்து முடிந்தது 65 சிவனடியார்களோடு திருவாசகத் திருவிழாவில். வீட்டில் உணவும், ஏன் பேச்சும் கூட விளம்பர இடைவேளையின் போது தான் என்று ஆகிவிட்ட சூழலில், மதிய உணவு இடைவெளிகூட இன்றி இயல், இசை, நாட்டியம் என சிவலோகமாகவே ஆகிவிட்டது அன்றைய தினம்.
மாணிக்கவாசகர் தன்னை அடிக்கடி நாயை விடவும் கேவலமானவன் எனச் சொல்லிக் கொள்வார். பொல்லாத நாய் தான் போலெ என நானும் மும்பையில் வம்பு வளர்க்கப் போய், எப்படி என் குடும்ப உறுப்பினரை நாய் என்று சொல்லப் போச்சி என சண்டைக்கே வந்தார் மும்பை சத்தீஷ். (ரேசன் கார்டில் பேர் சேர்த்து, ஆதாரும் வாங்கிட்டாரோ?) நாயா அது? சிங்கம் சாமி அது. இதே கருத்தை எதிர்வீட்டில் இருந்த என் எழுத்தின் விசிறி செர்லி தனது ஜிஞ்ஜருக்காய் வக்காலத்து வாங்கினர். மாணிக்க வாசகர் காலத்து நாயின் குணம் இப்பொ மாறிவிட்டதோ?
மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். நீங்க வேறெ… ஒரு காலத்தில் கவர்மெண்ட் வேலெ…டயத்துக் போயிட்டு வந்தா போதும். (சில சமயம் போகாட்டியும் கூட) மாச சம்பளம் உத்திரவாதம். இப்படி இருந்தது இப்பொ அரசு ஊழியர் வயிற்றில் புளியெக் கரைச்சும் ஊத்துது. தினமும் பேப்பரில் வரும் செய்திக அப்படி. வேலைக்கு லாயக்கில்லாத, மத்திய அரசு ஊழியர்களை, கழுத்தெப் பிடிச்சி தள்ளுவது நாளெரு துறையும் பொழுதொரு எண்ணிக்கையுமா வந்திட்டிருக்கு. அரசு ஊழியர் நெலெமெ எப்புடி ஆச்சி பாத்தீயளா? உங்க சம்பளத்துக்கு நாங்க கியாரண்டி என்று சொல்லும் ப்ரீத்திகளைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.
மாறுதலுக்குத் தயாராக இல்லாத காரணத்தால் வீனாய்ப் போனோர் பலர். உலகம் அறிந்த ஓர் உதாரணம் நோக்கியா. அதே.. அதே.. கண்ணும் கண்ணும் நோக்கியா பாட்டு வந்ததே.. அதே நோக்கியா தான். பத்து வருடமாய் செமெய்யா கனெக்டிங் பீப்பிள் என இருந்த நோக்கியாவின் கண், ஸ்மார்ட் ஃபோன் வருவதை கவனிக்கத் தவறிவிட்டது. உலகத்தில் 60 சதவீதமானோர் கைகளில் இருந்த நோக்கியா ரெண்டே ஆண்டுகளில் 10 சதவீதமாக மாறி மஞ்சக் கடுதாசி குடுத்தது. மாற்றங்களோடு மாறலைன்னா இப்படித்தான்.
நேற்று பொறியாளர் தினம். அதன் கருப்பொருளும் இந்த மாற்றம் தொடர்பானதாய் இருந்தது. சேன்ஞ்ஜ் மேனேஜ்மெண்ட் என்று எம் பி ஏ க்களில் நிறைய்ய சொல்லித் தருகிறார்கள். உலகம் முழுதும் இருக்கும் சிக்கல் என்பதால், என்ன தான் சொல்றாய்ங்க அதில், எனத் தேடிய போது கன்பன் (Kanban’s) தியரி சிக்கியது. அதுலெ, மாற்றங்களெப் புரிஞ்சிகுங்க, அடுத்த கட்டத்துக்கு ரெடியா இருங்க. அடுத்தடுத்து தலைமைப் பண்பாளர்களை வளருங்கோ என்கிறாராம் கன்பன்.
’நாங்க சொன்னா மட்டும் எம் பி ஏ சிலபஸ்லெ வைக்க மாட்டாய்ங்க. கன்பன் சொன்னா மட்டும், எல்லாரும் படிக்கிறாய்ங்கப்பா!!’ உதயமானார் கம்பர்.
’என்ன்ய்யா கம்பரே! Change Management எல்லாம் இப்பொ வந்திருக்கும் சங்கதிகள். நீங்க என்ன சாமீ காமெடி பன்றீங்க…’ நானும் விடாமெ மல்லுக்கு நின்றேன்.
‘நீயே பாத்துக்க. அந்த பொடிப்பய கன்பன் சொன்ன மூனாவது தியரிப்படியே, அங்கதன் என்ற பொடியனை தலைமைப் பண்புள்ளவனா மாத்துன சேதி சொல்லியிருக்கேன். ஒழுங்காப் போய் படிச்சிட்டு மைக் போட்டு Engineer’s Day இலெ போய்ச் சொல்லு’
கம்பரே சொல்லிட்டா அப்புறம் ஏது அப்பீல்? பொறியாளர்தின மேடையில் அடியேன் சொன்ன சங்கதியும் அது தான்.
ராமர் பாலம் எல்லாம் போட்டாச்சி. இலங்கைக்கும் வைகோ மாதிரி அனுமதி இல்லாமல் வந்தாச்சி. பொதுக்குழு கூடி இன்னொரு, வடிவேல் ஸ்டைலில் வெள்ளைக் கொடி காட்டிப் பாக்கலாமென முடிவாகுது. யாரை அனுப்பலாம்? நம்ம அரசு ஊழியர் பாணியில் பழைய ஃபைல் பாத்தாக்கா, அனுமன் தான் போய் வந்ததவர். உடனே அனுமனுக்கு மூவ்மெண்ட் ரெடி ஆயிடுத்து. ஆர்டர் காப்பி பிரிண்ட் போடுமுன், சாப்ட் காப்பி பார்த்த இராமன், Ctr + F இல் அனுமனை தேடி, அங்கதன் பெயரால் Replace செய்கிறார்.
காரணம் என்ன தெரியுமா? இராவணன் மனசுலெ, ‘இந்த இராமன் டீம்லெ அனுமனை விட்டா ஆளே இல்லெ போலெ’ என்ற எண்ணம் வந்திடக் கூடாதாம். மாத்தி யோசீச்ச Change Management எப்புடி? இப்பொவாவது Management Guru – Kamban என்பதை ஒத்துக்கிறீங்க தானே?
வாங்க அப்புடியே, கம்பன் பாட்டையும் படிக்கலாம் வாங்க…
மாருதி இன்னம்
செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றோ
ஆர் இனி ஏகத் தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்
[யுத்த காண்டம் – அங்கதன் தூதுப்படலம்]
[”வாயுவின் மகனான அனுமன் இராவணனிடத்துத் தூதனாகச் சென்றால், பின்னர் ’இந்த அனுமனை அல்லாமல் இலங்கைக்குள் வந்து சேரும் வல்லமையுடையவர் பகைவர் பக்கம் வேறொருவர் இல்லை’ என்கின்ற எண்ணமானது, நம் பகைவர்க்கு உண்டாகும் அன்றோ! ஆதலால் மீண்டும் அனுமனை அனுப்பலாகாது. எனவே அவ்வனுமானையன்றி இலங்கையினுள் தூதனாகச் சென்று திரும்ப வல்லவர் யார்? இதற்கு அங்கதனே தக்கவன் ஆவான். அவன் பகைவர்களாகிய அரக்கர் வீரச் செயலை மிகுதியாகக் காட்டினாலும் தான் யாதொரு துன்பமும் இன்றி மீள்வதற்கு வலிமையுடையவன் ஆவான்”]
வம்பன் பார்வையில் கம்பன் முற்றும்.
(அதுக்காக ரொம்பவே சந்தோஷப்பட வேணாம். விரைவில் அன்பன் பார்வையில் கம்பன் துவங்கும்…. வம்பன் பார்வையில் 100 வரை தொடர்ந்து படித்து, பகிர்ந்து, கருத்தும் கூறி மகிழ்ந்த அனைவருக்கும் என் கைகூப்பிய நன்றி. கற்போம் கம்பனில், அது தனி டிராக் ஓடிட்டே இருக்கும்.)
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
சதகம் (century) போட்டவருக்கு பதக்கம் கொடுக்கலாம்
O.S.Subramanian,
On Wed, 18 Sep 2019 at 05:45, அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:
> Tamil Nenjan posted: ” வம்பன் பார்வையில் கம்பன் – 100 (16-09-2019) ‘வம்பன்
> பார்வையில் கம்பன் -100 எங்கே?’ எனப் பலர் கேட்டதை ஒட்டி இப்பதிவு வருகிறது.
> ’கற்போம் கம்பன்’ கூட…. ம் ஓகே தான். ஆனா உங்க ஸ்டைல், நையாண்டி, குறும்பு,
> ஜனரஞ்சகம் அதெல்லாம் இல்லாமெ, ஏதோ அந்தக்காலத்து ”
>
உங்கள் வார்த்தைகளே பதக்கங்கள் தான்