கற்போம் கம்பனில் – 1
(12-09-2019)
எஸ்பிபி அவர்கள் உருகி உருகிப் பாடிய, ‘வான் நிலா, நிலா அல்ல என் வாலிபம் நிலா…’ என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். அந்தக் காலத்தில் இலங்கை வானொலியின் மூலம் தினமும் பல இரசிகர்களால் இரசிக்கப்பட்ட பாடல் அது. நிலா, நிலா… என்றே ஒரே ஒரு வார்த்தை கொண்டு தமிழில் விளையாடிய வித்தை நம் எல்லோர்க்கும் பிடித்ததில் வியப்பேதும் இல்லை. அதனைத் தொடர்ந்து, அதே வகையில் ‘ஜெமினி ஜெமினி…’ எனவும், ‘ரண்டக்க ரண்டக்க…’ எனவும் பல பாடல்கள் வந்து போயின.
இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வருவதற்க்கு முன்பே, கருப்பு வெள்ளைப் படங்களில், இம்மாதிரிப் பாடல்களை நம் தமிழ் இரசிகப் பெருமக்கள் பச்சைக் கொடி காட்டி வரவேற்ற வரலாறும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த காய், காய் என அடிக்கடி வரும் பாடல்.
‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ…’
திருவள்ளுவர் காலத்தில் கூட இந்த மாதிரி சொல் வைத்து, அலம்பல் செய்யும் வேலை எல்லாம் நடந்திருக்கு. நம்ப முடியவில்லையா? இதைப்படிச்சிப் பாருங்க…
‘உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்’
இதில் உடைமை, உடைமை என்று அடிக்கடி (மூன்று முறை தான்) வந்ததைக் கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆமாம்… இந்தக் குறளுக்கு அர்த்தம் சொல்லலையே என்று கோபப்பட வேண்டாம். இதோ உங்களுக்கு:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
இதே குறளில் ‘உடைமை’ என்ற சொல்லானது, பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளது. இதையும் பார்த்து வையுங்கள்.
கம்பன் மட்டும் இந்த மாதிரி வார்த்தை விளையாட்டு விளையாட மாட்டாரா என்ன்? நாகம் என்ற ஒரு வார்த்தை வைத்து கம்பன் விளையாடும் சொல் விளையாட்டு பாரீர்…
”….நாகமது நாகமுற நாகமென நின்றான்…”
நாகம் என்னும் மலையானது, நாகம் வாழும் பாதாள உலகை அடையும்படி, நாகம் என்னும் யானை போல் நின்றான் – என்கிறான்.
கம்பர் இப்படி இதேபோல், சொல் விளைய்யாட்டு செய்திருக்கும் இன்னொரு பாடலையும் பார்க்கலாம் இப்போது:
தோகையர் இன்னன சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன்
நாகமும் நாகமும் நாண நடந்தான்.
மயிலைப் போன்ற மகளிர், இவை போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நல்லோரான முனிவர்கள் நல்வாழ்த்துக்கள்
கூறவும்; வானுலகம் முழுவதிலுமாக தேவர்கள் மகிழ்ச்சியடையவும்; (இராமன்) பெரிய காளையும்; பொன் மலையான மேருவும்; யானையும் வெட்கம் அடையுமாறு; (வில் இருக்கும் இடம்) சென்றான்.
இராமன் நடக்கும்போது அவனது பெருந்தோற்றம் கண்டு
மேருமலையும். இவனைப் போல மிடுக்கோடு நடக்க முடியாமை
பற்றிக் காளையும் யானையும் நாணின என்பது.
நாகம்- மலை. யானை.
எல்லம் சரி தான், கற்போம் கம்பனில் என தலைப்பு இருந்ததே? ஒன்றும்
கற்கும் பாடம் இல்லையே? என யோசிக்க வேண்டாம்.
கம்பனில் கற்கும் பாடம் இதோ வருகிறது.
அணி என்றால், அது ஏதோ இலக்கணத்தில் வரும் என்பதாய்த் தான் பலருக்கும் தெரியும். ஆனால் அணி என்றால், அழகு என்ற பொருளும் உண்டு. சொல்லுக்கும் பாடலுக்கும் அழகு சேர்ப்பது அந்த அணி.
இன்று ஒரு அணி கற்போம்.
ஒரு பாடலில் ஒரே பொருள் தரும், பல்வேறு சொற்கள் அமையப் பெறுவது பொருள் பின்வரு நிலையணி ஆகும்
நிலா நிலா பாடல் இந்த அணியில் வராது. ஏனென்றால் நிலா என்ற ஒரே பொருள்பட பலமுறை வருகின்றது.
அதன் பின்னர் பார்த்த, அந்த காய் காய் பாடலில், அத்திக்காய் தான் முக்கியம் அங்கே..
அத்திக்காய் – ஒரு காய்
அத்திக்காய் – அந்தத் திசையில்
(ஆக இப்பாடலும் பொருள் பின்வரு நிலையணியில் அடங்கும்)
வள்ளுபர் கம்பன் பாடலை சொல்லவும் வேண்டுமோ?
வள்ளுவர் பாடலில் உடைமை என்ற வார்த்தையும், கம்பர் நாகம் என்ற வார்த்தையும், வைத்து நமக்கு பொருள் பின் வரு நிலையணியைக் கற்பிக்கின்றனர்.
கம்பனில் கற்றல் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
Thanks for the article.
நன்றி